Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

கடனை திருப்பி செலுத்துவதன் முக்கியத்துவம்...


சமூக வாழ்வொழுங்கில் ஒருவர் மற்றொருவரிடம் உதவி ஒத்துழைப்புகள் மாத்திரமல்லாமல் கடன்கள் பெறுவதும் இயல்பானதாகும். அவ்வாறு பெற்றுக்கொள்ளும் கடன்களை உரிய நேர காலத்தில் திருப்பி செலுத்தி விட வேண்டும். அதுவே இஸ்லாமிய வழிகாட்டலாகும். அதனை இஸ்லாம் வலியுறுத்திப் போதித்துள்ளது.

அதாவது கடன் பெற்றுக்கொண்டு அதைத் திருப்பிச் செலுத்தாமல் அல்லது அதைத் திருப்பிக் கொடுப்பதற்குரிய செல்வத்தைச் சேர்க்காமல் இறந்து விடுவது சுவர்க்கத்திற்குச் செல்ல முடியாமல் போவதற்குக் காரணமாக அமைந்துவிடலாம். இது தொடர்பில் நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

மனித உரிமைகளை மீறும் விடயத்தில் கடன் முக்கிய இடத்தைப் பெறுகிறது. வசதியில்லாத நிலையில் அல்லது முக்கியத் தேவைக்காக வாங்கும் கடன்களைப் பெரும்பாலானவர்கள் குறித்த காலத்தில் திருப்பிக் கொடுப்பதில்லை. சிலர் கடனை வாங்கி விட்டுத் தலைமறைவாகி விடுகின்றனர். இதனால் கடன் கொடுத்தவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். ஆனால் இச்செயல் சுவர்க்கத்தை அடைந்து கொள்ள முடியாத பயங்கர நிலையை ஏற்படுத்தி விடக்கூடியதாக உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் கடன்பட்டவர் இறந்து போனால் அவருடைய கடனை திருப்பி செலுத்தக்கூடிய அளவுக்குச் செல்வத்தை விட்டுச் சென்றால் மட்டுமே ஜனாஸா தொழுகையை நடத்துவார்கள். இல்லையெனில் அன்னார் தொழுகை நடத்தாமல் நபித் தோழர்களை நடத்தச் செல்வார்கள்.

ஒரு முறை நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்த போது ஜனாஸாவொன்று கொண்டு வரப்பட்டது. அப்போது, 'நீங்கள் இவருக்குத் தொழுகை நடத்துங்கள்' என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், 'இவர் கடனாளியா?' என்று கேட்ட போது நபித் தோழர்கள் 'இல்லை' என்றனர். 'ஏதேனும் (சொத்தை) இவர் விட்டுச் சென்றிருக்கிறாரா?' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது 'இல்லை' என்றனர். பின்னர் அவருக்காக நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.

அதன் பின்னர் மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்ட போது, 'அல்லாஹ்வின் தூதரே! இவருக்குத் தொழுகை நடத்துங்கள்' என்று நபித் தோழர்கள் கூற, நபி (ஸல்) அவர்கள், 'இவர் கடனாளியா? என்று வினவினார்கள். அதற்கு 'ஆம்' என்று பதிலளிக்கப்பட்டது. அச்சமயம் நபியவர்கள் 'இவர் ஏதேனும் விட்டுச் சென்றிருக்கிறாரா?' என்று வினவ, 'மூன்று தங்கக் காசுகளை விட்டுச் சென்றிருக்கிறார்' என்று ஸஹாபாக்கள் கூறினர். அதனைத் தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள் அவருக்கும் ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள்.

பிறகு மூன்றாவது ஜனாஸாவொன்று கொண்டு வரப்பட்டது. அச்சமயம் நபிகளாரிடம் 'நீங்கள் தொழுகை நடத்துங்கள்' என்று நபித் தோழர்கள் கூறினர். 'இவர் எதையேனும் விட்டுச் சென்றிருக்கிறாரா?' என்று நபி (ஸல்) அவர்கள் வினவ, நபித் தோழர்கள் 'இல்லை' எனப் பதிலளித்தனர்.

