Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

உருதுமொழிக்கு சேவையாற்றிவரும் எழுத்தாளர்கள், புத்திஜீவிகளுக்கு கௌரவம்...!

 

உருது மொழிக்கு சேவையாற்றிவரும் 16 எழுத்தாளர்களும் புத்திஜீவிகளும் 'தஹ்சீப் -இ-உருது' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர். புதுடில்லியிலுள்ள இந்திய இஸ்லாமிய மரபுரிமை மையம் ஏற்பாடு செய்திருந்த 'உருது: இந்தியாவின் ஒரு மொழி' என்ற தொனிப்பொருளிலான கருத்தரங்கிலேயே இம்மொழிக்கு சேவையாற்றுபவர்கள் இவ்வாறு கௌரவிக்கப்பட்டு இருக்கின்றனர்.

இக்கருத்தரங்கில் உரையாற்றிய இந்திய வெகுஜன தொடர்பாடல் நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சஞ்ஜய் திவேதி, 'உருது இந்தியாவின் ஒரு மொழி. அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்தியா ஒன்றாக இருந்தபோது, உருது மொழி செய்திப் பத்திரிகைகளது உரிமையாளர்களாகவும் ஆசிரியர்களாகவும் பெரும்பாலான இந்துக்கள் இருந்துள்ளனர். இப்பத்திரிகைகள் இந்தியாவின் சுதந்திரத்திற்காக குரல் கொடுத்துள்ளன. கோபிசந்த் நரங் என்பவர் மேற்கின் அறிவை உருது மொழியுடன் இணைத்து விரிவுபடுத்தினார். வர்த்தகர்கள் உருது மொழியில் பணத்தை முதலீடு செய்தனர். இம்மொழிக்கு சந்தையும் எதிர்காலமும் இருந்தமையே காரணம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய இந்திய இஸ்லாமிய மரபுரிமை மையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் லியாகத் ஹுஸைன் மொய்னி, 'உருது மொழியை உள்ளூர் மொழியுடன் தொடர்புபடுத்தி உருது இலக்கியத்திற்கு சூஃபிகள் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். ஹஸ்ரத் அமீர் குஸ்ரு உருது மொழிக்கு அதிகாரம் அளித்தார். இந்துக் கவிஞர்கள் நாத் மற்றும் ஹம்த் எழுதும் போது, இக்பால் ராம் மீது நாஜிம் எழுதிக் கொண்டிருந்தார். உருது என்பது மொழியல்ல, அது கலாச்சாரத்தின் பெயர்' என்று கூறினார்.

இந்திய சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி, 10 வீதம் அல்லது அதற்கு மேற்பட்ட முஸ்லிம் மக்கள்தொகையைக் கொண்ட அனைத்து மாநிலங்களிலும் உருது மொழிக்கு இரண்டாவது உத்தியோகபூர்வ மொழி அந்தஸ்து வழங்குவதற்கான தீர்மானம் இக்கருத்தரங்கின் போது நிறைவேற்றப்பட்டுள்ளது என்று ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments