Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இஸ்லாத்தின் பார்வையில் இயற்கை அனர்த்தங்கள்...!


இயற்கை என்று அழைக்கப்படுபவை அனைத்தும் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. மனிதர்களின் செயற்பாடுகளுக்கேற்ப அவற்றை சௌகரியங்களாகவோ சோதனைகளாகவோ அல்லாஹூத்தஆலா மாற்றியமைக்கின்றான்.

அல்லாஹ்வை மறுத்து நிராகரித்தவர்கள் மீது ஏவப்பட்ட இயற்கை அனர்த்தங்களை அவன் அதாப் (தண்டனை) என்னும் சொல்லினால் குறித்துக் காட்டுகிறான். நூஹ் (அலை) அவர்களுடைய சமூகத்தினரில் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் கப்பலில் ஏற்றப்பட்டு ஏனையவர்கள் வெள்ளத்தினால் அழிக்கப்பட்டார்கள். அதேபோன்று ஹூத் (அலை) அவர்களை ஏற்றுக்கொண்டவர்களைத் தவிர ஏனையவர்கள் இடியினால் அழிக்கப்பட்டார்கள்.

உலகத்தாருக்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட நபி முஹம்மத் (ஸல்) அவர்களது சமூகத்துக்கு இவ்வாறான தண்டனைகள் இறங்காவிட்டாலும் இயற்கை அனர்த்தங்கள் போன்றவற்றால் அவர்கள் சோதிக்கப்படுவார்கள் (முஸீபா) என அல்லாஹுத்தஆலா கூறியுள்ளான்.

'நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்' (அல் குர்ஆன் 2:156)

பூமியில் மனிதர்கள் அல்லாஹ்வை மறந்து வாழும் பொழுது, உங்களுக்கு மேலால் ஆட்டிப் படைக்கும் வல்லமை படைத்த ஒரு சக்தி இருக்கிறது என்பதை இந்த அனர்த்தங்கள் ஊடாக அவன் ஞாபகப்படுத்த விளைகிறான். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொறுமையுடன் அவற்றை எதிர்கொள்ள வேண்டும் (அல் குர்ஆன் 2:156) எனவும் இறைவனின் பால் மீள வேண்டும் (அல் குர்ஆன் 2:157) எனவும் அல்லாஹுதஆலா விசுவாசிகளிடம் எதிர்பார்க்கின்றான்.

ஆகவே, கழா எனும் அல்லாஹ்வின் முன்னளப்பை ஏற்றுக்கொண்டவர்களுக்கு தமது நம்பிக்கையைப் பலப்படுத்தக்கூடியவையாக அனர்த்தங்களால் வரும் சோதனைகள் அமைகின்றன. அதனால் சோதனைகள் அல்லாஹ்வின் நியதிக்குட்பட்டவை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அத்தோடு சோதனைகளின் போது துவண்டு விடாமல் அதனை நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் எதிர்கொள்வதற்கு எம்மைப் பழக்கப்படுத்திக் கொள்ளவும் தவறக்கூடாது.

அதேநேரம், 'விபசாரம் போன்ற பெரும்பாவங்கள் பூமியில் மலிந்து விடும் பொழுது அல்லாஹ் பருவ காலங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறி இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதன் போது அல்லாஹ்வை கடவுளாக ஏற்றுக்கொண்டவர்கள் தமது பாவங்களில் இருந்து மீண்டு அடுத்தவர்களையும் பாவங்களில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட வேண்டும். ஏனெனில் அல்லாஹ் ஒரு சமூகத்தில் அழிவை உண்டாக்க நாடினால் பாவம் செய்பவர்களுக்கு மட்டும் அதனைச் சாட்டிவிடுவதில்லை. பாவத்திலிருந்து அவர்களை மீட்காமல் தாம் மட்டும் நல்லவர்களாக இருக்க நினைப்பவர்களையும் சேர்த்தே அந்த அழிவின் பாதிப்புக்கு உட்படுத்துவான்.

அல்லாஹூத்தஆலா இயல்பாகத் தருகின்ற மழை கூட தடைப்பட்டு வரட்சியினால் மனிதர்கள் அல்லல்படுவதற்கு அவர்கள் பூமியில் மேற்கொள்கின்ற பாவங்கள் காரணமாக அமைகின்றன என்பதை சூறா நூஹில் அல்லாஹ் குறித்துக் காட்டுகின்றான். 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புக் கேளுங்கள். நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன். நீங்கள் மன்னிப்புக் கேட்பீர்களாயின் தடைப்பட்டிருக்கும் மழையை அவன் உங்கள் மீது தொடர்ந்தும் அனுப்புவான் என நூஹ் (அலை) அவர்கள் தமது சமூகத்தாருக்குச் சொன்னதை அல்லாஹ்தஆலா அல் குர்ஆனிலே குறிப்பிட்டுக் கூறியுள்ளான். ஆகவே இயற்கை அனர்த்தங்கள் வரும் போது நமது பாவங்களில் இருந்து மீட்சி பெறும் உணர்வை நாங்கள் பெற வேண்டும்.

