Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ஸக்காத்: இஸ்லாமிய பொருளாதாரத்தின் அடிநாதம்...!


இஸ்லாம் மனித தேவைகள் குறித்தும் கவனம் செலுத்தும் மார்க்கம். மனிதனை சமூகத்தின் அங்கமாக நோக்கும் இம்மார்க்கம் அதிலிருக்கின்ற பலவீனர்களையும் கவனத்திலெடுக்கத் தவறவில்லை. அநாதைகள், ஏழைகள், வழிப்போக்கர்கள், அடிமைகள் போன்ற அடிமட்ட மக்களுக்கும் அது பெறுமானம் கொடுத்திருக்கிறது.

நபி (ஸல்) அவர்களின் தோழர் ஸஃத் இப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் இஸ்லாத்துக்கும் சமூகத்துக்கும் செலவு செய்தவர். அவர் தனக்கு விஷேட சிறப்பும் பலமும் இருப்பதாக கருதினார். இதனை நபியவர்கள் கண்டித்தார்கள். 'உங்களில் உள்ள பலவீனர்கள் காரணமாகவே நீங்கள் உதவி செய்யப்படுகிறீர்கள். வாழ்க்கை வசதிகள் கிடைக்கின்றன' என்று குறிப்பிட்டார்கள்.

(ஆதாரம்: புஹாரி, நஸாஇ)

இதன்படி சமூகத்திலுள்ள பலவீனர்கள் விடுபட்டுவிடக்கூடாது என்பது இஸ்லாத்தின் மிக பிரதான நோக்கங்களில் ஒன்றாகும். அடிமட்ட மக்கள் நிம்மதியாக இருக்க வாழ்க்கை வசதிகள் வழங்கப்பட வேண்டும். உரிமைகள் நிறைவேற்றப்படல் வேண்டும். அவர்கள் விழுந்தால் தூக்கிவிடப்படல் வேண்டும். இத்தகைய சமூக நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகத்தான் ஸக்காத் கடமையாக்கப்பட்டுள்ளது. இதன்படி விவசாய சொத்தில் பத்தில் ஒரு பங்கு, பணம், வியாபார பொருட்களில் நாட்பதில் ஒன்று, கால்நடைகளிலிருந்தும் இதே அளவு, கனிம மற்றும் கடல் வளங்களிலிருந்து ஐந்தில் ஒன்று என ஸக்காத் விதியாக்கப்பட்டுள்ளது.

அடிமட்ட மக்கள் புரட்சி செய்யாமலே இவ்வசதிகளை இஸ்லாம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இது இடையில் எதிர்பாராது தோன்றிய விடயமோ மேலோட்டமான நுனிப்புல் மேயும் அம்சமோ அல்ல. இது இஸ்லாத்தின் ஒரு அடிப்படை விடயம். செல்வந்தர்களின் செல்வத்தில் காணப்படுகின்ற ஏழைகளுக்கான நிரந்தர சொத்து. இதனை மறுப்பது இறை நிராகரிப்புக்கு சமன். இதனை நிறைவேற்றாதிருப்பது பாவச்செயல். இது அதிகார பூர்வமாக திரட்டப்படக்கூடியது. கொடுக்க மறுத்தபோது யுத்த பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது.

ஸக்காத்தானது இஸ்லாமியப் பொருளாதார மூலங்களில் ஒன்றும் சமூக பாதுகாப்பு முறைமையும் கூட. இது மனிதாபிமான இலக்குகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இதனை பெற்றுக்கொள்கின்ற எட்டு கூட்டத்தாரில் ஐந்து பிரிவினர் அடிமட்ட மக்களாவர். அல்குர்ஆன் இதனை மக்கா காலத்திலே சுட்டிக்காட்டியுள்ளது. மதீனா காலத்தில் இது கடமையாக்கப்பட்டுள்ளது. தங்கம், வெள்ளி, பூமி வெளியேற்றுபவைகள், உழைப்பு போன்றவற்றுக்கு ஸகாத் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. எட்டு கூட்டத்தாருக்கு இது விநியோகிக்கப்படல் வேண்டும். ஸக்காத்தின் இலக்குகள், ஸதகா தொடர்பான விடயங்கள், செலவழித்தல் பற்றிய தூண்டல்கள் பரவலாக வழங்கப்பட்டுள்ளன.

