இந்தோனேஷியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமான மேற்கு பப்புவா பகுதியில் இன்று (10) காலை 6.1 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து சில நிமிடங்களுக்குப் பிறகு 5.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள், வீடுகள் குலுங்கியதில் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். எனினும், நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.
அபேபுரா நகரத்திலிருந்து 272 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கு 15 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேஷியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழமையாகி விட்டது. கடந்தாண்டு ஜனவரி மாதம் மேற்கு சுலாவேசி மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 100இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 6,500 பேர் காயம் அடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பெப்ரவரி மாதம் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 25 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
0 Comments