போலந்து மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல் தொடர்பில் ஐ.நா பாதுகாப்புச் சபையில் அமெரிக்க மற்றும் அதன் கூட்டணி நாடுகள் ரஷ்யா மீது கடும் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை உக்ரைன் எல்லையை ஒட்டிய போலந்து கிராமத்தில் இடம்பெற்ற ஏவுகணை தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர்.
எனினும் இது ரஷ்ய தாக்குதல் என்பதற்கான சாத்தியம் குறைவு என்று நேட்டோ மற்றும் போலந்து குறிப்பிட்டுள்ளன. எனினும் இந்த ஏவுகணை உக்ரைனுடையது அல்ல என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற பாதுகாப்புச் சபை கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் லின்டா தோமஸ் கிரீன்பீல்ட் கூறும்போது, “அனைத்து உண்மைகளும் எமக்கு முழுமையாகத் தெரியாதபோதும், ஒன்று மாத்திரம் எமக்குத் தெரியும்.
ரஷ்யா அநாவசியமாக உக்ரைன் மீது படையெடுத்தது மற்றும் உக்ரைனிய பொதுக் கட்டமைப்புகள் மீது அண்மையில் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தாமல் இருந்திருந்தால் இந்த அவலம் ஒருபோதும் நிகழ்ந்திருக்காது” என்றார்.
போலந்து மற்றும் பிரிட்டன் தூதுவர்களும் இந்தக் கருத்தை பிரதிபலிக்கும் வகையில் ரஷ்யாவை குற்றம்சாட்டினர்.
எனினும் ரஷ்யா மற்றும் நேட்டோவுக்கு இடையே நேரடி மோதலைத் தூண்ட உக்ரைன் மற்றும் போலந்து முயற்சிப்பதாக ஐ.நாவுக்கான ரஷ்ய தூதுவர் வசிலி நெபென்சியா குற்றம் சாட்டினார்.
போலந்து நேட்டோ அங்கத்துவ நாடாக இருக்கும் நிலையில் இந்த மர்ம ஏவுகணைத் தாக்குதல் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments