Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இஸ்லாத்தின் பார்வையில் பொறுமை...


மக்கள் மத்தியில் அரிதாகி வரும் நற்பண்புகளில், யாவரும் எளிதாகப் பெற முடியாத ஒன்று தான் பொறுமை என்னும் நற்பண்பு ஆகும். பொறுமை என்பது சொல்லளவில் மிகச் சிறிய ஒன்று தான். வெகு  சொற்பமாகவே சிலரிடத்தில் காணப்படும் 'பொறுமை' என்ற இக்குணம் பலருக்கு வெறும் வார்த்தையாகவே உள்ளது.

இது மதத்தால் ஆர்வமூட்டப்பட்ட ஒரு பண்பு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. குறிப்பாக இஸ்லாத்தில் பொறுமை முக்கிய இடத்தைப் பெற்றுள்ள ஒரு பண்பாக உள்ளது. இது குறித்து அல்லாஹ்தஆலா அல் குர்ஆனில் பல இடங்களில் வலியுறுத்திக் கூறியுள்ளான். முஹம்மத் (ஸல்) அவர்களும் இதனை பல சந்தர்ப்பங்களில் சிலாகித்து எடுத்தியம்பி உள்ளார்கள். அத்தோடு தமது வாழ்விலும் அன்னார் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியுள்ளார்கள்.

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தமது போர்வையை மிக வேகமாக இழுத்துப் பிடித்த ஒரு மனிதருடன் மிகுந்த சகிப்புத்தன்மையுடன் நடந்து கொண்டார்கள். தமக்கு பல இன்னல்களைக் கொடுத்து வந்த மக்களையும் அன்னார் மன்னித்து பொறுமை சகிப்புத்தன்மையைக் கையாண்டார்கள்.

இது இறைவனிடத்தில் இருந்து வருகின்ற ஓர் அருள் (ரஹ்மத்) ஆகும். பொறுமைக்கெதிரான குணங்களாக 'உணர்ச்சி வசப்படுதல்' அல்லது 'கோபம் கொள்ளுதல்' காணப்படுகின்றது.

இருந்தும் மனிதனுக்கு ஏற்படும் பல துன்பங்களுக்கு மூல காரணம் கோப உணர்வாக உள்ளது. இன்று உலகெங்கிலும் இடம்பெறும் சண்டை, சச்சரவுகள் மற்றும் பேரிழப்புகளுக்குக் காரணமும் இந்த கோபப் பண்புதான்.

'காலத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை)
(அல் குர்ஆன் 103:1-3)

இறைநம்பிக்கையுடன் நற்காரியங்களைச் செய்வது, சத்தியத்தைக் கொண்டும், பொறுமையைக் கொண்டும் நல் உபதேசம் செய்வது ஆகிய குணங்களை இறைவன் இவ்வசனத்தின் மூலம் உணர்த்துகின்றான். இவ்வுலகத்தில் அமைதியை விரும்பும் ஒரு மனிதன், இவற்றைச் சரியான முறையில் கடைபிடித்தால் ஏற்படும் உலக அமைதிக்கான அடிப்படை விதிகளை இறைவன் காலத்தின் மீது சத்தியமிட்டு கூறுகிறான். அத்துடன், இம்மை, மறுமை எனப்படும் ஈருலகிலும் நஷ்டங்களைத் தவிர்க்கும் சிறந்த வழிகளையும் தெளிவுபடுத்துகிறான்.

'நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஓடுகிறான்' (ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்) என அறிவித்த நபி (ஸல்) அவர்கள், கோபத்தைத் தடுக்க இறைவனிடத்தில் பாதுகாப்புத் தேடும் முறையையும் கற்றுத் தந்துள்ளார்கள்.

கோபத்தால் புத்தி பேதலித்து செயல்படுவதனால் வரும் பின் விளைவுகள் வருத்தங்களாகவும், இழப்புகளாகவும் அமைவதை தடுப்பதற்கு இவ்வழிகாட்டல் பெரிதும் உதவும். அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடக் கற்றுத் தந்துள்ளார்கள்.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் 'உங்களில் ஒருவருக்கு, தான் நின்று கொண்டிருக்கும் போது கோபம் ஏற்பட்டால் அவர் உடனே அமர்ந்து விடட்டும். இன்னமும் கோபம் அவரை விட்டு நீங்கவில்லை எனில் அவர் படுத்துக் கொள்ளட்டும்' என்று கோபத்தைத் தணிப்பதற்காக அறிவுரை பகர்ந்துள்ளார்கள். 
(ஆதாரம்: திர்மிதி)

கோபம் மனிதன் பெற்றுள்ள பண்புகளில் ஒன்றானாலும், அக்கோபம் கடுமையான நோயாக மாறி விளைவுகள் விபரீதமாக வெளிப்படுவதைத் தவிர்க்க பொறுமை என்ற மருந்தைக் கொண்டு தீர்வு பெற்றுக்கொள்ள வேண்டும். இதன் நிமித்தம் பொறுமையை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும்.

அதனால் தான் நபி(ஸல்) அவர்கள், '(தம் வாழ்வில்) துன்பங்கள் நேரிடும் போது அதைச் சகித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை எவரொருவர் கொள்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் சகிப்புத் தன்மையை வழங்கி விடுகிறான். (துன்பங்களைச்) சகித்துக் கொள்ளும் தன்மையை விட சிறந்த ஒரு அருட்கொடையை எவரும் பெற்றதில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
(ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

பொறுமையுடன் சகித்துக் கொள்வது இறைவனின் அருட்கொடையாகும். அப்பண்பை அடைந்து கொள்வதில் ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும். கோபத்தை மனிதனுக்கு அளித்த இறைவனே, அதனை முறியடிக்கும் மருந்தாகப் பொறுமைப் பண்பையும் வழங்கி இருக்கின்றான். இது தொடர்பில் அல் குர்ஆன் பல இடங்களில் எடுத்துக்கூறி இருக்கின்றன.

'நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்'. 
(அல் குர்ஆன்)

அதேநேரம், முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள் (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!
(அல் குர்ஆன் 3:200)

ஆயினும் எவர்கள் (துன்பங்களைப்) பொறுமையுடன் சகித்து, நற்கருமங்கள் செய்கின்றார்களோ, அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான நற்கூலியும் உண்டு.
(அல் குர்ஆன் 11:11)

(நபியே! எந்நிலையிலும்) பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் அழகிய செயல்கள் செய்வோரின் கூலியை வீணாக்கி விடமாட்டான்.
(அல் குர்ஆன் 11:115)

இவ்வாறு பொறுமையின் சிறப்பு, மகத்துவம், முக்கியத்துவம் என்பவற்றை எடுத்துக்கூறி அதன் தேவையையும் அவசியத்தையும் வலியுறுத்தும் இறை வசனங்கள் அருள் மறையாம் அல் குர்ஆனில் நிறைவே காணப்படுகின்றன.

எனவே எத்தகைய சூழலிலும் பொறுமை, சகிப்புத்தன்மையுடன் சிந்தித்து செயற்பட்டால் வெற்றி கிடைக்கப்பெறும். இறைவாக்கும் அதுதான். ஆதலால், பொறுமையை எனக்குத் தந்தருள்வாயாக என்று அல்லாஹ்விடம் ஒவ்வொருவரும் பிரார்த்திப்பது மிகவும் அவசியமானதாகும். அதன் பிரதிபலன்களை ஈருலகிலும் அடைந்து கொள்ளலாம்.

ஏ.எச்.எம். மின்ஹாஜ்
முப்தி (காஷிபி)

Post a Comment

0 Comments