Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இஸ்லாத்தில் வறுமை ஒழிப்பு...!



வறுமை என்பது உணவு, உடை, உறைவிடம், சுத்தமான குடிநீர், கல்வி பெறும் வாய்ப்பு, சமூக மதிப்புப் பெறுதல் போன்ற வாழ்க்கைத் தரத்தை தீர்மானிக்கின்ற விடயங்களை இழந்த நிலையாகும். இது பொருளாதாரப் பிரச்சினை மாத்திரமல்ல. சமூகம், மானுடம் மற்றும் அரசியல் சார்ந்த பிரச்சினையும் கூட.

சமூகத்தின் வளர்ச்சியிலும் நாட்டின் வளர்ச்சியிலும் அதன் முன்னேற்றத்திலும் பங்களிப்புச் செய்ய முடியாதவனாக வறுமை மனிதனை முடக்கிவிடும். வெறுப்பு, பொறாமை போன்ற பல்வேறுபட்ட உள நோய்களை அது தூண்டிவிடும். சரி பிழை, நன்மை தீமைகளை பிரித்துப் பார்க்காது அதன் சட்டங்கள், பண்பாடுகளுக்கெதிராக நடக்கக்கூடியவர்களாக மனிதர்களை மாற்றி விடலாம்.

அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் வறுமையிலிருந்து பாதுகாவல் தேடியிருக்கிறார்கள்.'யா அல்லாஹ்! இறைநிராகரிப்பிலிருந்தும் வறுமையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்று பிரார்த்தனை செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். (ஆதாரம்: அபூதாவூத்)

எனவேதான் இஸ்லாம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதிலும் அதன் கோரப்பிடியிலிருந்து மனிதனை விடுவிப்பதிலும் அதிக கவனம் செலுத்தியிருக்கிறது.

செல்வம், சமூகத்தின் எல்லா தரப்பினருக்குமிடையே சுழன்றுகொண்டிருக்க வேண்டும் என்பது இஸ்லாமிய பொருளியலின் அடிப்படையாகும். அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் தொழுகையோடு இணைத்து ஸகாத்தைக் கட்டளையிட்டுள்ளான். தொழுகையை விடுவதும் ஸகாத்தை கொடுக்காதிருப்பதும் நரகம் செல்வதற்கு காரணமாகவும் அமைந்துவிடும். 'உங்களை நரகில் கொண்டு சேர்த்தது எது? என்று அந்தப்பாவிகளிடம் கேட்கப்படும். அவர்கள் (பதில்) கூறுவார்கள். 'தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. இன்னும் ஏழைக்கு உணவளிப்பவர்களாகவும் இருக்கவில்லை. 

' (அல் குர்ஆன்: முத்தஸ்ஸிர் - 42)

வறுமைப்பட்டோரையும் ஏழைகளையும் கவனிக்காது அக்கறையற்றிருப்பது இறை நிராகரிப்பினதும் மறுமை நாளை மறுப்பதினதும் அடையாளம் என அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. 'மறுமையை நிராகரிப்பவனை நீர் கவனித்தீரா? அவன் அனாதையை விரட்டிவிடுகிறான். அவன் ஏழைகளுக்கு உணவளிக்கத் தூண்டுவதுமில்லை.
' (அல் குர்ஆன்: மாஊன்- 1,2,3)

இஸ்லாம் ஸகாத் கடமையை வறுமை ஒழிப்பிற்கான மிகச்சிறந்த திட்டமாக அறிமுகம் செய்திருக்கிறது. அந்தவகையில் அல்லாஹ் வழங்கிய செல்வத்திலிருந்து அவனது கட்டளைப்படி வறியவர்களுக்கு உரிய பங்கை வழங்க வேண்டியது செல்வம் வழங்கப்பட்டவர்கள் மீதான கடமையாகும்.ஒரு காலத்தில் ஸகாத் கொடுக்கத் தகுதியானவர்கள் இருப்பார்கள். ஆனால் அதனைப் பெற்றுக்கொள்வதற்குத் தகுதியானவர்கள் இருக்கமாட்டார்கள். இப்படியொரு நிலை என் சமூகத்தில் தோன்றும் என நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்ததை உமர் (ரழி) அவர்களது ஆட்சிக்காலத்தில் யெமன் நாட்டின் ஆளுனர் முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்கள் சாத்தியப்படுத்திக் காட்டினார்கள். 
(ஆதாரம்: முஸ்லிம்)

அதேபோன்று உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹி) அவர்கள் மரணிக்கும்போது, தன் வீட்டைவிட்டு ஸகாத் பணத்துடன் வரும் நபர் அதை வாங்குவதற்குத் தகுதியானவர்கள் எவருமின்றி திரும்பிச்சென்றதாக வரலாறு சான்று பகர்கிறது. 
(ஆதாரம்: பைஹகி)

ஆகவே இஸ்லாம் எமக்கு வழிகாட்டியுள்ள ஸதகா, ஸகாத் போன்ற கடமைகளை மிகச்சரியாக நடைமுறைப்படுத்த முயற்சிப்போம். அது எம்மனைவரையும் பசி, பட்டினி, வறுமை, கடன் சுமை என்பவற்றிலிருந்து பாதுகாப்பதோடு பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைப் பாதுகாத்து சுபீட்சமான, செழிப்பான வாழ்க்கையை தந்தருளட்டும்.

Post a Comment

0 Comments