மலேசியாவிலிருந்து யூரியா உரத்தை ஏற்றி வந்துள்ள கப்பலிலிருந்து உரத்தை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
22 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரத்தை ஏற்றிய கப்பல் நேற்று மாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
பெரும்போக நெல் மற்றும் சோள செய்கைக்கு தேவையான யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்காக உலக வங்கியினூடாக பெற்றுக்கொடுக்கப்படும் 105 மில்லியன் டொலர் நிதி வசதியின் கீழ் நாட்டை வந்தடைந்துள்ள இரண்டாவது கப்பல் இதுவென விவசாய அமைச்சு தெரிவித்தது.
உலக வங்கியின் கடன் வசதியின் கீழ் பெரும்போகத்திற்காக 35 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரம் கிடைத்துள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டது.
கடந்த சிறுபோகத்திற்காக இந்திய கடன் வசதியின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட 65 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரத்தில் 34 ஆயிரம் மெற்றிக் தொன் உரம் மீதமிருப்பதாக விவசாய அமைச்சு தெரிவிக்கின்றது.
கையிருப்பிலுள்ள யூரியா உரத்தை பெரும்போக நெற்செய்கைக்காக நாடளாவிய ரீதியில் கமநல சேவைகள் திணைக்களத்துக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு கூறியது.
இதேவேளை, இம்மாதம் 28 ஆம் திகதி யூரியா உரத்தை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது.
40 ஆயிரம் மெற்றிக் தொன் ப(B)ன்டி உரத்தை ஏற்றிய கப்பலொன்று அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டது.
0 Comments