Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

புதிய சர்ச்சை: பவுலரை கேட்ச் பிடிக்க விடாமல் தடுத்த மேத்யூ வேட் - வைரலாகும் வீடியோ...

 

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான டி20 போட்டியில் பவுலரின் கைக்கு வந்த கேட்ச்சை பிடிக்க விடாமல் மேத்யூ வேட் தடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டி20 ஆட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

முன்னதாக இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்களை குவித்தது. இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதனிடையே இந்தப் போட்டியில் மார்க் வுட்டை கேட்ச் எடுக்கவிடாமல் மேத்யூ வேட் தடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



ஆஸ்திரேலிய இன்னிங்ஸின் போது ஆட்டத்தில் 17வது ஓவரை மார்க் வுட் வீசினார். அந்த ஓவரில் அவர் வீசிய 3வது பந்தை பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் தூக்கி அடிக்க முயன்றபோது பேட்டில் எட்ஜ் ஆகி பவுலருக்கே கேட்ச்சாக சென்றது. ஒரு புறம் மார்க் வுட் தன்னிடம் வந்த கேட்ச்சை பிடிப்பதற்காக முற்பட்டார். மற்றொருபுறம் நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த மேத்யூ வேட் பாதி களத்திற்கு ரன் ஓட முயன்றுவிட்டு, மீண்டும் தன் இடத்திற்கு திரும்பினார். அப்போது மார்க் வுட்டை கேட்ச் பிடிக்க விடாமல் கையால் தடுத்தார். இதனால் எளிதான கேட்ச் தவறிப்போனது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாக, பவுலர் கேட்ச் பிடிக்க முயலும்போது பேட்ஸ்மேன் அதை பிடிக்கவிடாமல் செய்வது, வேண்டுமென்றே குறுக்கே நிற்பது கிரிக்கெட் விதிமுறைகளுக்கு புறம்பானது ஆகும். இருப்பினும் இதுகுறித்து இங்கிலாந்து வீரர்கள் நடுவரிடம் மேல்முறையீடு செய்யவோ, புகார் அளிக்கவோ செய்யாமல் அப்படியே விட்டுவிட்டு சென்றனர்.

Post a Comment

0 Comments