வாட்ஸ்அப் செயலியில் தடையற்ற அழைப்பு அனுபவத்தை வழங்குவதற்காக கால் லிங்க் வசதி (Call Links) வழங்கப்பட உள்ளது. இந்த வாரம் அறிமுகமாகவுள்ள இந்த வசதியைப் பயன்படுத்த பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வசதி மூலம் லிங்குகளை கிளிக் செய்வதன் மூலம் பயனர்கள் வீடியோ அல்லது ஆடியோ காலில் இணைந்து விட முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வழக்கமான அழைப்புகள் (Calls) பகுதியில் இந்த லிங்க் வசதி அறிமுகமாகும் என்று தெரிவித்துள்ள வாட்ஸ்அப் நிறுவனம் நீங்கள் விரும்பும் நபர்களுக்கும் அந்த லிங்கைப் பகிர்ந்து அவர்களையும் அழைப்பில் இணையச் செய்யலாம் என்று தெரிவித்துள்ளது. ஒவ்வொரு முறையும் தேடித் தேடி அழைப்பை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும் அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
மேலும் மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் சக்கர்பர்க் ஒரே நேரத்தில் 32 பேர் வரை பங்கேற்கும் வீடியோ கால் அம்சத்தை சோதனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே வாய்ஸ் கால்களுக்கு வழங்கப்பட்டு வரும் இந்த வசதி விரைவில் வீடியோ கால்களுக்கும் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ் அப் நிறுவனம் ஆன்லைன் ஸ்டேட்டஸை மறைக்கும் வசதியை அறிமுகப்படுத்தியது. முன்பு அனைவருக்கும் தெரிவது போல (Everyone) அல்லது நமது மொபைலில் பதிவு செய்யபப்ட்டுள்ள எண்களுக்கு மட்டும் தெரிவதுபோல (My Contacts) அல்லது ஒருவருக்கு கூட தெரியாதவாறு (NoBody) மட்டுமே வைக்க இயலும்.
ஆனால் இந்த புது வசதியைப் பயன்படுத்தி குறிப்பிட்ட சில நபர்களிடம் இருந்தும் நமது ஆன்லைன் ஸ்டேட்டஸை மறைக்க இயலும். Settings > Account > Privacy > Last seen and online என்ற வசதியை கிளிக் செய்தால் நமது ஆன்லைன் ஸ்டேடஸை யார் பார்க்க வேண்டும் அல்லது யார் பார்க்கக் கூடாது என்பதை நம்மால் தீர்மானிக்க இயலும். இந்த வசதியும் அனைத்து பயனர்களுக்கும் இந்த வாரத்திற்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments