Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

மோசமான தோல்விகளால் ரசிகர்களை ஏமாற்றிவிட்டதா கத்தார் அணி?

 


உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து வெளியேறும் முதல் அணியாகி இருக்கிறது போட்டிகளை நடத்தும் கத்தார். ஆனாலும் இதைத் தோல்வியாகவோ, ஏமாற்றமாகவோ கருதக்கூடாது என்கிறார் அந்த அணியின் மேலாளர் ஃபெலிக்ஸ் சான்செஸ்.

ஏ பிரிவில் எல்லா அணிகளும் இரண்டு போட்டிகளில் மோதியிருக்கும் நிலையில் கடைசி இடத்தைப் பிடித்திருக்கும் அணி என்ற வகையிலும் அடுத்த வரும் போட்டியில் வென்றாலும் முதல் இரு இடங்களைப் பெற முடியாது என்ற அடிப்படையிலும் கத்தார் அணி முதல் சுற்றிலேயே போட்டியில் இருந்து வெளியேறுவது உறுதியாகிவிட்டது.

முதல் போட்டியில் எக்வடோர் அணியுடன் மோதி தோல்வியடைந்திருந்த கத்தார், இரண்டாவது போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் செனகல் அணியுடன் மற்றொரு முறை தோல்வியடைந்தது.

இதன் பிறகும் அந்த அணிக்கு சிறு வாய்ப்பு இருந்தாலும், அதற்கடுத்து நடந்த எக்வடோர் - நெதர்லாந்து இடையிலான போட்டி ட்ராவில் முடிவடைந்ததால் அவ்விரு அணிகளும் இப்போது 4 புள்ளிகளைப் பெற்றுவிட்டன. இதையடுத்து கத்தார் அணிக்கு அடுத்து சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பு இல்லை.

இந்தத் தோல்வியை அடுத்து போட்டி நடந்த போட்டி நடந்த அல்-துமாமா மைதானத்துக்கு வெளியே கத்தார் ரசிகர்கள் கோபமாக நடந்து கொண்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. போட்டி முடிவடைவதற்கு முன்னரே கத்தார் அணி ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியேறுவதைக் காண முடிந்தது.

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல்சுற்றிலேயே போட்டியில் இருந்து வெளியேறும் இரண்டாவது அணியாகி இருக்கிறது கத்தார். இதற்கு முன்பு 2010-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு இந்த நிலை ஏற்பட்டது.

கத்தாரை பொறுத்தவரை உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதை பெருமையாகவும், பெருங்கனவாகவுமே கொண்டிருக்கிறது. பல்வேறு தடைகளையும் சர்ச்சைகளும் கடந்து இந்தப் போட்டிகளை கத்தார் நடத்திக் கொண்டிருக்கிறது.

சுமார்20 லட்சம் கோடி ரூபாய் வரை செலவு செய்து நவீன மைதானங்கள், விமான நிலையங்கள், ஹோட்டல்கள், சாலைகள், பொழுதுபோக்கு பூங்காங்கள் உள்ளிட்டவற்றை கத்தார் அமைத்திருக்கிறது.



ஃபிபா கால்பந்து தர வரிசையில் கத்தார் அணி 50-ஆவது இடத்தில் இருக்கிறது. அந்த அணி பெரிய பிரமாண்டமான வெற்றிகளைப் பெறும் என்று யாரும் கணிக்கவில்லை. இருப்பினும் ஆசிய கோப்பை சாம்பியனாக இருக்கும் கத்தார் அணி அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பு இருப்பதாகவே கருதப்பட்டது.

ஆனால் முதல் போட்டியில் ஒப்பீட்டளவில் வலிமை குறைந்த எக்வடோர் அணியுடன் தோற்றுப் போனதால் அந்த நம்பிக்கை தகரத் தொடங்கிவிட்டது.

கத்தாரின் ஆட்டம் எப்படி இருந்தது?

குரூப் ஏ பிரிவில் தனது முதலாவது ஆட்டத்தில் ஏமாற்றம் அளிக்கும் வகையிலேயே கத்தார் அணியின் ஆட்டம் இருந்தது. ஏனென்றால் கோலை நோக்கி ஒரு ஷாட்டை கூட கத்தார் அணியால் அடிக்க இயலவில்லை. எக்வடோர் அணியின் என்னர் வாலென்ஸிசியா முதல் பாதியிலேயே இரண்டு கோல்களை அடித்துவிட்டதால் பிற்பகுதி ஆட்டம் முழுவதும் அந்த அணியின் வசமே இருந்தது.

செனகல் அணியுடனான இரண்டாவது போட்டியிலும் முதல் பாதியில் கத்தார் அணிக்கு எதிராக இரண்டு கோல்கள் அடிக்கப்பட்டன. 40-ஆவது நிமிடத்தில் பாதுகாப்பு அரணில் கோட்டை விட்டதால் முதல் கோலை செனகல் அணி அடித்தது.பின்னர் 48-ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோல் விழுந்ததால் செனகல் அணி வலிமையான முன்னிலை பெற்றது.

