Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

மறுமையின் சாதனைகளாக சோதனைகளை மாற்றுவது...!'சோதனைக்கு உள்ளான ஒருவர் இறைவன் இட்ட கட்டளைப்படி, 'இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்' (நிச்சயமாக நாம் இறைவனுக்கு உரியவர்கள், அவனிடமே திரும்பிச்செல்ல உள்ளவர்கள்) என்று கூறியபின் இறைவா, நான் படும் துன்பத்திற்கு கூலி வழங்குவாயாக, நான் இழந்ததை விட மேலானதைக் கொண்டு இதற்கு பகரம் வழங்குவாயாக' என்று பிரார்த்தித்தால் அவருக்கு இறைவன் மேலானதை வழங்குவான்'
(ஆதாரம்: முஸ்லிம்)


நோய் வரும்போது பொறுமையைக் கடைப்பிடித்து இறைவனை நினைவுகூர்ந்து துதித்தால் நமது ஆரோக்கியத்தை முன்பிருந்ததைவிட இறைவனே செம்மைப் படுத்துகிறான்.

இது குறித்து நபி (ஸல்) அவர்கள், 'ஒரு அடியான் நோய்வாய்ப்பட்டு அவனை விசாரிக்க வருவோரிடம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பானாயின், இறைவன் 'என் அடியான் மீது எனக்கு கடமை இருக்கிறது. அவனை நான் இறக்க வைப்பின் அவனை சொர்க்கத்தில் நுழைய வைப்பேன். அவனை நான் குணப்படுத்தினால் அவனுடைய சதையை விட சிறந்த சதையையும் அவனுடைய இரத்தத்தை விட சிறந்த இரத்தத்தையும் மாற்றி அவனுடைய தீமைகளை அவனை விட்டும் அப்புறப்படுத்தி விடுவேன்' என்று கூறுவான்.
(ஆதாரம்: முஅத்தா)

இப்னு அப்பாஸ் (ரழி) என்னிடம், 'சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம். (காட்டுங்கள்)' என்றேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணி தாம் அவர். இவர் (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கிறது. எனவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்' என்று கூறினார்கள். இந்தப் பெண்மணி, 'நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. 

அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள் எனக் கூறியதாக அதாஉ இப்னு அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
(ஆதாரம்- புஹாரி)

மேலும் உலக வாழ்க்கை என்பது பரீட்சை என்பதால் சில வேளைகளில் நோய் நிவாரணம் தாமதமாகும். அப்போதும் நாம் பொறுமையை இழக்காமல் புரிந்து கொள்ளவேண்டிய உண்மை என்னவென்றால் அதுவும் நமக்கு நன்மையைத் தாங்கி வருகிறது என்பதேயாகும். இறைவன் எம்மைப் பாவங்களை விட்டு எப்படி எப்படியெல்லாம் தூய்மைப்படுத்த விரும்புகிறான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், 'காய்ச்சலை நீங்கள் ஏசாதீர்கள், காரணம், நெருப்பு இரும்பை தூய்மைப் படுத்துவது போன்று அது உங்கள் பாவங்களை போக்கிவிடும்' என்று குறிப்பிட்டார்கள்.

அதேநேரம், முறைப்படி மருத்துவம் மேற்கொண்ட பிறகும் பொறுமையைக் கையாண்டும் போகப் போக நோய் நம்மை மரணத்தின் விளிம்புக்கு கொண்டு செல்லலாம். அப்போதும் நாம் பொறுமையையும் நம்பிக்கையையும் கைவிடக்கூடாது. 

ஆனால் சோதனைகள் எவ்வளவுதான் அதிகமானாலும் பொறுமையை இழந்து 'மரணத்தைத் தா' என்று இறைவனிடம் அவசரப்பட்டு பிரார்த்திக்கக் கூடாது. தற்கொலை அல்லது கருணைக்கொலை என்று எதையும் நாடக்கூடாது. மரணத்துக்கு முன்னதாக சோதனைகள் அதிகரித்தால் இறைவன் தன் அடியானை அவனது பாவங்கள் முழுமையாக கழுவப்பட்ட நிலையில் அவனது உயிரைக் கைப்பற்ற விரும்புகிறான் என்பதே பொருள். இதுவும் நபிகளாரின் கூற்றே.

நபி (ஸல்) அவர்கள், 'உங்களில் எவரும் உங்களுக்கு ஏற்படும் சோதனை காரணமாக மரணத்தை விரும்பி பிரார்த்திக்க வேண்டாம். அவ்வாறு நிர்பந்தம் ஏற்பட்டால் இவ்வாறு கேளுங்கள்: 'இறைவா எனக்கு வாழ்வு நல்லதாக இருக்கும் வரை என்னை வாழ வை. மரணம் நல்லதென்றால் என்னை மரணிக்கச் செய்வாயாக!'
(ஆதாரம்: புஹாரி)

ஆகவே எந்நிலையிலும் நிதானம் இழக்காமல் இறைவன் மீது முழுமையாக நம்பிக்கை கொண்டு செயற்படத் தவறக்கூடாது. அதன் ஊடாக இவ்வுலகில் ஏற்படும் சோதனைகளை மறுமை சாதனைகளாக ஆக்கிக்கொள்ளலாம்.

அப்துல் ரஹ்மான்

Post a Comment

0 Comments