மேலும் அல்லாஹ் அமைத்துத் தந்த ஒழுங்குகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் மனிதர்கள் செய்யும் தீங்குகளாலும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. அதனால் அல்லாஹ் ஏற்படுத்தி தந்துள்ள இயற்கை ஒழுங்குகளுக்கு கெடுதல்கள் ஏற்படாத வகையில் மனிதர்கள் தம் செயற்பாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறான விடயங்களில் பரஸ்பரம் உபதேசித்துக் கொள்வது முக்கியமானதாகும். இல்லையேல் மொத்த மனித சமூகமும் இதனால் பாதிக்கப்படுவதற்கு ஒவ்வொருவரும் காரணமாக வேண்டி வரும்.

தற்போதைய காலநிலை மாற்றத்துக்கு காடுகள் அழிக்கப்படுவதும், ஓசோன் மற்றும் வளிமண்டலக் கட்டமைப்புகளின் சமநிலைகளில் கெடுதல்களை ஏற்படுத்தும் வகையில் செயற்பாடுகளை அமைத்துக் கொள்வதும் முக்கிய காரணிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது அல்லாஹ்தஆலா ஏற்படுத்தி வைத்துள்ள இயற்கை சமநிலையில் சீர்குலைவை ஏற்படுத்துவதன் விளைவே இயற்கை அனர்த்தங்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இதனை அல் குர்ஆன் இற்றைக்கு 1400 வருடங்களுக்கு முன்பே, 'மனிதர்களது கரங்கள் செய்தவற்றின் காரணமாக கரையிலும் கடலிலும் அழிவுகள் ஏற்பட்டுள்ளன' (அல்குர்ஆன் ரூம்: 41) என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த வகையில் புவி வெப்பமடைதல் அதிகரிப்பு, மழைவீழச்சியில் சீரின்மை, வரட்சி காலநிலை உள்ளிட்ட பல நிலைமைகள் ஏற்பட்டிருகின்றன. இப்பின்னணியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள இயற்கை ஒழுங்கிலும் கட்டமைப்பிலும் சீர்குலைவு ஏற்படாத வகையில் வாழ்வொழுங்கை அமைத்துக்கொள்வதில் கூடுதல் கரிசனை காட்ட வேண்டும். குறிப்பாக மரங்களை வெட்டும் முன்னர் நாம் எத்தனை மரங்களை நட்டி சூழலுக்குப் பங்களிப்புச் செய்திருக்கிறோம் என்பதை சிந்தித்துப் பார்க்க தவறக் கூடாது.

அதேபோன்று மலை சார்ந்த பிரதேசங்களில் மேற்கொள்கின்ற தவறான செயற்பாடுகள் மண்சரிவுகள் உள்ளிட்ட அனர்த்தங்களுக்கும் மழைநீர் வழிந்தோடும் வடிகான்களையும் தாழ்நிலங்களையும் மறித்துக் கட்டடங்களை நிர்மாணித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளும் தாழ்நிலங்களில் வெள்ள நிலைமைகளை ஏற்படுகின்றன. இவை அனைத்துமே மனிதர்கள் அடுத்த மனிதர்களுக்குச் செய்யும் தீங்குகளே அன்றி வேறில்லை. இவற்றில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மனிதர்கள் மன்னிப்பு வழங்காத வரையில் எவ்வளவு தௌபா செய்தாலும் அல்லாஹ் அவற்றை மன்னிக்கப் போவதில்லை.

உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது. உனக்கு ஏதாவது ஒரு தீங்கு நேரிட்டால் அது உன்னால் தான் வந்தது (அல் குர்ஆன் 4:79) என அல்லாஹ் கூறுவதற்கிணங்க நாம் இழைக்கும் தீங்குகளினால் நமக்கும் நாட்டுக்கும் அழிவுகளும் சேதங்களும் ஏற்பட்டு விடாமல் பாதுகாப்பதும் இறைவிசுவாசிகளின் பொறுப்பாகும்.

எனவே அனர்த்தங்களில் இருந்து பாதுகாப்புப் பெற்றுக் கொள்வதிலும் அவற்றை தவிர்த்துக் கொள்வதற்கு பங்களிப்பதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாக அல்லாஹ் ஏற்படுத்தி வைத்துள்ள இயற்கை சமநிலை சீர்குலைவதற்கு துணைபுரியாத முன்மாதிரிச் சமூகமாக திகழுவோம்.

பியாஸ் முஹம்மத்

Post a Comment

0 Comments