இன்றைய காலகட்டத்தில் நெருக்கடிகளும் பிரச்சினைகளும் நிறைந்துள்ளன. அவற்றில் இருந்து மீட்சி பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளும் இடம்பெற்ற வண்ணமுள்ளன. இவ்வாறான சூழலில் இஸ்லாம் அளித்துள்ள செய்தியையும் தூதையும் எடுத்து நோக்குவது பெரிதும் நன்மை பயக்கக்கூடியதாக இருக்கும்.
உலகில் அல்லாஹ்வின் அருள் மேலோங்கவும் அவனது உதவி மனித சமுதாயத்திற்கு கிடைக்கப்பெறவும் சில நியதிகளையும்,
ஒழுங்குகளையும் சில சட்டத்திட்டங்களையும் அவன் வைத்திருக்கின்றான். அந்த நியதிகளும் ஒழுங்குகளும் சட்டத்திட்டங்களும் கடைப்பிடிக்கப்படுகின்ற போது அல்லாஹ்வின் அருளும் உதவியும் நிச்சயம் கிடைக்கப்பெறும்.
இது தொடர்பில் அல்லாஹ் தன் அருள்மறையில், 'அந்த ஊர் மக்கள் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வின் கட்டளைப்படி) தக்வாவுடன் வாழ்ந்திருந்தால், அவர்களுக்கு நாம் வானத்திலிருந்து அருள் வாசல்களைத் திறந்து கொடுத்திருப்போம்' (அல் குர்ஆன்) என்று குறிப்பிட்டிருக்கின்றான்.
அதாவது, அல்லாஹ்வின் கட்டளைகளை வாழ்வுக்கான நேர்வழிகாட்டல்களாகவும் கொள்கையாகவும் சட்ட திட்டங்களாகவும் உபதேசங்களாகவும் ஏற்று அவற்றின் அடிப்படையில் அமல் செய்து வாழ்வொழுங்கை அமைத்துக்கொள்ளும் போது அல்லாஹ்வின் அருள்கள் நிச்சயம் கிடைக்கப்பெறும். அதனையே அல்லாஹ் இவ்வசனத்தின் ஊடாக, 'நாங்கள் வானத்திலிருந்து அருள்மாரி பொழிவோம், பரக்கத் செய்வோம். வாழ்க்கையில் பல்வேறு விதமான முன்னேற்றங்களை காட்டுவோம்' என்று குறிப்பிட்டிருக்கின்றான். இந்த அருளும் பரக்கத்தும் மனிதனுக்கு இன்றியமையாததாகும்.
ஆனால் அல்லாஹ் மனிதனுக்காக வகுத்தளித்து இருக்கும் வாழ்வொழுங்குகளை அவன் மீறிச் செயற்படும் போது தான் பல்வேறுபட்ட நெருக்கடிகளும் ஏற்படுகின்றன. 'அவர்கள் அல்லாஹ்வின் வழிகாட்டல்களைப் புறக்கணித்து தீமைகளில் ஈடுபட்டதன் விளைவாக அவர்களை நாங்கள் பிடித்துக்கொள்கின்றோம்' எனவும் அல்லாஹ் எச்சரித்திருக்கின்றான்.
எனவே அல்லாஹ்வின் நியதிகள், வாழ்வொழுங்குகள் மீறப்படுகின்ற நிலையில் தான் உலகில் சோதனைகளும் நெருக்கடிகளும் தோற்றம் பெற்று அதிகரிக்கின்றன. அவை துன்பங்களாகவும், அனர்த்தங்களாகவும் அழிவுகளாகவும் அமைகின்றன என்பது தெளிவாகின்றது. இந்த உண்மையை மனிதன் புரிந்துகொள்ளத் தவறும் போது பிரச்சினைகளும் நெருக்கடிகளும் தொடரவே செய்யும். அது தான் குர்ஆனின் செய்தியாகும்.
ஆகவே இறைவிசுவாசிகளாகிய நாம் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கும் நபி (ஸல்) அவர்களின் போதனைகளுக்கும் அமைய ஈமானுடனும் தக்வாவுடனும் வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும். அத்தோடு ஏனையவர்களுக்கும் முன்மாதிரியானவர்களாக வாழ்ந்து காட்ட வேண்டிய பொறுப்பைக் கொண்டவர்களாகவும் இருக்கின்றோம். அதனால் ஒவ்வொருவரும் பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து செயற்படுவது இன்றியமையாததாகும்.
எம்.எஸ். அப்துல் முஜீப்... (கபூரி)
0 Comments