Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத்திற்கு எவ்வாறு அணிகள் தகுதி பெற்றன ?

 

அவுஸ்திரேலியாவில் முதல் சுற்றுடன் இம் மாதம் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 8ஆவது ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றிக் கிண்ணத்தை ஸ்பரிசிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் 16 நாடுகள் பங்குபற்றவுள்ளன.

இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி முதல் சுற்று, சுப்பர் 12 சுற்று என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுவதுடன் முதல் சுற்றில் 8 நாடுகள் இரண்டு குழுக்களில் தலா 4 நாடுகள் வீதம் லீக் அடிப்படையில் மோதவுள்ளன.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் 4 அணிகள் சுப்பர் 12 சுற்றில் ஏற்கனவே விளையாட தகுதிபெற்றுள்ள 8 நாடுகளுடன் இணைந்துகொள்ளும். சுப்பர் 12 சுற்று இரண்டு குழுக்களில் தலா 6 நாடுகள் வீதம் லீக் அடிப்படையில் ஒன்றையொன்று எதிர்த்தாடும்.

இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் சில அணிகள் முதல் தடவையாக வெற்றிக் கிண்ணத்தை சுவைக்க முயற்சிக்கவுள்ளதுடன் மற்றைய சில அணிகள் சம்பியன் அந்தஸ்துடன் பங்குபற்றவுள்ளன.



இந்த வருடம் ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு அணிகள் எவ்வாறு தெரிவாகின என்பதை இங்கு பார்ப்போம்.

அவுஸ்திரேலியா



போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடு என்ற வகையில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா இயல்பாகவே தகுதி பெற்றுக்கொண்டது. சொந்த மண்ணில் விளையாடும் அவுஸ்திரேலியா, ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் முதலாவது அணியாக சம்பியன் பட்டத்தை தக்கவைக்க முயற்சிக்கவுள்ளது.

நியூஸிலாந்து

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த வருடம் நடைபெற்ற ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதல் 11 இடங்களைப் பெற்ற அணிகள் இயல்பாகவே இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றது. கடந்த வருடம் நியூஸிலாந்து உப சம்பியனாகியிருந்தது. இம்முறை முதல் தடவையாக சம்பியனாகும் குறிக்கோளுடன் நியூஸிலாந்து விளையாடவுள்ளது.

இங்கிலாந்து



இயல்பாக தகுதிபெற்ற மற்றொரு அணி இங்கிலாந்து ஆகும். கடந்த வருடம் அரை இறுதிவரை இங்கிலாந்து முன்னேறியிருந்தது. இருவகை உலகக் கிண்ண வரலாற்றில் இருபது 20 கிரிக்கெடடில் முதல் தடவையாக 2010இல் உலக சம்பியனான இங்கிலாந்து 2016 இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளிடம் மயிரிழையில் தோல்வி அடைந்தது. இதேவேளை கடந்த வருடம் அடைந்த ஏமாற்றத்தை இவ் வருடம் இங்கிலாந்து நிவர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான்



கடந்த வருடம் அரை இறுதிவரை முன்னேறியதன் பலனாக இந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட தகுதி பெற்றுக்கொண்டது. கடந்த வருடம் முதலாவது குழுவில் விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றியீட்டி அரை இறுதிவரை பாகிஸ்தான் வீறுநடை போட்டிருந்தது. அத்துடன் இருவகை உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவை முதல் தடவையாக வெற்றிகொண்டிருந்தது. 2009இல் உலக சம்பியனான பாகிஸ்தான் இம்முறை மீண்டும் சம்பியனாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் ஆபிரிக்கா

கடந்த வருடம் கடும் போட்டிக்குப் பின்னர் அரை இறுதி வாய்ப்பை தவறவிட்டபோதிலும் இந்த வருடப் போட்டியில் இயல்பாகவே விளையாட தென் ஆபிரிக்கா தகுதிபெற்றுக்கொண்டது. இருவகை கிரிக்கெட் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளிலும் அதிர்ஷ்டமற்ற அணி என வருணிக்கப்படும் தென் ஆபிரிக்கா, 2 தடவைகள் (2009,; 2014) இறுதிப் போட்டிகளில் விளையாடி முறையே பாகிஸ்தானிடமும் இந்தியாவிடமும் தோல்வி அடைந்தது. இந்த வருடமாவது சாதிக்குமா என்பதைப் பொறுத்திருந்ததான் பார்ககவேண்டும்.

இந்தியா



கடந்த வருடம் சுப்பர் 12 சுற்றில் தனது குழுவில் 3ஆம் இடத்தைப் பெற்ற இந்தியா பெரும் ஏமாற்றத்துடன் முதல் சுற்றுடன் வெளியேறியது. எனினும் அணிகளுக்கான ஒட்டுமொத்த நிலையில் முதல் 11 இடங்களுக்குள் வந்ததால் இந்த வருட இருபது 20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதிபெற்றுக்கொண்டது.

