Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

போதைப்பொருள் ஒழிப்பில் இஸ்லாத்தின் வகிபாகம்...!


இஸ்லாம் ஒரு பரிபூரணமான வாழ்க்கைத் திட்டம். அது முழு மனித சமுதாயத்திற்கும் எல்லாக் காலத்திற்குமேற்ற சிறந்த நடைமுறைகளைச் சொல்லித் தந்துள்ளது. புனிதமானதும் பூரணத்துவமானதுமான எமது மார்க்கம் மனிதன் தனது வாழ்க்கையை எல்லா நேரங்களிலும் தக்வா எனும் இறையச்சமிக்க பாதையில் கொண்டு செல்ல வலியுறுத்துகிறது.

'நான் மனிதர்களையும் ஜின்களையும் என்னை வணங்குவதற்காகவேயன்றி படைக்கவில்லை' என்ற அல் குர்ஆன் வசனத்திற்கமைய அல்லாஹ்வின் அற்புதமான படைப்பே மனிதர்களாவர்.

அவ்வகையில் மனிதர்களின் புத்தியை, சிந்தனையை மிக மோசமாகப் பாதிக்கக்கூடிய ஒன்றுதான் போதைப்பொருள் பாவனையாகும். மனிதர்களை அழிக்கக்கூடிய இப்போதைப்பொருள் பாவனையை இஸ்லாம் வன்மையாகவும், முற்று முழுதாகவும் கண்டித்துள்ளதோடு, அதில் எவ்வித சலுகைகளையும் அளிக்கவில்லை.

'பூமியில் உங்களுக்கு உண்ண அனுமதிக்கப்பட்ட நல்லவற்றை உண்ணுங்கள். ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்க எதிரியாவான்'. (சூரா பகறா : 168) என்ற அல் குர்ஆன் வசனம் இதற்கு தக்க சான்றாகும்.

ஒருமுறை நபி (ஸல்) அவர்கள், 'ஒரு காலம் வரும் மறுமை நெருங்கும் அக்காலத்தில் மதுவைக் குடிப்பார்கள். ஆனால் அதை மது என்று கூறாமல் வெவ்வேறு பெயர்களைக் கூறிக் கொண்டு அவற்றைப் பயன்படுத்துவார்கள்' என்று கூறியுள்ளார்கள்.

நபிகளாரின் இப்பொன்மொழிக்கேற்ப உலகில் இன்று ஹெரோயின், கொக்கெய்ன், மர்ஜுவானா, அபின், மது, கஞ்சா, பான் மசாலா, பெத்தனோல் ஊசிகள், போதை தரும் இன்ஹேலர்கள் என்று சமூகத்தில் போதைப்பொருட்கள் பலவிதப் பெயர்களுடன் உலாவிக் கொண்டிருக்கின்றன.

ஜாஹிலிய்யாக் கால மக்கள் போதைப்பொருள் பிரியர்களாக இருந்தார்கள். இஸ்லாம் இப்போதைப்பொருட் பாவனையை கட்டம் கட்டமாகவும், படிப்படியாகவும் குறைத்து, இஸ்லாத்திற்கு எதிரான ஒரு செயலாக இறுதியில் முற்றாக ஒழித்தது.

முதலில் போதைப்பொருட்களில் நன்மைகளை விட தீமைகளே அதிகம் என்று கூறிய அல்குர்ஆன், அடுத்து, போதை நிலையில் தொழுகைக்குச் செல்ல வேண்டாம் என்றது. அதனைத் தொடர்ந்து 'மதுபானமும், சூதாட்டமும், விக்கிரக வணக்கமும், அம்பெறிந்து குறி பார்ப்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களாகும். எனவே, இவைகளிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். நிச்சயமாக நீங்கள் வெற்றியடைவீர்கள்' (அல் மாயிதா : 90) என்ற வசனம் அருளப்பட்டது. அல்லாஹ்வின் இவ் வசனங்களுக்கு நபித் தோழர்களும், இறை விசுவாசிகளும் கட்டுப்பட்டு நடந்த விதம் அற்புதமானது. அவர்கள் இக்கட்டளைகளை செவிமடுத்தவுடன், தங்கள் கைகளில் இருந்த மதுபானக் கிண்ணங்களை தரையில் தூக்கி வீசினார்கள். வீதிகளில் இருந்த மதுபான பீப்பாக்களை கொட்டி வீதிகளில் ஓடவிட்டார்கள்.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்களிடம், தேன் அல்லது பார்ளி அல்லது கோதுமை என்பவற்றினாலான ஒரு போதைப்பானம் பற்றி வினவப்பட்டது. அதற்கு நபியவர்கள் 'போதையை ஏற்படுத்தும் அனைத்தும் ஷஹம்ர்' எனும் மதுபானமாகும். அனைத்து ஹம்ரும் ஹராமாகும்' என்று பதிலளித்தார்கள்.

