Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

நபிகளார் கூறிய மறுமைக்காட்சி...!


ஒரு முறை நாங்கள் நபி(ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்திருந்திருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் சப்தமாகச் சிரித்தார்கள். அருகில் இருந்த உமர் (ரழி) அவர்கள் எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். தாங்கள் சிரித்ததற்கான விபரம் என்ன? என்று வினவினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், மறுமைக்காட்சி ஒன்று எனக்குக் காட்டப்பட்டது. அந்நாளில் எனது சமூகத்தில் உள்ள இருவர் அல்லாஹ்வின் முன்பாக வருவர். அவர்களில் ஒருவர் இன்னொருவரைப் பற்றி அல்லாஹ்விடம், 'உலகில் எனக்கு இவர் செய்த அநீதத்திற்கு இழப்பீடு வழங்குவாயாக' எனக் கோருவார். அதற்கு அல்லாஹ், இழப்பீடு வழங்க அவரிடம் எந்த நன்மையும் இல்லையே' என்பான்.

'அப்படியானால் எனது பாவங்களைத் தூக்கி அவர் மீது போடு' என்பார் அந்நபர். இதைக் கூறியதும் நபி (ஸல்) அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.

'அந்நாளில் ஒவ்வொரு மனிதனும் தனது பாவங்களை அடுத்தவர் மீது சாட்டிடவே முயற்சி செய்வான். இந்நிலையில் அவருக்கு ஏற்பட்ட நிலையைப் பார்த்தீர்களா? என்று தோழர்களிடம் கூறிவிட்டு மீண்டும் தொடர்ந்தார்கள்.

இங்கு முறையிட்டவரை நோக்கிய அல்லாஹ், 'சுவர்க்கத்தில் கொஞ்சம் மேல் நோக்கி பார்' என்பான். அவர் பார்ப்பார். அங்கே முத்துக்கள் பதிக்கப்பட்ட தங்க நகரங்களையும் மாளிகைகளையும் அவர் காண்பார். அப்போது ஆச்சரியத்தில் அவர், 'யா அல்லாஹ் இது எந்த இறைத்தூதருக்கு, எந்த உண்மையாளருக்கு, எந்தத் தியாகிக்கு உரியது? என்று வினவுவார். அதற்கு அல்லாஹ், 'இதற்கான விலை தந்தவருக்கு இது கிடைக்கப்பெறும்' என்பான். அப்போது அந்நபர், 'இதை விலைதந்து யார் வாங்க இயலும்?' என்று கேட்பார். அப்போது அல்லாஹ் 'உன்னால் முடியும்' என்று கூறுவான். 'உனது இந்த சகோதரனை மன்னிப்பதன் மூலம் அதனைச் செய்ய முடியும்' என்பான். அப்போது அந்நபர் உடனே, மன்னித்தேன் யா அல்லாஹ் என்பார். அப்போது அல்லாஹ் உனது சகோதரனதும் கையைப் பிடித்துக்கொண்டு சுவர்க்கத்தில் நுழைவாயாக' என்று கூறுவான்.

இந்த இனிய மறுமைக்காட்சியைக் கூறிய நபி (ஸல்) அவர்கள், 'உலகில் அல்லாஹ்வை அஞ்சி வாழுங்கள். உங்கள் சகோதரர்களுக்கு மத்தியில் இணக்கம் செய்து வையுங்கள். உங்கள் இறைவன் முஃமின்களுக்கு இடையில் இணக்கம் செய்து வைக்கிறான்' என்று கூறினார்கள்.

(ஆதாரம்: ஹாகிம், ஸஹீஹுல் இஸ்னத்)

எனவே நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்களுக்கும் போதனைகளுக்கும் அமைய வாழ்வை அமைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துவோம். அதன் ஊடாக மறுமையின் வெற்றிக்கு வித்திடலாம்.

தொகுப்பு: அபூமுஸாதிக்.

Post a Comment

0 Comments