Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பாவமன்னிப்பின் முக்கியத்துவம்...



மனிதர்கள் பெரும்பாலும் பாவங்களைச் செய்ய விரும்பாதவர்களாகவும், பாவத்தில் ஈடுபட்டாலும் பாவம் என்று அறிந்த நிலையில் அதை செய்தவர்களாக, செய்பவர்களாக, அதை நினைத்து மனம் வருந்திடக் கூடியவர்களாக, அவற்றில் இருந்து எப்படியாவது விரைவில் விடுபட முயல்பவர்களாகவும் இருப்பது யதார்த்தமானது.

இதற்கு மாற்றமாக ஒரு சிலர் பாவங்களில் மூழ்கியும் அதை விட்டு விடுபடாமலும், அதையே தொடர்ந்த போதிலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அதை நினைத்து வருந்திடவே செய்வர்.

அவர் பாவமன்னிப்பு கேட்காமல் இருப்பினும் புத்தி சுவாதீனமுடன் இருப்பின் இதை தமது வாழ்வில் ஏதேனும் ஒரு கணமாவது நினைத்து அவர் வருந்தி பச்சாதாபப்படாமல் இருக்கவே மாட்டார்.

ஆனால் ஒருவர் தாம் செய்வது பாவம் என்று அறியாமல் அதை தொடரும் போது, அதை நன்மையென்று கருதி பலரும் செய்வதைக் காணும் போது அதை ஒரு தவறு என்று கூட கருதாமல் மார்க்கக் காரியம் எனும் அடிப்படையில் செயல்படும் போது அவர் அச்செயல்களுக்குப் பாவமன்னிப்பு கோராத நிலையில் மரணித்து விடுவது மாபெரும் கைதேசமாகும்.

இஸ்லாம் இற்றைக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அல்லாஹ்வினால் முழுமையாக்கப்பட்ட ஓர் இறைமார்க்கம்.

இது எவ்வித சேர்க்கைகளும் நீக்கங்களும் மாற்றமும் தேவையற்ற நிகரற்ற உன்னதமான இறைவழிகாட்டல். இதை அல்லாஹ் தன் அருள்மறையில், 'இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பரிபூரணமாக்கி விட்டேன்.

மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்.

இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்'. (அல் குர்ஆன் 05:03) என்று குறிப்பிட்டுள்ளான்.

அதேநேரம் நபி (ஸல்) அவர்கள், 'வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம். நடைமுறையில் சிறந்தது முஹம்மத்(ஸல்) அவர்களின் நடைமுறை.


காரியங்களில் கெட்டது (பித்ஆத்) புதுமையாகும். பித்அத்துகள் அனைத்தும் வழிகேடு. வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும்' என்று கூறியுள்ளார்கள்.
(ஆதாரம்: புகாரி, முஸ்லிம்,நஸயி.)

அதனால் தவறுகள் பிழைகள் செய்து பாவங்கள் புரிந்தாலும் தூய்மையாக மனம் வருந்தி அல்லாஹ்விடம் மனிதன் பாவமன்னிப்பு கேட்பதை அவன் வலியுறுத்தியுள்ளான். அதனை அங்கீகரித்து பாவமன்னிப்பு அளிப்பதாகவும் அவன் குறிப்பிட்டுள்ளான்.

'என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கை இழக்க வேண்டாம்.

நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன். மிக்கக் கருணையுடையவன்' (என்று நபியே!) நீர் கூறுவீராக.. 
(அல் குர்ஆன் 39 :53)

அத்தோடு நபி(ஸல்) அவர்கள், 'மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவமன்னிப்பு கோரலை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான் என்று குறிப்பிட்டுள்ளார்கள். 
(ஆதாரம்: திர்மிதி)

இதேவேளை 'எவனொருவன் நேர்வழி இன்னது என்று தமக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே விட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம். அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும். (அல்குர்ஆன் 4 : 115) என்பதையும் அல் குர்ஆன் சுட்டிக்காட்டத் தவறவில்லை.ஆகவே உலகில் பாவம் என்று அனைவரும் கருதிடும், தெளிவான பாவங்களை அறிந்து அவற்றிலிருந்து தங்களை தடுத்து தவிர்த்து கொள்வது போன்று, தாங்கள் அறியாமல் செய்த பாவங்களையும் நினைத்து வருந்தி அவற்றை கைவிட்டு பாவமன்னிப்பு கேட்பது போன்று, அல்லாஹ்வின் கட்டளைகள் மற்றும் நபி வழிக்கு மாற்றமான செயற்பாடுகளை உணர்ந்து பாவ மன்னிப்பு கேட்பதும் மிகவும் அவசியமானதாகும்.

அதனால் நபிவழியில் நடந்து பாவமன்னிப்பும் கேட்டு ஈடேற்றம் பெற்றிட அல்லாஹ் அனைவருக்கும் அருள் புரியட்டும்.

Post a Comment

0 Comments