Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து பும்ரா இன்னும் வெளியேறவில்லை - சவுரவ் கங்குலி நம்பிக்கை...!

 

டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டும், இந்திய வேகப் பந்துவீச்சாளருமான ஜஸ்பிரீத் பும்ரா காயம் காரணமாக வெளியேறியுள்ளதாக தகவல் வெளியான நிலையில், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

8-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர். வருகிற 16-ம் தேதி துவங்கி நவம்பர் மாதம் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இதற்காக இந்திய அணி வருகிற 6-ம் தேதி ஆஸ்திரேலியா புறப்படுகின்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியுடன், வரும் 23-ம் தேதி தனது முதல் போட்டியில் சந்திக்கிறது. ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தநிலையில், இந்திய அணி அதற்கு பழிதீர்க்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

இதற்கிடையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதற்காக பயிற்சி மேற்கொண்டபோது ஏற்பட்ட முதுகுவலி காரணமாக முதல் போட்டியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகினார். பின்னர், தொடரிலிருந்து முழுவதுமாக வெளியேறியநிலையில், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றுள்ளார் ஜஸ்பிரீத் பும்ரா. அங்கு மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் பும்ரா உள்ளார். முதுகு வலி பிரச்னைக்கு அறுவை சிகிச்சை தேவை இல்லை என்ற போதிலும், அதில் இருந்து குணமடைய நீண்ட காலம் ஆகும் எனக் கூறப்பட்டுவருகிறது. இதனால் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து பும்ரா விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகின.



யார்க்கர் வீசுவதில் வல்லவரான பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்பட்டது. குறிப்பாக டெத் ஓவர்களில் அவரின் அனுபவம் இந்திய அணிக்கு தேவைப்படும் நேரத்தில், டி20 தொடரில் விலகுவதாக வெளியான தகவல்கள் ரசிகர்களை கவலையடைய செய்தது. இந்நிலையில், இதுகுறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இணையதள செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ளப் பேட்டியில், பும்ரா டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து இன்னும் முழுமையாக வெளியேறவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் மிக விரைவில் மீண்டும் உடல்நலத்துடன் திரும்பி வருவார் என்றும், அதனால், அவரை இன்னும் தொடரிலிருந்து வெளியேற்றவில்லை எனவும், அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் இதுபற்றி தெரியவரும் என்றும் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Post a Comment

0 Comments