அல்குர்ஆன் ஸக்காத் தொடர்பாக சுருக்கமாக சொன்னவற்றை ஹதீஸ்கள் விரிவாகவும், பொதுவாக சொன்னவற்றை வரையறுத்தும், மயக்கமாக முன்வைத்தவற்றை தெளிவுபடுத்தியும், ஸக்காத்துக்கான நடைமுறை வடிவத்தை முன்வைத்தும் இதன் முக்கியத்தவத்தை உணர்த்தியுள்ளது.

ஸக்காத் தொடர்பில் இமாம் புஹாரி (ரஹ்) 172 ஹதீஸ்களைப் பதிவு செய்துள்ளார்கள். இவற்றில் 17 ஹதீஸ்களுடன் இமாம் முஸ்லிம் (ரஹ்) உடன்படுகிறார்கள். இமாம் முஸ்லிம் (ரஹ்) ஸக்காத் தொடர்பாக 70 ஹதீஸ்களையும் சுனன் அபீ தாவூத் 145 ஹதீஸ்களையும் சுனன் இப்னு மாஜா 61 ஹதீஸ்களையும் முஸ்னத் அஹ்மத் 252 ஹதீஸ்களையும் சுனன் தாரகுத்னி 251 ஹதீஸ்களையும் இமாம் பைஹகி தனது சுனனுல் குப்ராவில் 119 ஹதீஸ்களையும் இமாம் முன்திரி தனது தர்கீப் வத்தர்ஹீபில் 328 ஹதீஸ்களையும் பதிந்துள்ளார்கள்.

ஸக்காத் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வணக்கம் என்றவகையில் அதனை கொடுக்க மறுத்தவர்களுடன் அபூபக்கர் (ரழி) அவர்கள் போராடினார்கள். இது அடிமக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட முதல் போராட்டமாகக் கருதப்படுகிறது. உமர் (ரழி) அவர்கள் காலத்தில் யெமன் பிரதேசத்தில் ஸக்காத் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்காரணமாக குறித்த பிரதேசத்தில் வறுமை ஒழிக்கப்பட்டு ஸக்காத்தாக திரட்டப்பட்ட செல்வங்கள் மதீனாவுக்கு அனுப்பப்பட்டது. உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களது காலத்தில் வட ஆபிரிக்க பிரதேசத்தில் இதேபோன்றதொரு நிலை தோன்றியுள்ளது. ஸக்காத்தின் நோக்கமறிந்து வழிமுறைகளை சரியாக பயன்படுத்தினால் யெமனையும் வட ஆபிரிக்காவையும் விட மிக சிறிய பிரதேசங்களான எமது ஊர்களிலும் இதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தலாம்.

ஸக்காத் என்பது மொழி ரீதியாக சுத்தம், வளர்ச்சி, தூய்மை என்ற கருத்துகளை தரும். ஸதகா என்பது ஸக்காத்துக்கு சமனான கருத்தில் அல்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸக்காத் என்பது கடமையான செலவழித்தலையும் ஸதகா என்பது சுன்னத்தான செலவழிப்புகளையும் குறிப்பதாக கருத முடியும். இமாம் மாவர்தி (ரஹ்) அவர்கள் 'ஸக்காத் என்பது ஸதகாதான், ஸதகா என்பது ஸக்காத்தான். பெயர்கள் இதனை பிரித்தாலும் உள்ளடக்கம் ஒன்றுதான்' என்றுள்ளார்.

