காம்பியாவில் 66 குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பு (WHO) இந்திய மருந்து நிறுவனம் ஒன்று தயாரித்த நான்கு காய்ச்சல், சளி மற்றும் இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. நான்கு மருந்துகளை உட்கொண்ட குழந்தைகளுக்கு அதில் இருந்த கலப்படம் காரணமாக சீறுநீரக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
இதையடுத்து, மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்து கடைகளில் தாமாக இருமல் மருந்துகளை பெற்றோர்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என தமிழக மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். ஹரியாணாவில் இருந்து தயாராகும் அந்த நான்கு மருந்துகள் - ப்ரோமெதாசின் ஓரல் சொல்யூஷன்(Promethazine Oral Solution) , கோஃபெக்ஸ்மாலின் பேபி காஃப் சிரப் (Kofexmalin Baby Cough Syrup), மாகோஃப் பேபி காஃப் சிரப் (Makoff Baby Cough Syrup) மற்றும் மேக்ரிப் என் கோல்ட் சிரப் (Magrip N Cold Syrup) என்ற பெயரில் விற்கப்படுகின்றன. தற்போதுவரை அந்த தனியார் மருந்து நிறுவனம், உலக சுகாதார அமைப்பின் அறிவிப்பு குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
'பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு தேவை' இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அமைச்சர் தமிழக மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் சுப்பிரமணியம், உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ள நான்கு இருமல் மருந்துகள் குறித்த விழிப்புணர்வுடன் பெற்றோர் இருப்பது அவசியம் என்றும், தமிழகத்தில் அந்த மருந்துகளின் பயன்பாடு உள்ளதா என்று சோதனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டால் அதனை சாதாரணமானதாகக் கருதி, மருந்து கடைகளில் 'சிரப்' வாங்கி அருந்தும் பழக்கம் பலரிடம் இருக்கிறது. தற்போது பருவ மாற்றம் மற்றும் கொசு பிரச்னை காரணமாக ஏற்படும் காய்ச்சல் மற்றும் சளி, ஒரு வகையாக உள்ளது. மறுபுறம் டெங்கு காய்ச்சல் மற்றும் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா ஆகியவையும் உள்ளன.
இதுபோன்ற பிரச்னைகளை முன்னரே அடையாளம் கண்டு தீர்வு காண்பதுதான் சரியாக இருக்கும். பெற்றோர்கள் அருகில் உள்ள அரசு சுகாதார மையத்தில் இலவசமாக ஆலோசனை பெற்றுக்கொண்டு மருந்துகள் வாங்குவதுதான் சிறந்தது. மருந்து கடைகளிலும் மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகள் தருவதையும் தவிர்க்க வேண்டும்,''என்கிறார் மா. சுப்பிரமணியன்
0 Comments