Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ஐ.நாவின் ஆதாரங்களை திரட்டும் பொறிமுறையில் முன்னேற்றம் - தமிழர் உரிமைக்குழு வரவேற்பு...!



ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் விரிவான அறிக்கை மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தின் (OHCHR), இலங்கைக்கான பொறுப்புக்கூறல் திட்டக்குழு, இலங்கையில் நடந்த சர்வதேச குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரிப்பதில் அடைந்துவரும் முன்னேற்றத்தையும் தமிழர் உரிமைக்குழு வரவேற்பதாக அறிவித்துள்ளது.

குறித்த குழுவின் தலைவர், நவரத்தினம் சிறீ நாராயணதாஸினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை பொறுப்புக்கூற வைக்கும் முயற்சிகள் வரவேற்கத்தக்கது எனினும், தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றுக்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு (ICC) பாரப்படுத்த வேண்டும் என்ற பாரம்பரிய தமிழர் தாயகத்தில் வாழும் ஈழத் தமிழர்களினதும் புலம்பெயர் தமிழர்களினதும் தொடர்ச்சியான கோரிக்கையை நிவர்த்தி செய்வதற்கான வலுவான நடவடிக்கையை சபையால் முன்னெடுக்க முடியவில்லை.

இந்தத் தீர்மானம் இலங்கையின் தற்போதைய கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழலை விசாரித்து வழக்குத் தொடர வேண்டியதன் அவசியத்தையும் அங்கீகரிக்கும் அதேவேளை, பல தசாப்தங்களாக நடந்த அட்டூழிய குற்றங்களுடனான இன மோதலும் தமிழர்கள் மீதான கொடூரமான போருமே தவிர்க்க முடியாதபடி, பொருளாதார சீரழிவுக்கு வழிவகுத்த இந்த ஆழமான நெருக்கடிக்கான அடிப்படை காரணம் என்பதையும் சர்வதேச சமூகம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

அது மேலும், ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து ஒரு தசாப்தம் கழிந்த பின்பும் குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், முன்னொருபோதும் இல்லாத வகையிலான இராணுவச் செலவுகள், கடுமையான இராணுவமயமாக்கல், துஷ்பிரயோகம், அச்சுறுத்தல், வலிந்து காணாமலாக்கப்படுதல்கள், சித்திரவதைகள், கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறைகள், நில அபகரிப்பு, கலாசார சீரழிவு மற்றும் பாரம்பரிய தமிழர் பகுதிகளில் அரச இயந்திரத்தின் ஆதரவுடன் பலவந்த குடியேற்றம் ஆகியன தீவிரமடைவதற்கு வழிவகுத்துள்ளது.

சமீபத்திய ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வை தொடர்ந்து, ஈழத் தமிழ் மக்களுக்கான உய்த்துணரக்கூடிய நீதி மற்றும் பொறுப்புக்கூறலை முன்னகர்த்துவதற்கு, சர்வதேச சட்டம் மற்றும் மனித உரிமை கோட்பாடுகளின் கீழ் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் பின்பற்றப்பட வேண்டும் என்று தமிழர் உரிமைக்குழு உறுதியாக நம்புகிறது.

இந்த அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சாட்சியச் சேகரிப்பு பொறிமுறையை நீடித்தலையும் வலுப்படுத்துதலையும் உள்ளடக்கியுள்ளதுடன், எதிர்கால நீதி மற்றும் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை முன்னேற்ற உதவும் ஒரு முக்கியமான நகர்வாகவும், இந்தக் கொடூரமான குற்றங்களை இழைத்த குற்றவாளிகளுக்கு தெளிவான எச்சரிக்கையாகவும் உள்ளது.

உறுப்பு நாடுகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், ஐ.நா அதிகாரிகள், ஈழம் மற்றும் உலகெங்கிலும் உள்ள சக தமிழ் ஆர்வலர்கள் மற்றும் இலங்கைத்தீவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஆகியோருடனான ஒரு மாத கால ஈடுபாட்டின் ஒரு பகுதியாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) தமிழர் உரிமைக் குழுவின் கன்னிப் பரப்புரையையும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது பொதுக் கூட்டத்தொடர் தமிழர் உரிமைக் குழுவுக்கு எமது பரப்புரைப் பயணத்தில் குறிப்பிடத்தக்க அனுபவத்தை பெறுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை எவ்வாறு செயல்படுகிறது என்பதை புரிந்துகொள்வதில் இருந்து, முக்கிய முடிவெடுப்பவர்களுடன் தொடர்புகொள்வது மற்றும் சக புலம்பெயர் அமைப்பினர் மற்றும் தாயகத்தை சார்ந்த ஆர்வலர்களுடன் இணைந்து நமது மக்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறலை பெறுவது வரை அறிந்துகொள்வதில் எமக்கிருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் மனித உரிமைகள் சபையில் எமது பிரதிநிதிகள் குழுவின் கன்னிப் பிரசன்னம் ஒரு பெரு வெற்றியாக அமைந்தது என்றே கருதுகிறோம் என்றார்.

நன்றி...
வீரகேசரி

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments