Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பிரார்த்தனை பலனளிக்க...!


உலகம் உள்ளிட்ட அத்தனை படைப்புக்களையும் கனகச்சிதமாகப் படைத்து மனிதனும் ஏனைய உயிரினங்களும் வாழ்வதற்கு ஏற்ப அவற்றை ஒழுங்கமைத்து ஏற்பாடு செய்து வைத்திருப்பவன் சர்வ வல்லமை படைத்த அல்லாஹுதஆலா தான். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

இவ்வாறு எல்லா ஏற்பாடுகளையும் செய்து ​வைத்துள்ள அல்லாஹ் மனிதனைப் பூமிக்கான தன் பிரதிநிதியாக நியமித்திருக்கின்றான். அந்த பிரதிநிதித்துவப் பணியை நிறைவேற்றத் தேவையான வழிகாட்டல்களையும் அவனுக்கு தேவையான உதவி, ஒத்துழைப்புகளை வழங்கவும் உழைக்கவும் எல்லா படைப்புக்களையும் அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்துள்ளான். இதனை அருள்மறை, '(மனிதர்களே) வானங்களிலும் பூமியிலும் உள்ளவைகளை நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான்' (அல் குர்ஆன் 31:20) என்று குறிப்பிட்டிருக்கின்றது. அதற்கு ஏற்ப எல்லாப் படைப்புகளும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அதேநேரம் மனிதனின் பிரதிநிதித்துவப் பணியை அவனுக்கு நினைவூட்டவும் அதனை நிறைவேற்றுவதற்கு தேவையான வழிகாட்டல்களை வழங்கவும் என காலத்திற்கு காலம் இறைத்தூதர்களை முஹம்மத் (ஸல்) அவர்கள் வரையும் அவன் அனுப்பி வைத்தான். முஹம்மத் (ஸல்) அவர்களை முழு உலகிற்கான இறுதித்தூதராக அனுப்பி வைத்த அல்லாஹுதஆலா, உலகம் இருக்கும் வரையும் உயிரோட்டத்துடன் விளங்கும் அருள்மறையாம் அல் குர்ஆனை அருளி நடைமுறைப்படுத்திக் காட்டியுமுள்ளான்.

இவ்வாறெல்லாம் ஏற்பாடுகளை செய்து வைத்துள்ள அல்லாஹ், 'அல் முஃமினூன்' என்ற அத்தியாயத்தில் 'உங்கள் இறைவன் கூறுகிறான், 'நீங்கள் (உங்களுக்கு வேண்டியவை அனைத்தையும்) என்னிடமே கேளுங்கள். நான் உங்களுடைய பிரார்த்தைனையை அங்கீகரித்து கொள்வேன்'. (அல் குர்ஆன் 40:60) என்றும் 'அல் பகரா' என்ற அத்தியாயத்தில், '(நபியே) உங்களிடம் என்னுடைய அடியார்கள் என்னைப் பற்றிக் கேட்டால் (அதற்கு நீங்கள் கூறுங்கள்) நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கின்றேன். (எவரும்) என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடையளிப்பேன். ஆதலால் அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யவும். என்னையே நம்பிக்கை கொள்ளவும். (அதனால்) அவர்கள் நேரான வழியை அடைவார்கள். (அல் குர்ஆன் 2:186) என்றும் குறிப்பிட்டிருக்கின்றான்.

இந்த வசனங்கள் ஊடாக மனிதன் தன் எதிர்பார்ப்புகள், தேவைகளை அல்லாஹ்விடமே கோர வேண்டும் என்பதும் அவனுடனான தொடர்பில் தொடர்ந்திருக்க வேண்டும். அதிலிருந்து தூரே விலகிச் செல்லலாகாது என்பதும் தெளிவாகிறது.

இதேவேளை, நபி(ஸல்) அவர்கள், 'தன்னிடம் இரு கைகளையும் உயர்த்தி பிரார்த்தனை செய்யும் அடியானை வெறுங்கையோடு திருப்பி அனுப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகிறான்' என்று குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம்: அபூதாவூது, திர்மிதி, இப்னு மாஜா)

இந்த நபிமொழியும் மனிதன் தன் தேவைகள், எதிர்பார்ப்புக்கள் உள்ளிட்ட அனைத்துக்காகவும் அல்லாஹ்விடமே பிரார்த்னை செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. அத்தோடு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதன் முக்கியத்துவமும் சிறப்பும் தெளிவாக எடுத்தியம்பப்பட்டிருக்கின்றது. தம்மிடம் பிரார்த்தனை செய்யும் அடியானை வெறுங்கையோடு திருப்பி அனுப்ப அல்லாஹ் வெட்கப்படுகின்றான் என்றால், மனிதன் மீது அவன் எவ்வளவு தூரம் அன்பும் இரக்கமும் கருணையும் கொண்டுள்ளான் என்பதை எவராலும் இலகுவாகப் புரிந்துக்கொள்ள முடியும்.

மற்றொரு தடவை நபி (ஸல்) அவர்கள், 'இந்தப் பூமியில் இருக்கின்ற ஒரு முஸ்லிமான மனிதர் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யாமல் அவன் அவருக்கு அதனை வழங்கிவிடுகிறான் அல்லது அதற்கு பதிலாக அவருக்கு வருகின்ற ஒரு தீங்கை அல்லாஹ் தடுத்து விடுகிறான். ஆனால் அவர் பாவமான ஒன்றையோ உறவை முறிக்கும் காரியத்தையோ கேட்பவராக இருக்கக்கூடாது' என்று கூறியுள்ளார்கள். (ஆதாரம்: திர்மிதி)

இந்நபிமொழியானது பிரார்த்தனையில் கேட்கப்படக்கூடியதை அல்லாஹ் வழங்கக்கூடியவனாக இருக்கின்றான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றது. அவனது பிரார்த்தனைக்குரிய பதிலாக, சில வேளை அவனுக்கு நேரக்கூடிய தீங்கொன்றை தடுத்து விடக்கூடியதாக அமையலாம். ஆனால் ஒரு நிபந்தனை பிரார்த்தனை, உறவை முறிப்பதற்கானதாகவோ பாவமான காரியங்களில் ஈடுபடுவதற்கானதாகவோ இருக்கக்கூடாது.

'நான் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தேன். அவன் எனக்கு பதிலளிக்கவில்லை' என்று ஒருவர் அவசரப்படாத வரை அவரது பிரார்த்தனை அங்கீகரிக்கப்படத்தான் செய்யும்' என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

'அடியான் பாவமான ஒன்றையோ அல்லது உறவை முறிக்கும் ஒன்றையோ கேட்காத வரையும் அவன் அவசரப்படாத வரையும் அவனது பிரார்த்தனை அங்கீகரிக்கப்படத்தான் செய்யும். அச்சமயம் ஸஹாபாக்கள் அவசரப்படுதல் என்றால் என்ன? என்று நபிகளாரிடம் வினவிய போது, நபிகளார், நான் பிரார்த்தனை செய்தேன், ஆனாலும் என் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படவில்லை என்று ஒருவர் கூறுவது, நிராசை அடைந்து பிரார்த்தனையையே விட்டு விடுவது என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

இந்த நபிமொழிகள் பிரார்த்தனையின் அடித்தளத்தை எடுத்தியம்பிக் கொண்டிருக்கின்றன. பிரார்த்தனை என்பது முற்றிலும் அல்லாஹ்வில் நம்பிக்கையும் தவக்குலும் வைத்ததாக அமைந்திருக்க வேண்டியதாகும். அங்கு அவரசம், சலனங்கள், தளம்பல்கள், சந்தேகங்கள் இருக்கலாகாது. அல்லாஹ் நிச்சயம் நம் பிரார்த்தனைக்கு பதிலளிப்பான் என்ற நம்பிக்கையும் கண்ணோட்டமும் உறுதியாக இருப்பது அவசியம். இந்த உறுதிப்பாடு இல்லாததன் விளைவாகவே, 'நான் பிரார்த்தனை செய்தேன். நான் பிரார்த்தனை செய்தேன். என் பிரார்த்தனைக்கு பிரதிபலன் கிடைக்கப்பெறவில்லை' எனச்சிலர் அங்கலாய்கின்றனர். ஆனால் அல்லாஹ்வில் முற்றிலும் நம்பிக்கை வைத்த பிரார்த்தனைக்கு நிச்சயம் பதில் கிடைக்கப்பெறவே செய்யும்.

அதேநேரம் '(பிரார்த்தனையில்) எங்கள் இறைவனே... எங்களுக்கு (வேண்டியவைகளை எல்லாம்) இம்மையிலேயே அளித்துவிடுவாயாக' என்று கோருபவர்களும் மனிதர்களில் உண்டு. ஆனால் இத்தகையவர்களுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை. அன்றி எங்கள் இறைவனே... எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மை அளிப்பாயாக... மறுமையிலும் நன்மை அளிப்பாயாக... (நரக) நெருப்பின் வேதனையில் இருந்தும் எங்களை நீ பாதுகாப்பாயாக' எனக் கோருபவர்களும் மனிதர்களில் உண்டு. தாங்கள் செய்த (நற்செயல்களின் பயனை இம்மையிலும் மறுமையிலும் அடையும்) பாக்கியம் இவர்களுக்கு தான் உண்டு. தவிர (சிரமம் ஏற்படாத வண்ணம் இவர்களின் செயலைப் பற்றி மறுமையில்) அல்லாஹ் வெகுவிரைவாக (கேள்வி) கணக்கெடுப்பான்'. (அல் குர்அன் 2:200, 201,202)

இவ்வசனம் மனிதர்களில் இரு வகையானோர் காணப்படுவதை வெளிப்படுத்தி நிற்கிறது. அவர்களில் ஒரு வகையினர் உலக ஆதாயத்தையே இலக்காகக் கொண்டவர்கள். அவர்கள் அதற்காகவே உழைப்பர். அதனால் தான் ஒரு தடவை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், 'நாட்டுப்புற அறபிகள் ஹஜ்ஜின் போது, 'இறைவா... இவ்வருடத்தை மழையின், செழிப்பின், அழகிய குழந்தைகளின் வருடமாக ஆக்குவாயாக' எனப் பிரார்த்தனை செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்' எனக் குறிப்பிட்டார்கள்.

அல் குர்ஆனின் இவ்வசனங்கள் ஹஜ்ஜுடன் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் அவை என்றைக்கும் பொதுவானது. உயிரோட்டம் மிக்கது. ஏனென்றால் இவ்வாறான மக்கள் எல்லா காலகட்டங்களிலும் எல்லா இடங்களிலும் இருக்கவே செய்வர். அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தாலும் உலக ஆதாயத்தையே நோக்காகக் கொண்டிருப்பர். அவர்களுக்கு அல்லாஹ் குறிப்பிட்டளவு உலகில் வழங்குவான். ஆனால் மறுமையில் எந்தப் பங்கும் அவர்களுக்கு இராது. என்றாலும் இவ்வுலகிலும் மறு உலகிலும் நன்மைகளை வேண்டுபவர்கள் தான் அல்லாஹ்விடம் அதிக நன்மைகளைப் பெற்றுக்கொள்ளக் கூடியவர்களாவர்.

இறை நம்பிக்கையாளர்கள் உலக நன்மைகளை மாத்திரம் கோருவதை இஸ்லாம் விரும்பவில்லை. ஏனெனில் மனிதன் பூமிக்கான பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருப்பவன். அப்பிரதிநிதித்துவ பணியில் அவன் அல்லாஹ்வையே முன்னோக்க வேண்டும். இவ்வுலகிற்குள் தம்மை சிறைப்படுத்திக்கொள்ளவோ இவ்வுலக காட்சிகளுக்குள் மயங்கிவிடவோ கூடாது. இவ்வுலகின் சிறிய வரம்புகளை கடந்து அவற்றைவிடவும் சிறந்தவற்றுக்காகவும் விசாலமானவற்றுக்காகவும் அவர்கள் செயற்பட வேண்டும். உயர்ந்த விசாலமான உலகோடு தொடர்பில் இருந்தபடியே இவ்வுலகப் பணிகளை நிறைவேற்ற வேண்டும். அதுதான் இஸ்லாத்தின் எதிர்பார்ப்பு.

அதனால் தான் நபி (ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வை நீ நேரில் பார்ப்பது போன்று உணர்ந்து வணங்கு அல்லது அல்லாஹ்வை நீ நேரில் பார்ப்பது போன்று உணர முடியாவிட்டால், அல்லாஹ் உன்னைப் பார்க்கிறான் என்ற உணர்வில் வணங்கு' என்று குறிப்பிட்டார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

இந்த ஒழுங்கில் தான் பிரார்த்தைனையை அமைத்துக்கொள்ள வேண்டும். அதுவே நபி வழிமுறையாகும்.

ஆகவே அல்லாஹ்வின் கட்டளைகளுக்கும் வழிகாட்டல்களுக்கும் நபி(ஸல்) அவர்களின் போதனைகளுக்கும் அமைய பிரார்த்தனையை அமைத்துக் கொள்வோம். அதன் மூலம் அல்லாஹ்வின் பதில்களை நிச்சயம் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

- மர்லின் மரிக்கார் -

Post a Comment

0 Comments