Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இஸ்லாம் கூறும் தர்ம சிந்தனைகள்...!

பணம் மற்றும் சில்லறை நாணங்களை தானம் கொடுப்பது மாத்திரம் தர்மம் அல்ல. அதையும் கடந்து சிறிய நற்கருமங்களும் இஸ்லாத்தின் பார்வையில் தர்மங்கள் தான்.

வசதி படைத்தவர் தங்களிடம் உள்ள செல்வங்களை தர்மம் செய்கின்றனர். வசதியற்றவர்கள், தாங்கள் செய்யும் நற்கருமங்களின் வழியே தர்மம் செய்கின்றனர். ஏழை – பணக்காரன் இருவருக்கும் தர்மம் செய்யும் வாய்ப்பினை இஸ்லாம் வெவ்வேறு வழிகளில் வழங்கி அவர்களைச் சமநிலைப்படுத்துகிறது.

‘இறைவன் உனக்கு நல்லதைச் செய்திருப்பது போன்றே நீயும் நல்லதை செய்’ என்பது அல் குர்ஆன் (28:77) வசனமாகும். ‘உங்களுடைய சகோதரரைப் பார்த்து நீங்கள் புன்னகை புரிவதும் தர்மம். நீங்கள் நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பதும் தர்மம். வழி தவறியவருக்கு வழிகாட்டுவதும் தர்மம். பார்வையற்றோருக்கு வழிகாட்டுவதும் தர்மம். கல், முள், எலும்பு போன்றவற்றை நடைபாதையிலிருந்து அகற்றுவதும் தர்மம். உங்களது வாளியிலிருந்து உங்களது சகோதரனின் வாளியில் தண்ணீர் நிரப்புவதும் தர்மமே’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம்: திர்மிதி)

இந்த நபிமொழியில் பலவிதமான தர்ம சிந்தனைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஒன்றுகூட பொருள் சம்பந்தப்பட்டது கிடையாது. தர்மம் என்றால் இஸ்லாத்தின் பார்வையில் பொருளுடன் மட்டும் தொடர்புடையது அல்ல. அது பரந்த மனப்பான்மையுடன் தொடர்புடையது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். உணவைத் தானம் செய்வதும் தர்மமே.

‘ஒரு பெண், வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் தர்மத்தின் நன்மை அவளுடைய கணவனுக்கும் கிடைக்கும். அது போன்றே கருவூலக்காப்பாளருக்கும் நன்மை கிடைக்கும். இவர்களில் யாரும் யாருடைய நன்மையையும் குறைத்து விடமுடியாது’ என்றும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
(ஆதாரம்: புஹாரி)

‘தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமை’ என நபி (ஸல்) அவர்கள் கூறியதும் தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால் ....?’ எனக் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் அதன் மூலம் பலனடைந்து, தர்மம் செய்ய வேண்டும்’ என்றார்கள். தோழர்கள் ‘அதுவும் முடியவில்லையாயின்...’ எனக் கேட்டதற்கு, ‘தேவையுடைய, உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவவேண்டும்’ என பதிலளித்தார்கள். தோழர்கள், ‘அதுவும் இயலாவிடின்’ என்றதும் நற்காரியத்தைச் செய்து, தீமையிலிருந்து தம்மைத் தடுத்துக்கொள்ள வேண்டும். இதுவே அவர் செய்யும் தர்மமாகும்’ எனக் கூறினார்கள்.
(ஆதாரம்: புஹாரி)

‘மனிதர்கள் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தம்முடைய ஒவ்வொரு மூட்டு எலும்புக்காகவும் தர்மம் செய்வது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தர்மமாகும். ஒருவர் தமது வாகனத்தின் மீது ஏறி அமர உதவுவதும் அல்லது அவரது பயணச்சுமைகளை அதில் ஏற்றிவிடுவதும் தர்மமாகும். இன்சொல்லும் தர்மம் தான். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் தர்மமாகும்’ என்றும் நபி (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
(ஆதாரம்: புஹாரி)

‘‘நபித்தோழர்களில் (ஏழைகளான) சிலர் நபியவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதரே, வசதி படைத்தோர் நன்மைகளை (தட்டி)க் கொண்டு போய்விடுகின்றனர். நாங்கள் தொழுவதைப் போன்றே அவர்களும் தொழுகின்றனர். நாங்கள் நோன்பு நோற்பதைப் போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். (ஆனால் அவர்கள்) தங்களது அதிகப்படியான செல்வங்களைத் தானதர்மம் செய்கின்றனர் (அவ்வாறு தானதர்மங்கள் செய்ய எங்களிடம் வசதி இல்லையே)’ எனக்கூறினர். 

அதற்கு நபியவர்கள் ‘நீங்களும் தர்மம் செய்வதற்கான (முகாந்தரத்)தை இறைவன் உங்களுக்கு ஏற்படுத்தவில்லையா? இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (சுப்ஹானல்லாஹ் என்று கூறுவது) தர்மமாகும். இறைவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு (அல்லாஹு அக்பர்) சொல்லும் தர்மம்தான். ஒவ்வொரு புகழ் மாலையும் (அல்ஹம்துலில்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு ஓரிறை உறுதிமொழியும் (லாஇலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும். நல்லதை ஏவுதலும் தர்மமே. தீமையைத் தடுத்தலும் தர்மமே. உங்களில் ஒருவர் தமது பாலுறுப்பி(னைப் பயன்படுத்துகின்ற விதத்தி)லும் தர்மம் உண்டு’ என்று கூறினார்கள்.
(ஆதாரம்: புஹாரி)

‘உன் சகோதரனைப் பார்த்து புன்னகை புரிவதும் தர்மமே’ என்பது நபிமொழி ஆகும். ‘உன் மனைவியின் வாயில் ஒரு கவளம் உணவு ஊட்டுவதும் தர்மம் ஆகும்’ எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம்: புஹாரி)

‘செவிடருக்கும், வாய் பேச முடியாதவருக்கும் அவர்கள் விளங்கும் வரைக்கும் கேட்க வைப்பதும் தர்மமே. அநீதி இழைக்கப்பட்டவன் அவன் உதவி தேடும்போது அவனுக்காக விரைந்து செல்வதும் தர்மமே. பலவீனமானவருக்காக உதவி புரிய உனது கையை உயர்த்துவதும் தர்மமே’ என நபி (ஸல்) கூறினார்கள்.
(ஆதாரம்: அஹ்மது)

இதுபோன்ற தர்ம சிந்தனைகளை இஸ்லாம் அதிகம் அதிகம் விதைத்திருக்கிறது. தேவையுடையவர்களை வைத்து தர்மத்தின் நிலைகளும் மாறிவிடுகிறது. அதை செல்வத்துடன் மட்டும் இஸ்லாம் சுருக்கி மட்டுப்படுத்தவில்லை.

எனவே தேவையானவர்களுக்கு தேவையான சமயத்தில் வழங்கும் சிறிய நற்கருமங்களும் தர்மங்களே. இத்தகைய விசாலமான தர்மசிந்தனைகளை வாழ்வில் கடைப்பிடித்து தர்மசீலர்களாக வாழஅல்லாஹ் கிருபை செய்யட்டும்.

அப்துல்லாஹ்

Post a Comment

0 Comments