Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ஞானவாபி மசூதி வழக்கு: இந்து பெண்கள் மனு விசாரணைக்கு ஏற்பு - முஸ்லிம் தரப்பு கூறுவது என்ன?


ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்து தெய்வ வழிபாட்டுக்கு ஒப்புதல் கோரி ஐந்து பெண்கள் தாக்கல் செய்துள்ள மனுவை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.கே.விஷ்வேஷ் தனது தீர்ப்பில் முஸ்லிம் தரப்பின் மேல்முறையீட்டை நிராகரித்துள்ளதாக இந்து தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு ஜெயின் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 22ம் தேதி நடைபெறும். அன்றைய தினம் பதில் தாக்கல் செய்யுமாறு முஸ்லிம் தரப்பிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லியைச் சேர்ந்த ராக்கி சிங் மற்றும் வேறு நான்கு பெண்கள் ஞானவாபி மசூதியின் வளாகத்தில் சிருங்கார் கௌரி மற்றும் வேறு சில தெய்வங்களை வழிபட அனுமதி கோரி மனு தாக்கல் செய்தனர்.

இந்து மனுதாரர்களின் மனு, வழிபாட்டு தல சட்டத்தையோ, வக்ஃப் சட்டத்தையோ மீறவில்லை என்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.கே.விஷ்வேஷ் தனது தீர்ப்பில்கூறியுள்ளார்.

இது வழிபாட்டு தல சட்டம் மற்றும் வக்ஃப் சட்டத்தை மீறும் செயலாகும் என்று கூறி அஞ்சுமன் இந்தஜாமியா மசூதி கமிட்டி இந்து தரப்பு தாக்கல் செய்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

"அஞ்சுமன் இந்தஜாமியாவின் மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும்," என்று தீர்ப்புக்கு பின் முஸ்லிம் தரப்பு வழக்கறிஞர் முகமது ஷமிம் முகமது கூறினார்.



"இது எங்களுக்கும் இந்து சமூகத்திற்கும் கிடைத்த பெரிய வெற்றி. அமைதி காக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்."என்று இந்து தரப்பு மனுதாரரான சோஹன் லால் ஆர்யா, ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

"நாங்கள் தீர்ப்பை மதிக்கிறோம். ஞானவாபியையும் மதிக்கிறோம். அடுத்த விசாரணையில்கூட சட்டத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது,"என்று பாஜக தலைவர் கிரிராஜ் சிங் குறிப்பிட்டார்.

விவகாரம் என்ன?

2021 ஆகஸ்ட் 18 ஆம் தேதி டெல்லியைச் சேர்ந்த ஐந்து பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். இந்த பெண்களுக்கு ராக்கி சிங் தலைமை வகிக்கிறார்.

மசூதி வளாகத்தில் மா சிருங்கார் கௌரி, விநாயகர், அனுமன், ஆதி விஷேஷ்வர், நந்தி மற்றும் பிற தெய்வங்களை தரிசனம் செய்யவும், வழிபடவும், பூஜைகள் செய்யவும் அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.

காசி விஸ்வநாதர் சாளரப் பாதையை ஒட்டிய தசாஷ்வமேத காவல் நிலைய வார்டின் பிளாட் எண் 9130 ல் அன்னை சிருங்கார் தேவி, ஹனுமான்,விநாயகர் மற்றும் கண்ணுக்கு புலப்படாத பல தெய்வங்கள் இருப்பதாக இந்தப் பெண்கள் கூறுகின்றனர்.

அஞ்சுமன் இந்தஜாமியா, மசூதியில் உள்ள தெய்வங்களின் சிலைகளை உடைப்பது, இடிப்பது, சேதப்படுத்துவது போன்றவற்றை தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

"பழமையான கோவில்' வளாகத்தில் உள்ள தெய்வ சிலைகளின் தரிசனம், வழிபாடு போன்ற எல்லா நடவடிக்கைகளுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உத்தரபிரதேச அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.



இந்த எல்லா தெய்வங்களின் சிலைகளும் இருப்பதை உறுதி செய்ய ஒரு வழக்கறிஞர் ஆணையரை ( அட்வகேட் கமிஷனர்) நீதிமன்றம் நியமிக்க வேண்டும் என்று கோரும் தனிப்பட்ட விண்ணப்பம் ஒன்றையும் இந்த மகளிர் அளித்திருந்தனர்.

மறுபுறம், ஞானவாபி மசூதி வக்ஃபுக்கு சொந்தமானது என்று அஞ்சுமன் இந்தஜாமியா மஸ்ஜித் கமிட்டி கூறுகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுக்குப்பிறகு இந்த வழக்கின் விசாரணை, மாவட்ட நீதிமன்றத்தில் துவங்கியது.

