Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

செளதி அரேபிய கன்சல்டன்சி பணிகளில் குடிமக்களுக்கு முன்னுரிமை வழங்க முடிவு, இந்தியாவை பாதிக்குமா?


நாட்டின் 'கன்சல்டன்சி' எனப்படும் துறைசார் ஆலோசகர்களுக்கான பணிகளில் 40 சதவிகித உள்ளூர் மக்களை பணியமர்த்த செளதி அரேபியா முடிவு செய்துள்ளது.

முதலில் கன்சல்டன்சி பணிகளில் இருக்கும் சௌதி அரேபியர்களின் விகிதத்தை 2023 ஏப்ரல் 6ஆம் தேதிக்குள் இதை 35 சதவிகிதமாகவும், 2024, மார்ச் 25ஆம் தேதிக்குள் 40 சதவிகிதமாகவும் அதிகரிக்க செளதி அரேபியாவின் மனித வளங்கள் மற்றும் சமூக விவகாரங்களுக்கான அமைச்சகம், செவ்வாய்கிழமை முடிவு செய்தது.

இந்த முடிவின் தாக்கம் பல தொழில்துறைகளில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நிதி ஆலோசகர், வணிக ஆலோசனை நிபுணர், சைபர் பாதுகாப்பு ஆலோசகர், திட்ட மேலாண்மை மேலாளர், திட்ட மேலாண்மை பொறியாளர், திட்ட மேலாண்மை நிபுணர் போன்ற துறையினருக்கு இது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு பதிலாக செளதி குடிமக்களை வேலைக்கு அமர்த்துமாறு, செளதி நிறுவனங்கள் மீது நீண்ட காலமாக அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த முடிவு உள்ளூர் மக்களுக்கு அரசு வேலைகளில் வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று கூறப்படும் அதே நேரத்தில், இது உடனடி பலன்களை அளிக்காது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

கன்சல்டன்சி நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு 40 சதவிகித வேலைகளை உறுதி செய்யும் வகையில், ஆலோசனை சேவைகளின் விதிமுறைகளை திருத்தியமைக்கும் அமைச்சரவை முடிவை நிதியமைச்சர் முஹம்மது அல்-ஜதான் வெளியிட்டார்.



செளதி அரேபியாவில் வேலையின்மை:

செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான், கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்து வருகிறார். 2030க்குள் வேலையின்மை விகிதத்தை ஏழு சதவிகிதமாகக் குறைக்க அவர் இலக்கு நிர்ணயித்துள்ளார்.

பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தவும், தனது குடிமக்களுக்கு புதிய வேலைகளை உருவாக்கவும் சல்மான் விரும்புகிறார். உள்ளூர் மக்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைகளை அளிப்பது இதன் ஒரு பகுதியாகும்.

செளதி அரேபியாவில் வேலையின்மை விகிதம் 2017இல் 12.8% ஆக இருந்தது., இந்த விகிதம் தற்போது 9.7% ஆக குறைந்துள்ளது என்று கடந்த மாதம் புள்ளியியல் அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட புதிய தரவுகள் கூறுகின்றன.

செளதி அரேபியா: வேலைகளில் வெளிநாட்டினர்:

வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்துவதில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஜெர்மனிக்கு அடுத்தபடியாக செளதி அரேபியா உலகில் நான்காவது இடத்தில் உள்ளது.

இங்கு 70 லட்சத்திற்கும் மேற்பட்ட குடியேறிகள் தனியார் துறையில் பணிபுரிகின்றனர். செளதி அரேபியாவின் 68% வீடுகளில் பணியாளர்கள், வீட்டு வேலை செய்கிறார்கள்.

2017ஆம் ஆண்டில், வீட்டுப் பணியாளர்களுக்கான விசாக்கள் 14% அதிகரிக்கப்பட்டன. செளதி அரேபியாவில் 10 லட்சத்திற்கும் அதிகமான வீட்டுப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.



செளதி குடிமக்கள் இந்தத் துறையில் வேலை செய்வதை விரும்புவதில்லை:

செளதி அரேபியாவில், பல்வேறு துறைகளில் செளதி வம்சாவளியைச் சேர்ந்த தொழிலாளர்களை பணியமர்த்தும்படியான அழுத்தம், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கியது. இதன் காரணமாக விற்பனை, பேக்கரி, பர்னிச்சர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்களின் வேலைகளில் சிறிது பாதிப்பு ஏற்பட்டது.

