ஒரு முஸ்லிமிடம் இருக்க வேண்டிய குணநலன்களை இஸ்லாம் விரிவாக எடுத்துரைத்துள்ளது. இத்தகைய குணங்கள் இருந்தாலே அவன் முஸ்லிமென நற்பண்புகளுக்கு இஸ்லாம் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறது. தன்னுடைய வருகையின் நோக்கத்தைக் குறித்து நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடும்போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்.
'நற்குணங்களைப் பரிபூரணம் செய்வதற்காகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்'. (ஆதாரம்-: மாலிக்)
இதன்படி அல்லாஹ்வின் அருளுக்கும் நற்குணங்களுக்கும் இடையில் நெருங்கிய சம்பந்தம் உள்ளது என்பது தெளிவாகிறது. இஸ்லாம் கூறும் வணக்க வழிபாடுகளின் நோக்கமே நற்குணங்கள் தான் என்பதை அல் குர்ஆன் தெளிவாக எடுத்துக்கூறியுள்ளது. அதனால் நோக்கங்களைச் சரியாக புரிந்து கொள்ளாவிட்டால் வணக்கங்கள் அனைத்தும் வெறும் உடற்பயிற்சிகளாகவே அமைந்துவிடும்.
அந்த வகையில் நற்குணங்களில் பலவீனமாக இருப்பவன் இறை நம்பிக்கையிலும் (ஈமான்) பலவீனமானவனாகவே இருப்பான்’ என்று இஸ்லாம் கூறுகின்றது. நபி(ஸல்) அவர்கள், 'இறைவன் மீது ஆணை! அவன் இறை நம்பிக்கையாளன் அல்ல, இறைவன் மீது ஆணை! அவன் இறை நம்பிக்கையாளன் அல்ல, இறைவன் மீது ஆணை! அவன் இறை நம்பிக்கையாளன் அல்ல!’ என்று மூன்று தடவை கூற, நபித்தோழர்கள், 'அல்லாஹ்வின் தூதரே! யாரைக் குறித்து இவ்வாறு கூறுகின்றீர்கள்?' என்று வினவினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'எவனுடைய தீங்கிலிருந்து அண்டை வீட்டார் பாதுகாப்பு பெறவில்லையோ அவன்' என்றார்கள். (ஆதாரம்: முஸ்லிம், அஹ்மத்)
மற்றொரு சந்தர்ப்பத்தில் நபி(ஸல்) அவர்கள், 'இறை நம்பிக்கையும் வெட்கமும் இரண்டு கொம்புகள். ஒன்று போனால் மற்றொன்றும் போய்விடும்' என்று குறிப்பிட்டார்கள். (ஆதாரம்: தபரானி, ஹாகிம்)
இதன் ஊடாக முழுமையான இறைநம்பிக்கை கொண்ட ஒருவர், ஒருநாளும் வெட்கமற்ற முறையில் செயற்படமாட்டார் என்பதையே அண்ணலார் எடுத்தியம்பியுள்ளார்கள். நற்குணங்களைப் பேணுபவனுக்கு இவ்வுலகிலும் நன்மை, மறுமையிலும் நன்மை கிடைக்கப்பெறும். அதன் சிறப்புக்கள் குறித்து நாயகம் (ஸல்) அவர்கள், 'மறுமையில் நன்மை தீமை நிறுக்கப்படும் தராசில் அதிக கனம் தருவது நற்குணங்களே' என்றும் (ஆதாரம்: -அபூதாவூத், திர்மதி), 'நற்குணங்களில் பரிபூரணம் பெற்றவரே இறை நம்பிக்கையில் பரிபூரணம் பெற்றவராவார்’என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம்: -அபூதாவூத், அஹ்மத்)
'நான் அதிகம் நேசிப்பவரும், என்னோடு மறுமை நாளில் மிக நெருக்கமாக இருப்பவரும் யார் எனில், சிறந்த நற்குணங்கள் கொண்டவரே!' (ஆதாரம்: திர்மதி, அஹ்மத்) என்றும், 'சுவனத்தில் மனிதன் அதிகம் நுழைவதற்குக் காரணமாக அமைவது இறையச்சமும், நற்குணமும் தான்' என்றும் (ஆதாரம்: திர்மதி, இப்னு மாஜா) 'இரவெல்லாம் நின்று வணங்கி, பகலெல்லாம் நோன்பு நோற்பவனுக்கு கிடைக்கும் பாக்கியத்தைவிட நற்குணத்தால் சிறந்தவனுக்கு அதிக பாக்கியம் கிடைக்கும்' என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம்: அபூதாவூத், அஹ்மத்).
எனவே இம்மையிலும், மறுமையிலும் பல்வேறு நன்மைகள் பெற்றுத்தரும் நற்குணத்தில் சிறந்துவிளங்கி இறைவனின் அருளை நாம் அனைவரும் பெறுவோம்.
-அப்துல்லாஹ்-
0 Comments