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முன் கீழ் நீதிமன்றம் வளாகத்தை வீடியோகிராஃபி ஆய்வு செய்ய உத்தரவிட்டது. ஆய்வு மே 16ம் தேதி முடிந்தது. அதன் அறிக்கை மே 19ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.



ஞானவாபி விவகாரம் - இதுவரை நடந்தது என்ன?

2022: அடுத்த விசாரணை செப்டம்பர் 22 அன்று நடைபெறும்.

2022: ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்து தெய்வங்களை வழிபட அனுமதி கோரிய இந்துப் பெண்களின் மனுவை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் செப்டம்பர் 12 ஆம் தேதி விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. முஸ்லிம் தரப்பின் எதிர்ப்பை நீதிமன்றம் நிராகரித்தது.

2022: மே 20ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தை வாரணாசி மாவட்ட நீதிமன்றத்திற்கு அனுப்பி, இந்த வழக்கு மேலும் விசாரிக்கத் தகுதியானதா இல்லையா என்பதை தீர்மானிக்குமாறு நீதிமன்றத்திடம் கூறியது.

2022: மே 17ஆம் தேதி, 'சிவலிங்கத்தின்' பாதுகாப்பிற்காக வுசுகானாவை(நீரூற்று) சீல் வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது, கூடவே மசூதியில் தொழுகையைத் தொடரவும் அனுமதித்தது.

2022: உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு முன் மே 16 அன்று ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மசூதிக்குள் சிவலிங்கம் இருப்பதாக கூறப்படும் பகுதியை சீல் வைக்க வாரணாசி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டது. அங்கு தொழுகைக்கும் தடை விதிக்கப்பட்டது.

2022: மே மாதம், ஞானவாபி மசூதியின் வீடியோ பதிவு தொடர்பாக மஸ்ஜித் இந்தஜாமியா உச்ச நீதிமன்றத்தை அணுகியது

2022: மஸ்ஜித் இந்தஜாமியா இந்த உத்தரவை பல தொழில்நுட்ப அம்சங்களின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தில் எதிர்த்தது. அது தள்ளுபடி செய்யப்பட்டது.

2022: ஏப்ரலில், ஞானவாபி மசூதியின் ஆய்வு மற்றும் வீடியோகிராஃபிக்கு சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டது.

2021: அலகாபாத் உயர் நீதிமன்றத்தை மஸ்ஜித் இந்தஜாமியா அணுகியது. உயர்நீதிமன்றம் மீண்டும் சிவில் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தி, அதை கண்டித்தது.

2021: ஆகஸ்ட் 18 அன்று, டெல்லியைச் சேர்ந்த ஐந்து பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, மசூதி வளாகத்தில் மா சிருங்கார் கௌரி மற்றும் பிற தெய்வங்களை தரிசனம் செய்து வழிபட அனுமதிக்க வேண்டும் என்று கூறினர்.

2021: உயர்நீதிமன்றத்தின் தடை இருந்தபோதிலும், வாரணாசி சிவில் நீதிமன்றம் ஏப்ரல் மாதம் வழக்கை மீண்டும் தொடங்கி மசூதியை ஆய்வு செய்ய அனுமதித்தது.

2020: அலகாபாத் உயர்நீதிமன்றம் சிவில் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்குத் தடை விதித்தது. பின்னர் இந்த விஷயத்தில் தீர்ப்பை ஒத்திவைத்தது.

2020: அடிப்படை மனுவை விசாரிக்குமாறு வாரணாசி சிவில் நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

2019: அயோத்தி தீர்ப்புக்கு ஒரு மாதத்திற்குப் பிறகு 2019 டிசம்பரில் ஞானவாபி மசூதியை ஆய்வுசெய்யக்கோரி வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

1991: ஞானவாபி வழக்கு நீதிமன்றத்தை எட்டியது. ஞானவாபி மசூதி தொடர்பாக 1991ஆம் ஆண்டு முதன்முறையாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வாரணாசியில் உள்ள சாதுக்கள் மற்றும் துறவிகள் அங்கு வழிபாடு நடத்தக் கோரி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், மசூதி நிலத்தை இந்துக்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மசூதி நிர்வாகக் குழு, இது வழிபாட்டுத் தலச்சட்டத்தை மீறுவதாகக் கூறியது.

1991: பிவி நரசிம்ம ராவ் காங்கிரஸ் அரசு 1991 ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலச் சட்டத்தை (சிறப்பு விதிகள்) நிறைவேற்றியது. பாஜக இதை எதிர்த்தது. ஆனால் அயோத்தியை விதிவிலக்காக வைத்ததை வரவேற்றது. அதே நேரம் காசி மற்றும் மதுராவையும் விதிவிலக்காகக் கருத வேண்டும் என்று கோரியது. ஆனால் சட்டத்தின்படி, அயோத்திக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நன்றி...
BBC - தமிழ்

Post a Comment

0 Comments