அதற்கு முன் நகைகள் துறையிலும், வெளிநாட்டினருக்கு பதிலாக செளதி மக்களை வேலைக்கு வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன்பின் இத்துறையிலும் பெரும் கொந்தளிப்பு நிலவியது.

செளதி அரேபியாவில் உள்ள இந்திய மற்றும் பிலிப்பைன்ஸ் தொழிலாளர்கள், செளதி மக்கள் செய்ய விரும்பாத பணிகளைச் செய்து வருகின்றனர் என்பதை இங்கே நினைவில் கொள்ளவேண்டும்.

சமையலறை, கட்டுமானம் மற்றும் ஸ்டோர் கவுண்டர்களில் இருக்கும் தொழிலாளர்கள் இந்தியர்கள் அல்லது பிலிப்பைன்ஸைச் சேர்ந்தவர்கள். செளதி மக்கள் இந்த வேலையைச் செய்வதை விரும்புவதில்லை என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழின் செய்தி தெரிவிக்கிறது. .

செளதி அரேபியர்கள் குறைவான வேலை நேரத்தை விரும்புவதாகவும், அதே நேரத்தில் ஷிப்ட்களில் வேலை செய்ய விரும்புவதில்லை என்று 'அரப் ந்யூஸ்' ஊடகம் கூறுகிறது. செளதி மக்கள், வெளிநாட்டில் இருந்துவரும் பயிற்சி பெற்ற தொழிலாளர்களை விட இரண்டு மடங்கு சம்பளம் கேட்கிறார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.



மேற்காசியாவில் உள்ள இந்தியர்கள்:

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மிகப்பெரிய குடியேறிகள் குழு மேற்காசிய நாடுகளில் வாழ்கிறது.

1 கோடியே 75 லட்சம் இந்தியர்கள் குடியேறிகளாக வெளிநாடுகளில் வாழ்கின்றனர் என்று கொரோனா தொற்றுநோய்க்கு முந்தைய 2019 புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. இது உலகின் புலம்பெயர்ந்தோரில் 6.4 சதவிகிதமாகும். இது எந்த நாட்டிலும் இல்லாத மிகப்பெரிய அளவாகும்.

அதிக எண்ணிக்கையிலான இந்திய குடியேறிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ளனர். இதன் பிறகு அமெரிக்கா, செளதி அரேபியா மற்றும் ஒமன் வருகிறது என்று 2019 புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்தியாவின் மொத்த குடியேறிகளில் 12 முதல் 13 சதவிகிதம் பேர் செளதி அரேபியாவில் வாழ்கின்றனர் என்று 1990 முதல் 2019 வரையிலான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே, செளதி அரேபிய அரசின் இந்த முடிவு வெளிநாடுவாழ் இந்தியர்கள் மீது ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இரண்டாம் கட்ட செளதிமயமாக்கல் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர், கணக்காளர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் இதன் கீழ் கொண்டு வரப்பட்டனர்.

செளதி அரேபியாவில் 25 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வசித்து வந்தனர். ஆனால் 2011இல் செளதிமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்பட்டதிலிருந்து, ஏராளமான இந்தியர்கள் அங்கிருந்து திரும்பி வருகின்றனர் என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.



செளதியிலிருந்து திரும்பும் இந்தியர்கள்
:
செளதி அரேபியா உள்ளிட்ட மேற்காசிய நாடுகளில் இருந்து இந்தியர்கள் நாடு திரும்புவது குறித்த தகவல் சமீபத்தில் மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த காலகட்டத்தில் செளதி அரேபியா, குவைத், ஒமன், கத்தார், பஹ்ரைன் மற்றும் ஜோர்டன் ஆகிய நாடுகளில் இருந்து சுமார் 4 லட்சத்து 15 ஆயிரம் பேர் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஜூன் முதல் 2021 டிசம்பர் வரை மேற்காசிய நாடுகளில் இருந்து ஏராளமான இந்தியர்கள் திரும்பியுள்ளதாகவும், இவர்களில் 1,18,064 பேர் செளதி அரேபியாவிலிருந்து திரும்பியவர்கள் என்றும் மக்களவையில் வெளியுறவு இணை அமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்தார்.

இருப்பினும், இந்த காலகட்டத்தில் செளதி அரேபியா உட்பட ஆறு மேற்காசிய நாடுகளுக்கு 1,41,172 இந்தியர்கள் வேலைக்குச் சென்றுள்ளனர் என்றும் இந்திய அரசு தெரிவித்தது.

செளதிமயமாக்கலின் தாக்கம் என்ன?

