Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

அமில பரிசோதனையில் பா.ஜ.கவா ? தி.மு.கவா ?

கோவையில் எரிவாயு உருளை வெடித்து விபத்து ஏற்பட்டதென தமிழக அரசும், கோவையில் நடைபெற்றது தீவிரவாதிகளின் தற்கொலை தாக்குதலென தமிழக பா.ஜ.கவும் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கிறது.

இவ்விவகாரம் தொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் ஆவேசமான பேச்சுகள் மக்களிடத்தில் குறிப்பாக அறிவார்ந்த மக்களிடத்தில் நேர்நிலையான தாக்கங்களை ஏற்படுத்துவதற்கு பதிலாக, எதிர்நிலையான தாக்கங்களே ஏற்படுத்தி வருகிறது.

இவர் காவல்துறையில் பணியாற்றிய முன்னாள் உயரதிகாரி என்றாலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் உளவுத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்பான விவரங்களையும், அரசு மற்றும் காவல்துறை நிர்வாகத்திற்கு மட்டும் தெரிந்திருக்கும் சில ரகசிய விடயங்களை, இவர் பொதுவெளியில் பகிரங்கமாக வெளியிட்ட விவரங்களையும் உற்று நோக்கினால், தமிழக காவல்துறையின் உயர்மட்டத்தில் இருக்கும் சிலர், இரகசிய தகவல்களை பாஜக தரப்பிற்கும், ஆளுநர் தரப்பிற்கும் கசிய விடுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

இது தொடர்பாக தமிழக அரசு, பா.ஜ.க. தலைவரான அண்ணாமலை மீது அவதூறு அல்லது வேறு வகையினதான வழக்குகளை பதிவு செய்து விசாரிப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால் தமிழக அரசோ, எந்த ஒரு நடவடிக்கையும், தமிழக பா.ஜ.க. தலைவரான அண்ணாமலை மீது எடுக்காமல் நிதானமான அணுகுமுறையை கையாண்டு வருகிறது. இதன் பின்னணியில் மறைந்திருக்கும் அரசியல் என்னவென்பது கேள்வியாகிறது.

மேலும் வன்முறை சம்பவம் நடைபெற்ற இடத்தில் அரசியல் கட்சித்தலைவர்கள் துரிதமாக அங்கு செல்வது என்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தும், மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றச்சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் ஆலயத்திற்கு சென்றிருக்கிறார்.

கடந்த ஆட்சியில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற போது, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்கு எதிர்க்கட்சி தலைவர்களை அங்கு செல்ல அரசும், மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

அத்துடன் தமிழக அரசுக்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்க வேண்டிய மத்தியில் ஆளும் தேசிய கட்சியான பா.ஜ.க., கோவை சம்பவத்தில் மாநில அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்காததுடன், மாநில அரசின் நிர்வாக திறமையின்மை மீது குற்றம் சுமத்துவது தவறாகும்.

இதனிடையே கோவை சம்பவத்தை முன்னிறுத்தி அரசியல் ஆதாயம் தேட முயன்ற பா.ஜ.க.வின் மாநில தலைவரான அண்ணாமலையின் அதிரடி பேச்சால், அக்கட்சி, உட்கட்சி பூசலை எதிர்கொண்டிருக்கிறது. அண்ணாமலை கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு வருகை தந்த போது, அத்தொகுதியின் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசனும், கோவையில் செல்வாக்கு மிக்க பா.ஜ.க. தலைவரான முன்னாள் மக்களவை உறுப்பினரான சி.பி.இராதாகிருஷ்ணனும் உடன் வரவில்லை.

ஏனெனில் சி.பி.இராதாகிருஷ்ணன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் கோவை சம்பவத்தை முன்வைத்து, கோவையில் கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டபோது ஆஜரான அண்ணாமலை, ‘இந்த போராட்டத்தை மாநில பா.ஜ.க. அறிவிக்கவில்லை’ என்று தெரிவித்திருந்தார்.

