49 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது தென்னாப்பிரிக்க அணி.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வென்றது. இந்நிலையில், இன்று இந்தூரில் நடந்த கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. கேஎல் ராகுல், விராட் கோலி, அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டு ஸ்ரேயாஸ் ஐயர், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகிய மூவரும் சேர்க்கப்பட்டனர்.
முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான டெம்பா பவுமா வெறும் 3 ரன்னில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றினார். அதைத்தொடர்ந்து டி காக் மற்றும் ரைலீ ரூசோ ஆகிய இருவரும் அடித்து ஆடினர். இந்திய பவுலிங்கை பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அடித்து நொறுக்கினார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த குயிண்டன் டி காக் 43 பந்தில் 68 ரன்களை குவித்து ரன் அவுட்டாகி வெளியேறினார். டிரிஸ்டான் ஸ்டப்ஸ் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் சிக்ஸர் மழை பொழிந்த ரைலீ ரூசோ 48 பந்தில் சதமடித்து அசத்தினார். இது சர்வதேச டி20 போட்டிகளில் அவரின் முதல் சதமாகும். 48 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 100 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார் ரூசோ.
டேவிட் மில்லர் கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள் விளாசி ஃபினிஷிங் கொடுக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 227 ரன்களை குவித்தது தென்னாப்பிரிக்க அணி. இந்திய அணியின் தரப்பில் உமேஷ், தீபக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 228 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு ரன்னில் நடையைக் கட்டினார். ரிஷப் பண்ட் (27 ரன்கள்), தினேஷ் கார்த்திக் (46 ரன்கள்) இருவரும் சற்று அதிரடியாக ஆடி ஆட்டமிழந்தனர். இதையடுத்து தீபக் சாஹர் (31 ரன்கள்) தவிர மற்ற வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 178 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் தென்னாப்பிரிக்கா அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் 2 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த தென்னாப்பிரிக்கா அணி கடைசி டி20 போட்டியில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றுள்ளது. 3 போட்டிகளில் 119 ரன்கள் எடுத்த சூர்யகுமார் யாதவ் தொடர் நாயகன் விருதை வென்றார். இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி வரும் 6ஆம் தேதி நடைபெறுகிறது.
0 Comments