காலஞ்சென்ற பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் அரச முறையிலான இறுதிக் கிரியை வரும் செப்டெம்பர் 19ஆம் திகதி இடம்பெறும் என்று அரச அதிகாரிகள் அறிவித்துள்ள நிலையில், பிரிட்டிஷ் மன்னராக மூன்றாம் சார்ல்ஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
லண்டனில் உள்ள புனித ஜேம்ஸ் மாளிகையில் கடந்த சனிக்கிழமை (10) நடைபெற்ற விழாவிலேயே புதிய மன்னராக மூன்றாம் சார்ல்ஸ் அறிவிக்கப்பட்டார். எனினும் மன்னருக்கான பணிகளை அவர் ஏற்கனவே ஆரம்பித்திருக்கும் நிலையில் அவர் முறைப்படி மன்னராகப் பொறுப்பேற்க இன்னும் சில நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் மன்னர் சார்ல்ஸை அவற்றின் சடங்குபூர்வத் தலைவராக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன.
96 வயதான இரண்டாம் எலிசபெத்தின் மரணம் பிரிட்டனைத் தாண்டி உலகெங்கும் அனுதாப அலையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராணியின் பூதவுடன் தாங்கிய பேழை அவர் கடந்த வியாழக்கிழமை (06) அமைதியான முறையில் மரணித்த ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையின் நடன அரங்கில் வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பேழை நேற்று (11) பால்மோரலில் இருந்து கிராமங்கள், நகரங்கள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
290 கிலோமீற்றர் நீளமுள்ள அந்தப் பயணம் 6 மணிநேரத்துக்கு மேல் நீடித்தது. போகும் வழியில் மக்கள் வீதிகளில் திரண்டு மகாராணிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
எடின்பர்கில் பழைமைவாய்ந்த ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனைக்கு மகாராணியின் நல்லுடலைத் தாங்கிய பேழை செல்லும்போது மரியாதை அணிவகுப்பு இடம்பெறும்.
இன்று (12) மகாராணியின் பூதவுடலைத் தாங்கிய பேழை ரோயல் மைல் ஸ்டிரீடில் உள்ள செயின்ட் கில்ஸ் தேவாலயத்தில் ஒரு நாள் வைக்கப்பட்டிருக்கும்.
தொடர்ந்து நாளை செவ்வாய்க்கிழமை அவரது பூதவுடல் லண்டனுக்கு விமானம் வழி எடுத்துவரப்படும்.
இம்மாதம் 19ஆம் திகதி இறுதிச்சடங்கு நடைபெறுவதற்கு முன்னர் 4 நாட்களுக்கு, மகாராணியின் நல்லுடல் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் இருக்கும்.
இறுதிச்சடங்கிற்குப் பின் அவரது நல்லுடல் விண்ட்சர் அரண்மனையில் உள்ள செயின்ட் ஜோர்ஜ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்படும்.
மகாராணியின் அரச முறை இறுதிக் கிரியைகள் வரை பிரிட்டனில் தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டிருப்பதோடு அன்றைய தினத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட மகாராணியின் இறுதிக் கிரியையில் உலகத் தலைவர்கள் பலரும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோன்று லண்டனில் நடைபெறவிருக்கும் எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்கிற்காக மில்லியன் கணக்கில் மக்கள் திரள்வார்கள் என்று நம்பப்படுகிறது.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
0 Comments