இது அக்கட்சியின் இரண்டாம் கட்டத்தலைவர்களிடையே பெரும் அரசியல் ரீதியான அழுத்தத்தையும், உட்கட்சி பூசலையும் ஏற்படுத்தியது. என்பதும், ஏற்கனவே பா.ஜ.க. மாநில செயலாளரான கே டி ராகவன் விடயத்தில் அண்ணாமலை பக்கம் சார்ந்து மாநில நிர்வாகிகளை கதிகலங்கடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோவை சம்பவம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இவ்விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க பரிந்துரை செய்தார். கோவையில் சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று தமிழக காவல்துறையினர், ஏராளமான விவரங்களையும், தடயங்களையும் சேகரித்தனர்.

இவர்களது விசாரணை துரிதமாகவும், தூய்மையாகவும் நடைபெற்றது. ஆனால் இவ்வகாரத்தில் அண்டை மாநிலங்களுக்கும், அண்டை நாடுகளுக்கும் தொடர்பு இருக்கிறதென சந்தேகம் எழுந்ததால், இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு முகமை விசாரிப்பது தான் பொருத்தமென தீர்மானித்து அதன் விசாரணைக்கு முதல்வர் பரிந்துரை செய்தார். அவரது இந்த நடவடிக்கை தமிழக மக்களால் பாராட்டப்படுகிறது.

ஆனால் தமிழக அரசு மீது ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். அவர் அரசு அல்லாத தனியார் நிகழ்வில் பங்கு பற்றினாலும் அரசு மீது குற்றச்சாட்டு சுமத்துவதை கைவிடவில்லை. கோவை விவகாரத்தில் தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு உத்தரவிட தாமதப்படுத்தியது ஏன்? என்று வினா எழுப்பி இருக்கிறார்.

இதனிடையே கோவை சம்பவம் குறித்து, தேசிய புலனாய்வு முகமையின் விசாரணை எப்படி இருக்கும்? என்பதற்கு, அந்த முகமையின் கடந்த கால வரலாற்றை பலரும் உற்று நோக்குகிறார்கள். தேசிய புலனாய்வு முகமை இதற்கு முன் மலேக்கான் குண்டு வெடிப்பு, ஹைதராபாத் மசூதி குண்டுவெடிப்பு, சம்ஜோதா ரயில் குண்டுவெடிப்பு. போன்ற பல குண்டு வெடிப்புகளை விசாரித்து இருக்கிறது.

இதில் மத்திய பா.ஜ.க. அரசுக்கு நெருக்கமான தலைவரான பிரக்யா தாக்கூர் போன்ற தலைவர்களை தேசிய புலனாய்வு முகமை காப்பாற்றி இருக்கிறது என்பதனையும்; கவனத்தில் கொள்ள வேண்டும். இந்நிலையில் கோவை சம்பவத்திற்கு தேசிய புலனாய்வு முகமையின் விசாரணை, அரசியல் குறுக்கீடுகள் இன்றி நேர்மையாக நடைபெற வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.



ஆனால் தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் பா.ஜ.க., அதிலும் கோவையில் தங்களுக்கு செல்வாக்கு இருக்கிறது என்று உறுதியாக நம்பும் பா.ஜ.க., தேசிய புலனாய்வு முகாமையின் விசாரணை நேர்பட நடைபெறுவதற்கு முழுமையான ஒத்துழைப்பு அளிக்கும் என்பது சந்தேகம் தான்.

அதேதருணத்தில்கோவை சம்பவத்தை, ‘பயங்கரவாத செயல்’ எனக் கருதி, மத்திய அரசு தேசிய புலனாய்வு முகமை மூலம் விசாரணை என்கிற பெயரில் அதனை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தக்கூடும் என்றும், இவ்விகாரத்தில் திராவிட முறைமை பாணியிலான ஆட்சியை நன்முறையில் நடத்தி வரும் தி.மு.க. அரசு, ‘கண் கொத்தி பாம்பாக’ கவனித்து செயல்பட வேண்டியுள்ளது.

இதனிடையே கோவை சம்பவம் நடைபெற்ற போது ஊடகங்களுக்கு பேட்டியளித்த மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, 'கோவையில் தற்கொலை தாக்குதல் நடந்திருந்தால், இந்த ஆட்சி டிஸ்மிஸ் ஆகியிருக்கும்” எனப் பேசியிருக்கிறார். அவரது இந்த பேச்சுக்கு தமிழகத்தை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளும் வலிமையான கண்டனத்தை அறிக்கைகளின் மூலம் பதிவு செய்திருக்கிறமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments