டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெற்ற இந்திய மொபைல் மாநாட்டில், 5ஜி சேவையை பிரதமர் மோடி முறைப்படி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், 5ஜி சேவையால், அடுத்த சில ஆண்டுகளில் நாடு முழுவதும் வளர்ச்சி அடையும் என்றார்.
வெளிநாடுகள், 2ஜி, 3 ஜி, மற்றும் 4ஜி தொலைத்தொடர்பு சேவைகளை சார்ந்துள்ள நிலையில், 5ஜி தொழில்நுட்பத்தால் இந்தியா வரலாறு படைத்துள்ளது என்று அவர் தெரிவித்தார். டிஜிட்டல் இந்தியா கொள்கையால், 2014ல் 2 ஆக இருந்த மொபைல் தயாரிப்பு தொழிற்சாலைகள், தற்போது 200 ஆக பெருகிவிட்டன என்றும், இதனால் மொபைல் விலை குறைந்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
மொபைல் ஏற்றுமதி பூஜ்யமாக இருந்த நிலையில் இருந்து இன்று கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்திருப்பதாகவும் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.
நாட்டின் மூன்று பெரிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஆகியவற்றின் 5ஜி சேவையில் குஜராத், மகாராஷ்ட்ரா, ஒடிஷாவில் உள்ளவர்களுடன் பிரதமர் தொடர்பு கொண்டு பேசினார். முன்னதாக, 5 ஜி அடிப்படையிலான ட்ரோன்கள், இணைய பாதுகாப்பிற்கான செயற்கை நுண்ணறிவு சார்ந்த தளங்களை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
0 Comments