Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இஸ்லாம் பாடநூல்களை நவ.15க்கு முன் வழங்கவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை...!



எதிர்காலத்தில் இடம்பெறும் திருத்தங்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலோசனைகளை பெறுமாறும் அதிகாரிகளுக்கு

அமைச்சர் அறிவுறுத்தல்:

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இஸ்லாம் பாடநூல்களை இம்மாதம் (நவம்பர்) 15 ஆம் திகதிக்குள் விநியோகிப்பதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு, கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த கல்வி அமைச்சின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேற்று பணிப்புரை விடுத்துள்ளார்.

இஸ்லாம் பாடப் புத்தகத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களின் நிமித்தம், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு இஸ்லாம் பாடப்புத்தகம் மீள விநியோகம் செய்யப்படாமை தொடர்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுத்தீனின் ஏற்பாட்டில் கல்வி அமைச்சருடன் நடைபெற்ற சந்திப்பிலேயே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த இஸ்லாம் பாடப் புத்தகம் மீளப் பெறப்பட்டு பத்து மாதங்களாகிவிட்டன.இருந்த போதிலும் அவை மீள மாணவர்களுக்கு வழங்கப்படாமை குறித்து நீதிக்கான மய்யம் அமைப்பினர் அரசியல் தலைவர்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினர் உட்பட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து கல்நதுரையாடி வருகின்றனர். இந்தப் பின்புலத்தில் மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி ஷஹ்பி எச். இஸ்மாயில் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் மௌலவி அர்க்கம் நூராமித் தலைமையிலான பிரதிநிதிகளையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுத்தீன் எம்.பி, பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் உள்ளிட்டோரையும் சந்தித்து கலந்துரையாடினர்.

இதனை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுத்தீன், கல்வி அமைச்சருடன் இந்த அவசர சந்திப்பை நேற்றுக்காலையில் ஏற்பாடு செய்திருந்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினருடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச்செயலாளர் அடங்கலான பிரதிநிநிதிகளும், மய்யத்தின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இச்சந்திப்பின் போது மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி ஷஹ்பி எச். இஸ்மாயில், 'மீளப் பெறப்பட்ட இஸ்லாம் பாடப் புத்தகம் 10 மாதங்கள் கடந்தும் இன்று வரை வழங்கப்படவில்லை' என்று சுட்டிக்காட்டினார். இச்சமயம் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட், 'பாடசாலை மாணவர்களின் நலன்கருதி இஸ்லாம் பாடப் புத்தகத்தை உடன் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பாடப்புத்தகத்தில் எதிர்காலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளுமிடத்து, திருத்தக்குழுவில் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை உறுப்பினர்களையும் இணைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

இக்கோரிக்கையின் அடிப்படையில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் இஸ்லாம் பாடநூல்களை இம்மாதம் (நவம்பர்) 15 ஆம் திகதிக்குள் விநியோகிப்பதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு அமைச்சர் சுசில் பிரேஜயந்த் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இதனடிப்படையில் கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பி.என். அயிலப்பெரும, பிரதி ஆணையாளர் நாயகம் எம்.தாஜுதீன் ஆகியோர் மய்யத்தின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு பாடசாலை இஸ்லாம் பாடப்புத்தகத்தை வழங்கி விநியோக நடவடிக்கையையும் ஆரம்பித்து வைத்தனர்.

அமைச்சருடனான இச்சந்திப்பில் உலமா சபையின் பொருளாளர் கலாநிதி அஸ்வர் அசாஹிம், மய்யத்தின் பொதுச் செயலாளர் கலாநிதி றியாத் ஏ.மஜீத், பிரதித் தலைவர் யூ.கே.எம்.றிம்சான், பொருளாளர் தொழிலதிபர் ஏ.ஏ. அஷ்ரஃப் அலி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

நன்றி...
தினகரன்

Post a Comment

0 Comments