ஸக்காத் என்ற சொல் அல்குர்ஆனில் 32 இடங்களில் வந்துள்ளது. அதில் 27 இடங்களில் தொழுகையுடன் இணைத்து கூறப்பட்டுள்ளது. 8 இடங்கள் மக்கி சூராக்களிலும் ஏனையவை மதனி சூராக்களிலும் காணப்படுகின்றன. ஸதகா என்ற வார்த்தை 12 இடங்களில் வந்துள்ளன. அனைத்தும் ஹிஜ்ரத்தின் பின்னர் அருளப்பட்ட மதனி சூராக்களில் காணப்படுகின்றன.

வறுமை போன்ற அடிமட்ட மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இஸ்லாம் பெருமுயற்சி எடுக்கிறது. இது ஒரு வழிகாட்டலாக முன்வைக்கப்பட்டு சட்டமாக்கப்பட்டு பிரயோகிக்கப்பட்டும் உள்ளது. நபியவர்களின் காலத்தில் இஸ்லாத்தின் தோற்றத்துடனே ஏழைகளைப் பராமரித்தலும் ஆரம்பித்திருக்கிறது. அப்போது வரையறுக்கப்பட்ட ஒருசில முஸ்லிம்கள்தான் இருந்துள்ளார்கள். அதுவும் கடுமையான சவால்களை முகங்கொடுத்தவர்களாக அவர்கள் இருந்தார்கள். அவர்களைக் கவனிக்க ஒரு நாடோ தேசமோ இருக்கவில்லை. என்றாலும் இஸ்லாம் இதுவிடயமாக பெருமுயற்சி எடுத்தது. ஏழைகளுக்கு உணவளித்தல், உணவளிக்கத் தூண்டுதல், அல்லாஹ் அருளியவற்றிலிருந்து செலவு செய்தல், ஏழைகள், வழிப்போக்கர்கள், யாசகர்களுக்கு கொடுத்தல் போன்ற பல போதனைகள் மக்கா காலத்திலேயே முன்வைக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக சூரா முத்தஸ்ஸிரை நோக்குவோம். 'சுவனவாசிகள் நரகவாசிகளை பார்த்து 'உங்களை நரகில் நுழையச் செய்தது எது? என்று கேட்பார்கள். அதற்கவர்கள் 'நாம் தொழுகையாளிகளாக இருக்கவில்லை, ஏழைகளுக்கு உணவளிக்கவில்லை, அர்த்தமற்றவர்களுடன் சேர்ந்து பயனற்ற விடயங்களில் ஈடுபட்டிருந்தோம். மறுமைநாளை பொய்ப்பித்தோம்' என்று கூறுவார்கள். 
(முத்தஸ்ஸிர் 42-46)

உணவளிப்பது மாத்திரம் போதுமானதல்ல, அத்தோடு வறுமையை நீக்கும் முயற்சியாக சமூகப்பணியாற்ற வேண்டும் என்பதனை சூரா ஹாக்கா தெரிவிக்கிறது. 'அவனை பிடியுங்கள். அவனை இழுத்துச் செல்லுங்கள். அவனை நரகிலே தள்ளிவிடுங்கள். பின்னர் அவனை 70 முழங்கள் கொண்ட சங்கிலிகளால் பிணையுங்கள். அவன் அல்லாஹ்வை நம்பவில்லை. அத்தோடு ஏழைகளின் உணவை தூண்டாதிருந்தான். (30-34)

மதீனாவில் நபி(ஸல்) அவர்கள் ஒரு சமூக அமைப்பை உருவாக்கினார்கள். அவர்களிடம் ஆட்சியும் அதிகாரமும் காணப்பட்டன. எனவே மதீனாவில் ஸக்காத் தொடர்பான கட்டளைகள் இறங்கின. அது தொடர்பான விரிவான விளக்கங்கள் முன்வைக்கப்பட்டன.

எனவே ஸக்காத் என்ற இஸ்லாமிய கடமையை சரியாக நிறைவேற்றுவோம்.

அஷ் ஷெய்க். யூ.கே றமீஸ்...
எம்.ஏ. (சமூகவியல்)

Post a Comment

0 Comments