செளதிமயமாக்கல் கொள்கையின் மூலம் நாட்டில் அதிகரித்து வரும் வேலையின்மையைக் கட்டுப்படுத்துவதே அந்த நாட்டு அரசின் இலக்காக இருந்தாலும், வேலையின்மையைக் குறைப்பதில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.



" செளதி தொழிலாளர்கள், தற்போதைய சேவைத் துறையின் கட்டமைப்பிற்கு மாறுவது எளிதானது அல்ல. இதற்கு பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம். இது கலாசார வடிவிலான மாற்றத்தின் விஷயம். சேவை, சில்லறை விற்பனை மற்றும் கட்டுமானத் துறைகளில் செளதி மக்கள் வேலை செய்வது எளிதானது அல்ல,"என்று வாஷிங்டனில் 'அரப் கல்ஃப் ஸ்டேட்ஸ் இன்ஸ்டிட்யூட்'-இன் கோரன் யுங், அரப் நியூஸிடம் கூறினார்.

"செளதி மக்கள் சோம்பேறிகள், அவர்கள் வேலை செய்ய விரும்பவில்லை என்று நிறுவனங்கள் கூறுகின்றன. செளதி மக்களை வேலை செய்யத்திறன் பெற்றவர்களாக ஆக்குவதோடு கூடவே இந்தக்கருத்தையும் மாற்றியாகவேண்டும். செளதிமயமாக்கல் ஒரு தவறான கொள்கை. அது முடிவுக்கு வர வேண்டும்," என்று செளதி கெஜட் நாளிதழில் கட்டுரையாளர் முகமது பாஸ்வானி எழுதியுள்ளார்.

உலகப் பொருளாதாரம் மற்றும் செளதி அரேபியாவின் நிலை:

சர்வதேச செலாவணி நிதியம் (ஐ.எம்.எஃப்) 2023ஆம் ஆண்டின் உலகப் பொருளாதாரத்திற்கான முன் அனுமானத்தை குறைத்துள்ளது. ரஷ்யா - யுக்ரேன் போர், விலைவாசி உயர்வு, வட்டி விகித அதிகரிப்பு மற்றும் உலகம் முழுவதும் கொரோனா தொற்றுநோயின் தாக்கம் போன்ற விஷயங்கள் இதற்கான காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

செவ்வாயன்று சர்வதேச செலாவணி நிதியம் வெளியிட்ட முன் கணிப்பில், அடுத்த ஆண்டு உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதத்தில் மேலும் சரிவு ஏற்படும் என்று கூறியுள்ளது. அடுத்த ஆண்டு இது 2.7 சதவிகிதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு அதாவது ஜூலையில், இது 2.9% ஆக இருக்கும் என்று ஐ.எம்.எஃப் கணித்திருந்தது. இந்த ஆண்டுக்கான அதன் கணிப்பு 3.2% ஆக உள்ளது.



தொடர்ச்சியான சந்தை பலவீனம், பணப்புழக்கம் இல்லாமை, பணவீக்கம் மற்றும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் அவற்றை எதிர்த்து வட்டி விகிதங்களை அதிகரிக்க முயற்சிப்பது, உலகப் பொருளாதாரத்தின் நிலைமையை மிகவும் நிலையற்றதாகவும் ஆபத்தானதாகவும் ஆக்குகிறது என்று அறிக்கை கூறுகிறது.

அதே நேரத்தில் சர்வதேச செலாவணி நிதியம் அடுந்த ஆண்டை ஒப்பிடும்போது, 2022ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான செளதி அரேபியாவின் வருடாந்திர உலகளாவிய உற்பத்தி முன்கணிப்பை, ஜூலையில் கூறப்பட்ட 4.5 சதவிகிதத்திலிருந்து அக்டோபர் மாதத்தில் 2.4 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. இருப்பினும், 2023க்கான இந்த மதிப்பீடு 3.7 சதவிகிதமாக மாறாமல் உள்ளது.

சர்வதேச செலாவணி நிதியம் 2022ஆம் ஆண்டிற்கான செளதி அரேபியாவின் உற்பத்திக்கான முன்கணிப்பு எண்ணிக்கையை இதுவரை மாற்றவில்லை. அது 7.6 சதவிகிதமாக உள்ளது. அதே நேரத்தில், அடுத்த ஆண்டு இது 3.7 சதவிகிதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

செளதியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2023 இல் 2.4 சதவிகிதம் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த ஆண்டு அதாவது 2024 இல் அது மேலும் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது 3.8 சதவிகிதமாக இருக்கும் என்று சர்வதேச செலாவணி நிதியம் கணித்துள்ளது.

நன்றி..
BBC

Post a Comment

0 Comments