ஏதாவதொரு விடயம் குறித்து சரியான முடிவைக் கூறக்கூடிய நண்பர்களுடனோ உறவினர்களுடனோ அல்லது தன்னைவிடவும் உயர்ந்தவர்களுடனோ கலந்தாலோசனை செய்து முடிவெடுத்து, அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு செயற்படுபவர்கள் சிறப்புற்று விளங்குகின்றனர்.
இதைவிடுத்து ஒரு செயலின் விளைவுகளை ஆராயாமல் சாதக பாதக அம்சங்களை அலசிப் பார்க்காமல், 'நான் செய்வேன், என்னால் முடியும்' எனத் தன்னிச்சையாகவும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாதும் செயற்படுபவர் தாழ்ந்த மனிதராகவே விளங்குவர். அல் குர்ஆனில் கலந்தாலோசித்தல் எனும் தலைப்பில் ஒரு அத்தியாயமே உள்ளது.
'யார் ஈமான் கொண்டவர்களாகவும் அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்தவர்களாகவும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு மறுமையில் ஈடேற்றமும் வெற்றியும் கிடைக்கும்.' 'அவர்கள் பெரும் பாவங்களையும் மானக்கேடான செயல்களையும் தவிர்த்துக் கொள்கிறார்கள்.' 'கோபம் வந்துவிட்டால் பொறுத்துக் கொள்கிறார்கள்.'
'அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்.'தொழுகையை நிலைநாட்டுகிறார்கள்'. 'அவர்கள் தங்களின் செயல்களை ஒருவருக்கொருவர் ஆலோசனை செய்து நடாத்துகிறார்கள்.'
'நாம் அவர்களுக்கு அளித்தவைகளில் இருந்து தானமும் செய்வார்கள்' (அல் குர்ஆன் 42:36-38)
இஸ்லாத்தில் தொழுகை ஓர் உயரிய வழிபாடாகும். அல்லாஹ்வை நெருங்குவதற்கான உன்னத வழிமுறைய அது. கலந்தாலோசனை செய்து காரியங்கள் ஆற்றுவதும் ஒரு வழிபாடுதான்.
அல்லாஹ்வின் அருளுக்கு உரித்தான செயல் தான் என்று இதற்கு பொருள் கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் எல்லா விடயங்கள் குறித்தும் தம் தோழர்களுடன் கலந்தாலோசனை செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்.
'அல்லாஹ்வின் தூதரைப் போன்று அதிகம் கலந்தாலோசனை செய்பவரை நாங்கள் பார்த்ததில்லை' என்று ஸஹாபாக்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
'கலந்தாலோசனை செய்து ஒரு முடிவுக்கு வந்த பின்னர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அதில் உறுதியுடன் இருங்கள்' (அல் குர்ஆன் 3:159)
என்று அல்லாஹ் குறிப்பிட்டிருக்கின்றான். அதனால் நம்மை விடவும் அறிவிலும் அனுபவத்திலும் பண்பிலும் சிறந்தவர்களிடம் ஆலோசனைகளைப் பெற்று அதற்கேற்ப நடந்து கொள்வதில் தான் நமது வெற்றி அடங்கியுள்ளது. அல்லாஹ் விரும்புவதும் அதைத் தான்.
தொகுப்பு: அபூமுஜாஹித்...
0 Comments