இறைச்சி, முட்டை விலை உள்ளிட்ட கால்நடை வளர்ப்பு தொடர்பான பிரச்சினைகளை கருத்திற்கொண்டு, கால்நடை தீவனம் தயாரிப்பதற்காக 25,000 மெட்ரிக் தொன் சோளம் அல்லது பொருத்தமான தானியங்களை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நேற்றையதினம் (22) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவசாய அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விலங்குணவு உற்பத்திக்காக வருடாந்தம் 600,000 மெட்ரிக் தொன் சோளம் தேவைப்படுவதுடன், தற்போது சந்தையில் சோளம் தட்டுப்பாடு நிலவுகின்றது.
2022 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் உணவு உற்பத்திக் கம்பனிகளுக்கு விலங்குணவு உற்பத்தி மூலப்பொருள் விநியோகத்தர்கள் மூலம் 225,000 மெட்ரிக்தொன் சோளம் இறக்குமதி செய்வதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருப்பினும், தற்போது நிலவுகின்ற வெளிநாட்டு செலாவணிப் பற்றாக்குறையால் யூன் மாத இறுதி வரைக்கும் 38,000 மெட்ரிக்தொன் சோளம் மாத்திரமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது உள்ளுர் சந்தையில் ஒரு கிலோ சோளம் ரூ. 220 வரை அதிகரித்துள்ளதுடன், அதனால் விலங்குணவுகளின் விலையும் அதிகரித்துள்ளது. அதற்கமைய, கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரித்துள்ளது.
கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் கோழிக் குஞ்சுகளை உற்பத்திகளை மேற்கொள்ளாமல் முட்டையை விற்பனை செய்தல் மற்றும் கோழி வளர்ப்பிலிருந்து விலகுதல் போன்றவற்றால் எதிர்காலத்தில் கால்நடை வளர்ப்புத் துறையில் பாரிய நெருக்கடிகள் ஏற்படக்கூடுமென அவதானிக்கப்பட்டுள்ளது.
அதனால், கால்நடை உற்பத்திகள் மற்றும் சுகாதார திணைக்களத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள, விலங்குணவு உற்பத்திக்குத் தேவையான சோளம் அல்லது ஏனைய பொருத்தமான தானிய வகைகளை 25,000 மெட்ரிக்தொன் இறக்குமதி செய்வதற்கு உணவு ஊக்குவிப்பு சபைக்கு அனுமதி வழங்குவதற்காக விவசாய அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 Comments