உண்மையான முஸ்லிம், மனிதர்களிடம் மென்மையாகவும், நிதானமாகவும், நளினமாகவும் நடந்து கொள்வார். அவரது மென்மை நேசிக்கப்படும். அவரது நளினம் போற்றப்படும். அவரது நிதானம் புகழப்படும். ஏனெனில், இவை புகழத்தக்க நற்பண்புகளாகும். அதன்மூலம் மனிதர்களை நெருங்கி அவர்களது நேசத்திற்குரியவராகத் திகழ முடியும். அல்லாஹ் தனது அடியார்களிடம் அப்பண்புகளை விரும்புகிறான்.
நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரைப்போல் ஆகிவிடுவார். பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள். மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்.
மென்மையை வலியுறுத்தும் சான்றுகள், முஸ்லிமின் சமுதாய வாழ்வில் பிரதிபலிக்க வேண்டிய உயரிய பண்பு என்பதை உறுதிப்படுத்துகிறது. நளினம் என்பது அல்லாஹ்வின் உயரிய பண்புகளில் ஒன்றாகும். அது தனது அடியார்களிடம் பிரதிபலிப்பதை அல்லாஹ் விரும்புகிறான்.
'அல்லாஹ் மென்மையானவன். அனைத்து விஷயங்களிலும் மென்மையையே நேசிக்கிறான். கடினத்தன்மைக்கும், வேறெந்த பண்புகளுக்கும் அளிக்காத நற்கூலியை மென்மைக்கு அளிக்கிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
மற்றொரு சந்தர்ப்பத்தில் நபி(ஸல்) அவர்கள், 'மென்மை ஒரு விஷயத்திலிருந்தால் அதை அலங்கரிக்கவே செய்யும். மென்மை எந்த விஷயத்தில் அகற்றப்பட்டுள்ளதோ அதைக் கோரப்படுத்திவிடும்.' என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
பிறமனிதர்களுடன் பழகும்போது மென்மையை கைக்கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் போதித்துள்ளார்கள். அடியார்களிடம் மென்மையை வெளிப்படுத்தும் கிருபையாளனான அல்லாஹ்வின் மார்க்கத்தின்பால் அழைக்கும் முஸ்லிம், மனிதர்களிடம் மலர்ந்த முகத்துடனும் மென்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலைகள் எவ்வளவுதான் கோபத்தைத் தூண்டுவதாக இருந்தாலும் மென்மையை விட்டுவிடக்கூடாது.
'ஒரு கிராமவாசி மஸ்ஜிது (ந்நபவி)க்குள் சிறுநீர் கழித்துவிட்டார் அவரைத் தடுப்பதற்கு மக்கள் ஆவேசமடைந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'அவரை விட்டுவிடுங்கள்! அவரது சிறுநீர் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றி விடுங்கள். நீங்கள் இலகுபடுத்தவே அனுப்பப்பட்டீர்கள். சிரமப்படுத்த அனுப்பப்படவில்லை' என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம் - புஹாரி: 220)
மூடிக்கிடக்கும் இதயங்களைத் திறக்கும் திறவுகோல்களாக மென்மையும், நளினமும், பெருந்தன்மையும் விளங்குகின்றன. முரட்டுத்தனத்தாலும், சிரமப்படுத்துவதாலும், மிரட்டுவதாலும் எதனையும் சாதித்துவிட முடியாது.
அதனால் தான் நபி(ஸல்) அவர்கள், நற்செய்தி கூறுங்கள்! வெறுப்படைய செய்யாதீர்கள், எளிதாக நடந்து கொள்ளுங்கள், சிரமப்படுத்தாதீர்கள்' என்று குறிப்பிட்டார்கள்.
(ஆதாரம் - புஹாரி: 6124)
மென்மையையும், நளினத்தையும், முகமலர்ச்சியையும் மக்கள் நேசிப்பார்கள். கடுமையையும், முரட்டுத்தனத்தையும் மக்கள் வெறுப்பார்கள் என்பதுதான் நபி(ஸல்) அவர்களின் இக்கூற்றுக்குக் காரணமாகும். அல்லாஹ்தஆலா தன் அருள்மறையில், கடுகடுப்பானவராகவும் கடின உள்ளம் கொண்டவராகவும் நீர் இருந்திருப்பீரானால் உம்மிடமிருந்து அவர்கள் வெருண்டோடியிருப்பார்கள் (அல் குர்ஆன் 3:159) என்று குறிப்பிட்டுள்ளான்.
இக்கருத்தையே அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் அவர்களது சகோதரர் ஹாரூன் (அலை) அவர்களையும் ஃபிர்அவ்னிடம் அனுப்பிவைத்தபோது கூறினான்.
'நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள். நிச்சயமாக அவன் மிக்க வரம்பு கடந்துவிட்டான். நீங்கள் அவனுக்கு நளினமாகவே உபதேசம் செய்யுங்கள். அவன் பயந்து நல்லுணர்ச்சி பெறலாம்' என்றும் கூறினோம்.
(அல்குர்அன் 20:43,44)
இம்மார்க்கத்தின் வழிகாட்டுதலில் மென்மை என்பது நன்மையின் சங்கமமாகும். அதனால் தான் நபி (ஸல்) அவர்கள், 'எவர் மென்மையை இழந்தாரோ அவர் நன்மையை இழந்தார்' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
(ஆதாரம்- முஸ்லிம்: 5053)
தனி மனிதர், குடும்பம், மற்றும் சமுதாயம் இந்த மென்மையை கடைபிடிக்கும்போது நன்மை அவர்களை சூழ்ந்து கொள்ளும். இத்தன்மை கொண்டவர்கள் மக்களில் தனித்தன்மை வாய்ந்தவர்களாக காட்சியளிப்பார்கள். அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள், 'ஆயிஷாவே! மென்மையாக நடந்துகொள்.
(ஆதாரம்- அஹ்மத்: 24734)
ஆகவே அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் அதிகம் விரும்பி வலியுறுத்தும் மென்மையையும் நளினத்தையும் வளர்த்துக் கொள்வோம்.
-அப்துர் ரஹ்மான்-
0 Comments