Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பதற்றத்திற்கு இடையே ஷி-ஜோ பைடன் சந்திப்பு...!

கடந்த ஆண்டு ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின் முதல் முறையாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பின்னை அடுத்த வாரம் சந்திக்கவுள்ளார். வரும் திங்கட்கிழமை நடைபெறும் இந்த சந்திப்பில் தாய்வான் விவகாரம் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் இந்த இரு வல்லரசு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டிருக்கும் நிலையிலேயே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

சுயாட்சி இடம்பெறும் தாய்வானுக்கு சீனா உரிமை கோரி வருவதோடு அது ஆசியாவில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா சீனாவுக்கான கணினி சிப் தொழிநுட்ப அணுகலை கட்டுப்படுத்தி வருகிறது. தொலைபேசிகள் தொடக்கம் மின்சார கார் வரை அனைத்தின் வர்த்தகம் மற்றும் உற்பத்திக்கு இந்தத் தொழில்நுட்பம் அவசியம் என்ற நிலையில் சீன ஏற்றுமதிப் பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.



அண்மைக் காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்திருக்கும் சூழலில் அமெரிக்காவின் ஆசிய கூட்டாளிகளான இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் இரு தலைவர்களின் சந்திப்பை உன்னிப்பாக அவதானிக்கும்.

ஜி20 மாநாட்டை முன்னிட்டு பாலி நகரில் வரும் திங்கட்கிழமை (14) இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

கொவிட் பெருந்தொற்றின்போது ஷி பெரும்பாலான காலத்தை சீனாவிலேயே கழித்த நிலையில் அண்மையிலேயே வெளிநாட்டு பயணங்களை ஆரம்பித்தார்.

“தாய்வான் பற்றி நாம் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்பதில் உறுதியாக உள்ளேன். எம் இரு தரப்பினரதும் வரம்புகள் என்ன என்பது பற்றி இருவரும் பேச்சுவார்த்தையில் நிர்ணயிக்க நான் விரும்புகிறேன்” என்று வெள்ளை மாளிகையில் கடந்த வியாழக்கிழமை (10) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments