Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பெற்றோரின் மகிமை...!


அல்லாஹ் இந்த மனித சமுதாயத்துக்கு எண்ணற்ற அருளைச் செய்துள்ளான். அந்த அருளில் ஒன்று தான் ஒவ்வொரு குழந்தைக்கும் இறைவன் கொடுத்துள்ள பெற்றோர் எனும் பாக்கியமாகும்.

'என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள். பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்! என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி 'சீ' எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக! (அல்குர்ஆன் 17:23)

இவ்வசனத்தில் அல்லாஹ் தனக்கு அடுத்தபடியாகப் பெற்றோரை முன்வைக்கின்றான். காரணம் பெற்றோர் முதுமை அடைவதற்கு முன் நம்மை முன்னேற்றப் பாடுபடுவார்கள். தனது உழைப்பு, திறமை அனைத்தையும் அதற்காக செலவிடுவர். இப்போது அவருக்கு இந்த முதுமை ஏற்பட்டதற்கு அவரது வயது மட்டும் காரணமல்ல. அவரது உடல் உழைப்பும் ஒரு காரணம் தான்.

அதனால் முதுமையை அடைந்த உன் பெற்றோரைப் பார்த்து சீ என்று சொல்லிவிடாதே! ஏனெனில் குழந்தைப் பருவத்தில் எதுவுமே அறிய முடியாத நிலை இருக்கும். அந்நேரத்தில் நீ செய்த அசுத்தங்களையும் இன்னல்களையும் அவர்கள் பொறுத்துக் கொண்டார்கள். அதே பெற்றோர் முதுமையை அடையும் போது நீ எவ்வாறு குழந்தைப் பருவத்தில் நடந்து கொண்டாயோ அதே நிலை அவர்களுக்கும் உருவாகும் தருணமே அந்த முதுமைப் பருவம்.

அப்போது நீ அவர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும். ஏனெனில் உன்னைக் கருவில் சுமக்கும் போது பல இன்னல்களையும் சேர்த்தே தாயார் சுமந்தார். கர்ப்பகாலத்தில் சாப்பிட முடியாமலும், இரவில் தூங்க முடியாமலும், நிம்மதியாக திரும்பியோ, நிமிர்ந்தோ படுக்க முடியாமலும் அடிக்கடி எழுந்தும் சிரமப்படுவாள். இவ்வாறு பல இன்பங்களை அனுபவித்து சிரமப்பட்டு தான் உன்னைச் சுமந்தார். இது குறித்து அல்லாஹ், 'மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். (அல்குர்ஆன் 31:14) என்று குறிப்பிட்டுள்ளான்.

மேலும் ஒவ்வொரு தாய்மாரும் குழந்தையைப் பெற்றெடுக்கும் போது மரணத்தின் வாசலுக்கு சென்று திரும்புகின்றனர். இதை மர்யம் (அலை) அவர்களின் சம்பவத்திலிருந்து அறியலாம். பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப் பாகத்திற்குக் கொண்டு சென்றது. 'நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?' என்று அவர் கூறினார்.
(அல்குர்ஆன் 19:23)

அந்தத் தாய் குழந்தையைப் பெற்றெடுப்பதற்குள் அவள் படும் சிரமங்களைப் பார்த்து அக்குழந்தையின் தந்தை ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைப்பார்.

குழந்தையைப் பெற்றெடுப்பதுடன் தாய்மாரின் கடமை முடிந்து விடுவதில்லை. மேலும் மேலும் சிரமங்கள் தொடரும். தாய்ப்பால் ஊட்டும் கடமை அவள் மீது சுமத்தப்படும். 'அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு. 
(அல்குர்ஆன் 31:14)

'தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள். அவன் தனது பருவ வயதையும் அடைந்து நாற்பது வயதை அடையும் போது 'என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில் ஒருவன்' என்று கூறுகிறான் என்று குறிப்பிட்டுள்ளது. 
(அல்குர்ஆன் 46:15)

மேலும் குழந்தையைப் பேணிப் பராமரித்து வளர்க்க வேண்டிய கடமை. நேர்வழியைப் போதிக்க வேண்டிய கடமை அதன் பெற்றோருக்கு உண்டு. ஏனெனில் ஒவ்வொரு பெண்ணும் அவளது குழந்தைக்குப் பொறுப்பாளி என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்

தாய், சேய் ஆகியோரைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு தந்தையைச் சேர்கின்றது. இக்கடமை அவர்களுக்கு இருப்பதால் அதற்கான சம்பாத்தியத்திற்காகக் கூடுலான சிரமம் எடுத்து வேலை செய்கிறார்கள். இவ்வாறு தாய், தந்தை இருவரும் நமக்காகவே வாழ்பவர்கள். அதனால் அவர்களோடு அதிகமாக நட்பு பாராட்ட வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்று கூறினார்கள். 'பிறகு யார்?' என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். 'பிறகு யார்?' என்று அவர் கேட்க அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'உன் தந்தை' என்றார்கள். (ஆதாரம்: புஹாரி)

மேலும் பெற்றோருக்கு நன்மை செய்வது அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது. 'அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் எது?' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது, 'தொழுகையை அதன் நேரத்தில் தொழுவதாகும்' என்று பதிலளித்தார்கள். 'அதற்கு அடுத்தது எது?' என்றேன். 'பெற்றோருக்கு நன்மை செய்தல்' என்றார்கள். 'அதற்கு அடுத்தது எது?' என்றேன். ' அல்லாஹ்வின் பாதையில் போர் புரிதல்' என்றனர். இவற்றை (மட்டுமே) நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். (கேள்வியை) மேலும் நான் அதிகப் படுத்தியிருந்தால் நபி (ஸல்) அவர்கள் மேலும் சொல்லியிருப்பார்கள். (ஆதாரம்: புஹாரி)

இவ்வாறு பெற்றோரை இஸ்லாம் கண்ணியப்படுத்துகின்றது. அவர்களது தியாகம், பிரதிபலன் எதிர்பாராமல் தன் கடமைகளைச் சரியாகச் செய்து நம்மைக் கண்ணியப்படுத்தியதற்காக நாமும் இஸ்லாம் சொல்லும் வழியில் கண்ணியப்படுத்தி மறுமையில் சுவனத்தைப் பெறுவதற்காக உரிய முறையில் முயற்சிப்போம்.

Post a Comment

0 Comments