ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 ஆவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி இன்று பலப்பரீட்சை நடத்துகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. மொகாலியில் நடைபெற்ற முதல் போட்டியில், ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், 2 ஆவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்திய வீரர்கள் களம் இறங்க உள்ளனர். அதே சமயம், இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றும் எண்ணத்தில் ஆஸ்திரேலியா வீரர்கள் உள்ளதால், ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இதனிடையே ஹைதராபாத்தில் நடைபெற உள்ள மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் வாங்குவதில் ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், காவல்துறையினர் தடியடி நடத்தி ரசிகர்கள் கூட்டத்தை கலைத்தனர். இதில், பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
0 Comments