Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ஆயிரம் ஊழியர்களை டிஸ்மிஸ் செய்த மைக்ரோசாப்ட் நிறுவனம்! காரணம் என்ன?


மைக்ரோசாப்ட்டின் பல்வேறு பிரிவுகளில் இருந்து ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் பல்வேறு பிரிவுகளில் பணிநீக்கங்களை அறிவித்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய சுற்று பணிநீக்கங்களில் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் சரியான எண்ணிக்கையைப் பகிர்ந்து கொள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் மறுத்தாலும், கிட்டத்தட்ட 1000 ஊழியர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக வலைத்தளங்களில் பல மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்கள் தாங்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.



மைக்ரோசாப்ட் மூத்த மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியின் பணியிடத்தில் தயாரிப்பு மேற்பார்வையாளரான கே.சி லெம்சன் என்ற பெயரில் ஒரு ட்விட்டர் பயனர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறினார். லெம்சனுடன் சேர்ந்து, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றிய பல ஊழியர்களும் தற்போதைய பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சமீபத்திய பணிநீக்கங்களைப் பற்றி மைக்ரோசாப்ட் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், “எல்லா நிறுவனங்களைப் போலவே, நாங்கள் எங்கள் நிறுவன முன்னுரிமைகளை அடிக்கடி கருத்தில் கொள்கிறோம். மேலும் அதற்கேற்ப சில கட்டமைப்பு மாற்றங்களைச் செய்கிறோம். நாங்கள் எங்கள் நிறுவனத்தில் ஒரு நிலைப்பாட்டை எடுப்போம் மற்றும் வருடத்திற்கு ஒருமுறை சில மாற்றங்களை செய்வோம்” என்று குறிப்பிட்டார்.



மைக்ரோசாப்டின் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான இந்த நடவடிக்கை ஜூலை மாதத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டது. சத்யா நாதெள்ளா தலைமையிலான அந்நிறுவனம் அதன் 180,000 பணியாளர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களை பணிநீக்கம் செய்ய ஏற்கனவே திட்டமிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஒரே தொழில்நுட்ப நிறுவனம் மைக்ரோசாப்ட் மட்டுமல்ல. மார்க் சக்கர்பெர்க்கிற்குச் சொந்தமான மெட்டா நிறுவனமும் வருவாய் இழப்பைச் சமாளிக்க அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களைக் குறைக்க திட்டமிட்டுள்ளது. அறிக்கைகளின்படி, மெட்டா நிறுவனம் தனது ஊழியர்களில் 15 சதவீதத்தை (அல்லது 12,000 ஊழியர்களை) பணிநீக்கம் செய்யலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் சமீபத்தில் கூகுள் நிறுவனமும் புதிய பணியமர்த்தும் செயலை குறைக்கப்போவதாக அறிவித்தது. அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை மிகவும் முக்கியமான வேலைவாய்ப்புகளை கூகுள் தொடர்ந்து ஆதரிக்கும் என்று தெரிவித்தார்.

Post a Comment

0 Comments