அதனைத் தொடர்ந்து 'இவர் கடனாளியா?' என்று அன்னார் வினவ, 'மூன்று தங்கக் காசுகள் கடன் வைத்திருக்கிறார்' என்று நபித் தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்' என்றார். அப்போது அபூகதாதா (ரலி), 'இவரது கடனுக்கு நான் பொறுப்பு, அல்லாஹ்வின் தூதரே! இவருக்குத் தொழுகை நடத்துங்கள்' என்று கூறியதும் நபி (ஸல்) அவர்கள் அவருக்குத் தொழுகை நடத்தினார்கள்' என்று ஸலமா (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். 
(ஆதாரம்: புஹாரி)

இந்த நபிமொழியின் படி அனைவருக்கும் தொழுகை நடத்திய நபி (ஸல்) அவர்கள், கடனாளிக்கு மாத்திரம் தொழுகை நடாத்த மறுத்துள்ளார்கள் என்றால் கடனைத் திருப்பிச் செலுத்துவது எவ்வளவு தூரம் முக்கிய காரியம் என்பது தெளிவாகிறது. கடனைத் திருப்பி செலுத்தாமல் இருப்பதும், இறந்து விடுவதும் பயங்கரமானதும் பாதிப்புகள் நிறைந்ததுமான செயல் என்பதைப் புரிந்து கொள்ளவும் முடிகிறது.

மேலும் ஒருவர் கடன் வாங்கி விட்டு அதைத் திருப்பிச் செலுத்தாமல் இறந்து விட்டால் கடன் கொடுத்தவர் மறுமை நாளில் இறைவனிடம் முறையிடும் போது கடன் வாங்கியவரின் நன்மைகளை எடுத்துக் கடன் கொடுத்தவருக்கு வழங்கப்படும்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை தம் தோழர்களிடம் 'திவாலாகிப் போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். அதற்கு ஸஹாபாக்கள், 'யாரிடம் வெள்ளிக் காசோ பொருட்களோ இல்லையோ அவர் தான் எங்களைப் பொறுத்த வரை திவாலானவர்' என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தில் திவாலாகிப் போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகியவற்றுடன் வருவார்.

(அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர் மீது அவதூறு கூறி இருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும். இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்கு முன் நன்மைகள் தீர்ந்து விட்டால் (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு இவர் மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார். (அவரே திவாலாகிப்போனவர்)' என்று கூறினார்கள்.
(ஆதாரம்: முஸ்லிம்)

கடன் வாங்கியவர் அதை உரிய நேரத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டும். அதை மீறினால் மறுமை நாளில் எவ்வளவு பெரிய நன்மைகளுடன் இவர் வந்திருந்தாலும் அவருடைய நன்மைகள் கடன் கொடுத்தவருக்கு வழங்கப்பட்டு இவருக்கு ஒன்றும் இல்லாத நிலை கூட ஏற்படலாம். இதனால் நரகத்திற்குச் செல்லும் நிலை ஏற்படலாம். கடன் வாங்குவதன் விளைவாகப் பொய் சொல்ல வேண்டிய நிலை ஏற்படலாம். அது இன்னொரு பாவத்திற்கு இட்டுச் செல்லும். அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் கடனை விட்டும் அதிகமதிகம் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுவார்கள். அன்னார், ஒவ்வொரு தொழுகையிலும் துஆச் செய்யும் போது, 'இறைவா! பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்று பிரார்த்தனை செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், 'அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்புத் தேடுவதற்குக் காரணம் என்ன?' என்று வினவ, அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'மனிதன் கடன்படும் போது பொய் பேசுகிறான். வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்' என்று பதிலளித்தார்கள்.
(ஆதாரம்: புஹாரி)

ஆகவே கடன் வாங்கும் போது அதனை உரிய நேரகாலத்தில் திருப்பி செலுத்தில் அதிக கவனமும் சிரத்தையும் செலுத்த வேண்டும். அதனை இறை கட்டளையாகவும் உயரிய அமலாகவும் கருதி செயற்படுவது அவசியம். அது இறையருளையும் கருணையையும் பெற்றுத்தரக்கூடிய காரியமாக அமையும்.

அப்துர் ரஹ்மான்

Post a Comment

0 Comments