எனினும் 78-ஆவது நிமிடத்தில் தனது முதல் கோலை அடித்து கத்தார் அணி நம்பிக்கை அளித்தது. உலகக் கோப்பை வரலாற்றில் கத்தார் அணி அடிக்கும் முதல் கோல் என்பதால் அரங்கம் முழுவதும் ஆரவாரமாக இருந்தது. ஆனால் 84-ஆவது நிமிடத்தில் செனகல் அணி மற்றொரு கோலை அடித்து கத்தாரின் நம்பிக்கையைத் தகர்த்தது.



கத்தார் அணி இதுவரை ஆடிய இரு போட்டிகளிலும் பந்தை வைத்திருக்கும் விகிதம், கோலை நோக்கி அடிக்கும் ஷாட்கள், பந்தைக் கடத்தும் எண்ணிக்கை ஆகியவை எதிரணியை விடக் குறைவாகவே இருந்திருக்கின்றன. இரு போட்டிகளிலுமே எதிரணியின் காப்பரணைத் தகர்த்து ஊடுருவ முடியாமல் கத்தார் அணி திணறியது.

12 ஆண்டு கனவு இரண்டு ஆட்டங்களில் முடிந்தது

12 ஆண்டுகளுக்கு முன்பு உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பு கத்தாருக்கு கிடைத்ததில் இருந்தே அதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கிவிட்டது அந்நாட்டு அரசு.

சௌவுதி அரேபியாவுடன் தகராறு, கொரானோ பெருந்தொற்று ஆகியவை தடைகளாக வந்து போயிருக்கின்றன. ஆனாலும் பெரிய அளவு தாமதமில்லாமல் போட்டிகளைத் திட்டமிட்டபடி தொடங்கிவிட்டது கத்தார்.

போட்டிக்கான அணிகளை இறுதி செய்யும் நிகழ்ச்சிகளும் பிரமாண்டமாக நடத்தப்பட்டன.



மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்தும் முதலாவது நாடு என்பதால் வளைகுடா நாடுகளின் தலைவர்கள் அணிவகுத்து தொடக்க நாள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள். கத்தாருடன் உரசல் இருக்கும் சவுதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மானின் வருகை முக்கியத்துவம் பெற்றது.

இவ்வளவு எதிர்பார்ப்புடன் தொடங்கிய கத்தாரின் உலகக் கோப்பை பயணம் முதல் சுற்றிலேயே முடிவுக்கு வருவது அந்த நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளிக்கும்.



‘தோல்வியாகவோ ஏமாற்றமாகவோ கருதக்கூடாது’

கத்தார் அணி உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெளியேறுவது உறுதியாகிவிட்ட நிலையில், இதை தோல்வியாகவோ ஏமாற்றமாகவோ கருதக்கூடாது என்று அந்த அணியின் மேலாளர் ஃபெலிக்ஸ் சான்செஸ் கூறியுள்ளார்.

போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அணிகளுக்குப் போட்டியளிக்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கமாக இருந்தது” என்று கூறினார்.

“சிறப்பான ஆட்டத்தை வழங்கும் வகையில் பல மாதங்களாக தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டிருந்தோம். ஆனால் சில நேரங்களில் நாம் எதிர்பார்ப்பது போல போட்டி நடக்காது. எதிரணியின் ஆட்டத்தைப் பொறுத்தும் அது இருக்கும். நாங்கள் எங்களது உயர்ந்த அளவு ஆட்டத்தை ஆடவில்லை” என்று அவர் கூறினார்.



உலகக் கோப்பை போட்டியில் இதுவரை நடந்தவை

கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் செலவில் மைதானங்கள், ஹோட்டல்கள், விமான நிலையங்கள், சாலைகள் உள்ளிட்ட வசதிகளுடன் ஏற்பாடுகள் பிரமாண்டமான செய்யப்பட்டிருக்கின்றன.

மாற்றுத்திறனாளி இளைஞர் குரான் வாசிக்க, ஹாலிவுட் நடிகர் மார்கன் ப்ரீமன் அவருடன் உரையாட உற்சாகமாகப்போட்டிகள் தொடங்கின.

முதல் போட்டியில் கத்தார் அணி எக்வடோர் அணியைத் தோற்கடித்து உள்ளூர் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. பி பிரிவில் இரான் அணியை இங்கிலாந்து அணி 6-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இந்தத் தொடரில் அதிர்ச்சியளிக்கும் அம்சமாக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் அர்ஜென்டினா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபிய அணி வீழ்த்தியது.

இ- பிரிவு ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் அணி கோஸ்டா ரிகா அணியை 7-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, இந்தப் போட்டியில் ஒரே ஆட்டத்தில் அதிக கோல்களை அடித்த அணி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.

இ-பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி அணி ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. போர்ச்சுகல், பெல்ஜியம், பிரேசில் ஆகிய முன்னணி அணிகள் தங்களது முதலாவது போட்டிகளில் வென்றிருக்கின்றன.

5 உலகக் கோப்பை போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை போர்சுகல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றிருக்கிறார்.

இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த கத்தார் அணி போட்டியில் இருந்து முதல் சுற்றிலேயே வெளியேறுகிறது.

நன்றி...
BBC-TAMIL

Post a Comment

0 Comments