Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

நபிமார்களும் தியாகிகளும் பொறாமை கொள்ளும் அடியார்கள்...!


நட்பு என்பது பல வகைப்படும். அவற்றில் இறைவனுக்காக நட்பு வைப்பது ஏராளமான சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளன. இதனை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல சந்தரப்பங்களில் எடுத்தியம்பியுள்ளார்கள்.

'யார் அல்லாஹ்வுக்காக நேசிக்கிறாரோ, அல்லாஹ்வுக்காக வெறுக்கிறாரோ, அல்லாஹ்வுக்காகக் கொடுக்கிறாரோ, அல்லாஹ்வுக்காக மறுக்கிறாரோ அவர் ஈமானை பூரணப்படுத்திக்கொண்டார்' என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். 
(ஆதாரம்: அபூதாவூத்)

மற்றொரு சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள், 'வேறொரு ஊரில் இருக்கும் தன் சகோதரனை சந்திப்பதற்காக ஒருவர் சென்றார். அவர் செல்லும் வழியில் ஒரு வானவரை அல்லாஹ் அவரிடத்தில் அனுப்பினான். அவ்வானவர் அவரிடத்தில் வந்த போது 'நீங்கள் எங்கே செல்ல நினைக்கிறீர்கள்?' எனக் கேட்டார். அதற்கு அவர், இந்த ஊரில் உள்ள எனது சகோதரனை (சந்திக்க) நாடிச் செல்கிறேன்' என்றார். 'உங்களுக்கு சொந்தமான எதையாவது அவர் உங்களுக்கு தர வேண்டியுள்ளதா?' என வானவர் அவரிடம் கேட்டார். அதற்கு அவர், 'இல்லை. கண்ணியமானவனும் சங்கையானவனுமான அல்லாஹ்விற்காக அவரை நேசிக்கிறேன்' என்றார். அவ்வானவர், 'நீங்கள் யாருக்காக அவரை நேசித்தீர்களோ அவன் உங்களை நேசிக்கிறான் என்பதை உங்களிடம் (கூற வந்த) அல்லாஹ்வின் தூதராவேன் நான்' என்று கூறியதாக குறிப்பிட்டுள்ளார்கள்.
(ஆதாரம்: முஸ்லிம்)

மேலும் நபி (ஸல்) அவர்கள், 'என் விஷயத்தில் ஒருவருக்கொருவர் நேசித்துக் கொள்பவர்களுக்கும் என் விஷயத்தில் அமர்பவர்களுக்கும், என் விஷயத்தில் போட்டி போட்டுக் கொண்டு செலவு செய்பவர்களுக்கும் எனது பிரியம் உறுதியாகிவிட்டது என்று அல்லாஹ் கூறுகிறான்' எனவும் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: அஹ்மத்)

அதேநேரம், 'அல்லாஹ் மறுமை நாளில் எனக்காக நேசம் வைத்துக் கொண்டவர்கள் எங்கே? என்னுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இந்நாளில் நான் அவர்களுக்கு எனது நிழலைத் தருகிறேன் என்று கூறுவான்' என்றும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள். 
(ஆதாரம்: முஸ்லிம்)

மேலும் அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் நபிமார்களும் அல்லர். இறைவனின் பாதையில் உயிர் நீத்தவர்களும் அல்லர். இவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் அந்தஸ்தைப் பார்த்து நபிமார்களும் தியாகிகளும் பொறாமைப்படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள் 'அவர்கள் யார் என எங்களுக்குக் கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் தங்களுக்கிடையே இரத்த உறவிற்காகவோ, கொடுத்து வாங்கிக் கொள்ளும் செல்வங்களுக்காகவோ அல்லாமல் அல்லாஹ்வுக்காக ஒருவரையொருவர் நேசித்துக் கொண்டவர்களாவர். அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நிச்சயமாக அவர்களுடைய முகங்கள் ஒளியாக இருக்கும். அவர்கள் ஒளியின் மீது இருப்பார்கள். மக்கள் அஞ்சும் போது அவர்கள் அஞ்ச மாட்டார்கள். மக்கள் கவலைப்படும் போது அவர்கள் கவலைப்பட மாட்டார்கள் என்று கூறி விட்டு அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்ற வசனத்தை படித்துக்காட்டினார்கள். 
(ஆதாரம்: அபூதாவூத்)

நாம் வசதி வாய்ப்புகளுடன் வாழும் போது நமக்கு ஏராளமான நண்பர்கள் கிடைப்பார்கள். ஆனால் கஷ்டங்கள் வரும் போது அனைவரும் ஓடிவிடுவார்கள். புயல்காற்று வரும் போது தான் உறுதியான கட்டடம் எது? உறுதியற்ற கட்டடம் எது? என்று நமக்கு தெரிகிறது. அது போல் நல்ல நண்பனை அறிய நமக்கு வரும் சோதனைகள் சிறந்த அளவுகோலாக பயன்படுகிறது.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், தனக்கு விரும்புவதை தன்னுடைய சகோதரனுக்கு விரும்பாதவரை உங்களில் எவரும் ஈமான் கொண்டவராக ஆகமுடியாது என்று குறிப்பிட்டார்கள். 
(ஆதாரம்: புஹாரி)

மற்றொரு சந்தர்ப்பத்தில், 'ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதி இழைக்கவும் மாட்டான். அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகுமாறு) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான் என்றும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். 
(ஆதாரம்: புஹாரி)

ஆகவே நட்பின் சிறப்பையும் அதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்து அதற்கேற்ப அதனை அமைத்துக் கொள்வதில் கவனமும் அக்கறையும் கொள்வது அவரவர் பொறுப்பாகும்.

அபூ மதீஹா

Post a Comment

0 Comments