ஒரு தடவை ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தான் மருந்தாக மதுபானம் அருந்துவதாகக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'அது மருந்தல்ல. உண்மையில் அது நோயாகும்' என்றார்கள் (ஆதாரம்: முஸ்லிம்). இன்னுமோர் சந்தர்ப்பத்தில், 'அல்லாஹ் நோயையும், மருந்தையும் இறக்கியுள்ளான். ஆகையால் மருந்து உபயோகிப்பீர்களாக. ஹராமானதைக் கொண்டு சிகிச்சை பெறாதிருப்பீர்களாக' (அபூதாவூத்) என்றார்கள்.



இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் போதைப்பொருட்களுக்கு இரண்டு தன்மைகள் இருப்பதாகக் கருதப்படுகின்றது. அதில் ஒன்று 'ரிஜ்ஸுன்' எனும் அசுத்தம், அருவருப்பு என்ற பண்பாகும். மற்றையது, 'மின் அமலிஷ் ஷத்தான்'. ஷத்தானின் பண்புகளில் இதுவும் ஒன்று'. போதைப்பொருள் பாவனை பெரும் பாவங்களில் ஒன்று. நபி (ஸல்) அவர்கள், 'ஒருவன் மது குடிக்கும் போது அவன் முஃமீனாகக் குடிக்கமாட்டான்' என்றுள்ளார்கள். (ஆதாரம்: புஹாரி) அதாவது, ஒருவன் மது அருந்தி போதையில் அவனுக்கு மரணம் நேர்ந்தால் அவன் காபிராகவே மரணிப்பான். அவ்வாறே அல்லாஹ்விடம் காணப்படும் மயக்கமல்லாத ஆனந்தமான அந்த மதுபானம் அவனுக்கு பருகக் கிடைக்காது.

ஸஹாபாக்கள் போதைப்பொருள் பாவனையை 'உம்முல் ஹபாஇஸ் - பாவங்களின் தாய்' என்றே அழைத்தார்கள். ஒருமுறை அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) போன்ற ஸஹாபாக்கள் மிக பெரியதும், மோசமானதுமான பாவச்செயல் எது என்று ஆலோசித்துக் கொண்டிருக்கும்போது அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) அவர்கள், 'ஸூர்புல் ஹம்ரி' - மது அருந்துதல் என்றார்கள்.

இவ்வாறு இஸ்லாத்தில் வெறுக்கத்தக்க ஒரு செயலாகவே போதைப்பொருள் பாவனை உள்ளது. போதை என்பது மனிதனை மிருக நிலைக்குத் தள்ளும் ஒரு வெறிச் செயல், தன்னிலை மறந்து சமூகத்தில் பாரதூரமான குற்றங்கள் புரிவதற்கு தூண்டும் ஒரு சக்தி, முழு சமுதாயத்தையும் அழிக்கும் ஒரு ஈனச் செயல் என இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நோக்கப்படுகிறது. அதனால் போதைப்பொருட்களிலிருந்து எமது முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்க அனைத்து தரப்பினரும் உழைக்க வேண்டும்.

'நீங்களே உங்களை கொலை செய்யாதீர்கள். அல்லாஹ் உங்கள் மீது அதிக அன்புடையவன்' (அந்நிஸா : 25) என்ற வசனத்திற்கு ஏற்ப மஸ்ஜித்களிலும், பாடசாலைகளிலும் போதைப்பொருள் தவிர்ப்பு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

எனவே, பொருளாதார கண்ணோட்டத்திலும், ஆன்மீகக் கண்ணோட்டத்திலும் நோக்கினால் போதைப்பொருட்கள் ஹராமானது என்ற கருத்தே பலமானது. அதனால் போதைப்பொருட்களை ஒழிப்பதில் முக்கிய வகிபாகத்தை இஸ்லாம் தனதாக்கிக் கொண்டுள்ளது என்றால் அது மிகையாகாது.

மௌலவி: எம்.ஐ.எம்.பைஸல்...
(பி.ஈ.டி.ரி.ஆர்.டி) ஆசிரியர்: அக்/முனவ்வறா ஜுனியர் கல்லூரி, 
பேஷ் இமாம்:
அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசல்

Post a Comment

0 Comments