ஆப்கானிஸ்தான்

2021 ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் முதல் 8 இடங்களுக்குள் வந்ததன் பலனாக இந்த வருடப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. இம்முறை சுப்பர் 12 சுற்றில் நேரடியாக விளையாடும் ஆப்கானிஸ்தான் அரை இறுதிக்கு முன்னேறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பங்களாதேஷ்

கடந்த வருடம் முதலாவது குழுவில் இடம்பெற்று 5 தோல்விகளைத் தழுவிய பங்களாதேஷ், முதல் 8 இடங்களுக்குள் இருந்ததால் இம்முறை நேரடியாக சுப்பர் 12 சுற்றில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டது. எனினும் இம்முறை இந்தியா, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளை வீழ்த்தினால் மாத்திரமே பங்களாதேஷினால் அரை இறுதி வாய்ப்பபை பெறக்கூடியதாக இருக்கும்.

இலங்கை



கடந்த வருடம் சுப்பர் 12 சுற்றில் தனது குழுவில் 4ஆவது இடத்தைப் பெற்றதன் மூலம் இந்த வருட ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட இலங்கை தகுதிபெற்றது. 2014இல் சம்பியனான இலங்கை, இம்முறையும் முதல் சுற்றில் விளையாட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் கடந்த வருடத்தில் போன்றே இந்த வருடமும் இலங்கை முதல் சுற்றில் (தகுதிகாண்) வெற்றிபெற்று சுப்பர் 12 சுற்றில் நுழையும் என நம்பப்படுகிறது.

மேற்கிந்தியத் தீவுகள்



ஐசிசி இருபது 20 உலகக் கிண்ணத்தை இரண்டு தடவைகள் வென்ற ஒரே ஒரு நாடான மேற்கிந்தியத் தீவுகள், கடந்த வருடம் பிரகாசிக்கத் தவறி தனது குழுவில் கடைசி இடத்தைப் பெற்றது. எனினும் அவுஸ்திரேலியாவில் விளையாட தகுதிபெற்றுக்கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் முதல் சுற்றில் விளையாட வேண்டியுள்ளது.

நமிபியா

2021 இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது குழுவில் 5ஆவது இடத்தைப் பெற்றதன் மூலம் இந்த வருடமும் விளையாட தகுதிபெற்றுக்கொண்டது. கடந்த வருடம் சுப்பர் 12 சுற்றில் ஸ்கொட்லாந்தை அதிர்ச்சி தோல்வி அடையச் செய்த நமிபியா இந்த வருடம் முதல் சுற்றில் விளையாடவுள்ளது. இம்முறையும் ஏதேனும் சாதிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஸ்கொட்லாந்து

கடந்த வருட போட்டியில் முதல் சுற்றில் முதலாம் இடத்தைப் பெற்றதன் மூலம் அவுஸ்திரேலியாவில் இந்த வருடம் நடைபெறவுள்ள இருபது 20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்ற ஸ்கொட்லாந்து தகுதிபெற்றது. கடந்த வருடம் முதல் சுற்றில் பங்களாதேஷை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஸ்கொட்லாந்து இம்முறையும் முதல் சுற்றில் விளையாடவுள்ளது.

அயர்லாந்து

ஏ குழுவுக்கான உலகக் கிண்ண பிரபஞ்ச தகுதிகாண் சுற்றில் இரண்டாம் இடத்தைப் பெற்றதன் மூலம் அயர்லாந்து, இந்த வருட இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. 6ஆவது தடவையாக இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து விளையாடவுள்ளது.

நெதர்லாந்து

பி குழுவுக்கான உலக கிண்ண பிரபஞ்ச தகுதிகாண் சுற்றில் 2ஆம் இடத்தைப் பெற்றதன் மூலம் அவுஸ்திரேலியாவில் விளையாட தகுதி பெற்றுக்கொண்டது. ஐக்கிய அமெரிக்காவுக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் ஈட்டிய வெற்றியுடன் இந்த வருட இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்து விளையாட தகுதிபெற்றது.

ஐக்கிய அரபு இராச்சியம்

இந்தியாவில் கொவிட் - 19 தாக்கம் காரணமாக அந் நாட்டிற்கு பதிலாக கடந்த வருடம் வரவேற்பு நாடாக இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்திய ஐக்கிய அரபு இராச்சியம், ஏ குழுவுக்கான உலக கிண்ண தகுதிகாண் சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த வருடமும் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. 2015க்குப் பின்னர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியம் விளையாடவிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

ஸிம்பாப்வே

சில வருடங்களாக கிரிக்கெட் அரங்கில் பிரகாசிக்கத் தவறியதுடன் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவந்த ஸிம்பாப்வே இம்முறை இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டது. நெதர்லாந்துக்கு எதிரான பி குழுவுக்கான உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் வெற்றிகொண்டு ஸிம்பாப்பே உலகக் கிண்ண முதல் சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

Post a Comment

0 Comments