Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ஷைத்தான்கள் கட்டவிழ்க்கப்பட்ட ரமழானுக்குப் பின்னரான நாட்கள்...!


மனிதனை நேர்வழிப்படுத்துவதில் இரண்டு முட்டுக்கட்டைகள் இருக்கின்றன. அவை மனிதன் படைக்கப்படும் பொழுதே அவனுடன் சேர்த்தே படைக்கப்பட்டவையாகும். மனித குலத்தின் முதல் மனிதன் படைக்கப்படும் பொழுதே அல்லாஹ்தஆலா மனிதனுக்கான எதிரியையும் காட்டித் தந்துவிட்டான்.

பூமியிலே தனது பிரதிநிதியைப் படைக்கப்போவதாக அல்லாஹ்தஆலா தனது மலக்குகளிடம் சொன்னபோது மலக்குமார்கள் தமது மாற்றுக் கருத்தினை முன்வைத்தார்கள். அல்லாஹ்தஆலாவின் உயர்ந்த படைப்பாக தாங்களே இருக்க வேண்டும் என அவர்கள் விரும்பினார்கள். அவர்களது கருத்தையும் மீறி அல்லாஹ்தஆலா மனிதனைப் படைத்து அவனுக்கு சுஜூது செய்யுமாறு மலக்குகளை அல்லாஹ்ஆலா பணித்தபோது அவர்கள் அதனை ஏற்று நடந்தார்கள்.

இப்லீஸ் மனிதனுக்கு சுஜூது செய்ய மறுத்தான். இதுபற்றி அல்குர்ஆனில் அல்லாஹ்தஆலா குறிப்பிடும் போது 'பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, 'ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்' என்று சொன்னபோது அனைவரும் சிரம் பணிந்தனர், இப்லீஸைத்தவிர, அவன்(இப்லீஸ்) மறுத்தான். ஆணவமும் கொண்டான். இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்' (2:34) என்று குறிப்பிடுகின்றான். இதிலிருந்து இப்லீஸ் அல்லாஹ்வுக்கு மாறு செய்த அல்லாஹ்வின் எதிரியாகி விட்டான். அவனை அல்லாஹ்தஆலா மனிதனதும் எதிரியாகக் காட்டித் தந்தான்.

'நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் பகைவனாவான். அவனைப் பகைவனாகவே கொள்ளுங்கள்' (35:6) என அல்லாஹ்தஆலா மனிதனை எச்சரிக்கின்றான். இப்லீஸை அல்லாஹ்தஆலா விரட்டியடித்தபோது அவன் அல்லாஹ்விடம் ஒரு வரம் வாங்கிக் கொண்டான். 'இறைவனே, அவர்கள் இறந்து மீள எழுப்பப்படும் கியாமத் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக. உனது கண்ணியத்தின் மீது ஆணையாக! நிச்சயமாக உனது இஹ்லாஸான அடியார்களைத் தவிர அனைவரையும் நான் வழி கெடுப்பேன்' (38:79-82) என இப்லீஸ் அல்லாஹ்தஆலாவிடம் சபதமிட்டான்.

இதிலிருந்து ஷைத்தான் மனிதனின் எதிரி என்பதும் கியாமத் நாள் வரை மனிதர்களை வழிகெடுப்பதில் அவன் முயற்சித்துக் கொண்டே இருப்பான் என்பதும் தெளிவாகிறது. ஷைத்தான் மனிதனின் பகைவன் என்ற வகையில் அவனது முதல் முயற்சியாக மனிதனை நேர்வழியில் இருந்து வழிகேட்டின் பக்கம் திசை திருப்பி விடுவது அமைகிறது. இதனால் தான் மனிதனுக்கு நேர்வழி காட்ட அனுப்பப்பட்ட அல்குர்ஆனை ஓதுவதற்கு முன்னர் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புப் பெறுமாறு அல்குர்ஆனே மனிதனை ஏவுகின்றது. (16 :98) சில வேளைகளில் அல்குர்ஆனின் வசனங்களுக்கு தவறான கற்பிதங்களை வழங்கியும் கூட ஷைத்தான் மனிதனை தவறான வழியில் இட்டுச் செல்லக்கூடும் என்பதையே இது காட்டுகிறது.

ஷைத்தான் தனது சபதத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் பிரயோகிக்கும் வழிமுறைகளில் மனிதனை அல்லாஹ்வுக்கு மாறு செய்வதற்குத் தூண்டுவதும் ஒன்றாகும். சுஜூது செய்ய மறுத்து அல்லாஹ்வுக்கு மாறு செய்த காரணத்தினோலேயே ஷைத்தான் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்டான். எனவே மனிதனையும் இத்தவறைச் செய்து தனது கூட்டத்திலே சேர்த்துக் கொள்வதே அவனது பிரதான பணியாகும். முதலில் அவன் தனது சபதத்தை முதல் மனிதன் ஆதம் (அலை) அவர்களில் இருந்து ஆரம்பித்தான். அல்லாஹ் நெருங்கவும் வேண்டாம் என்று கட்டளையிட்டிருந்ததன் மீது அவரை ஏவி விட்டு அல்லாஹ்வின் உத்தரவுக்கு மாறு செய்யத் தூண்டினான். இப்படியாக அல்லாஹ்தஆலா தடுத்தவற்றை செய்யுமாறு தூண்டுவதும் செய்யுமாறு ஏவியவற்றை செய்ய விடாமல் தடுப்பதும் ஷைத்தான் தனது சபதத்தை நிறைவேற்றுவதில் முக்கியமான அம்சங்களாகும். 

அல்லாஹூத்தஆலா தடுத்துள்ள கொலை, கொள்ளை, போதை, மாது போன்ற பெரும்பாவங்கள் உட்பட அனைத்து விதமான ஹராம்களின் மீதும் மோகத்தை அதிகரிக்கச் செய்வது ஷைத்தானின் பணியாகும். அதேபோன்று தொழுகை, தர்மம் போன்ற நல்ல விடயங்களில் இருந்தும் மனிதனைத் தடுப்பதும் ஷைத்தானின் கைங்கரியங்களாகும். ஷைத்தானின் இந்தத் தீங்கிலிருந்து மனிதன் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அவனுக்கு அல்லாஹ்வுடனான நெருக்கமும் உறுதியான பயிற்சியும் அவசியப்படுகிறது. இதற்கான அவகாசத்தையே ரமழானிலே அல்லாஹூத்தஆலா மனிதனுக்கு வழங்கினான்.

முதலில் அல்லாஹூத்தஆலா ரமழானிலே ஷைத்தான்களுக்கு விலங்கிட்டு மனிதனுக்கு உதவி செய்கிறான். அத்துடன் ஷைத்தானின் தூண்டுதலில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான கேடயமாக அல்லாஹ் நோன்பை அமைத்துத் தருகிறான். கேடயம் என்பது தனக்கு ஆபத்துக்கள் நேர்ந்து விடாமல் பாதுகாக்கின்ற சாதனமாகும். யுத்த களத்தில் போர் வீரனை கேடயம் எப்படிப் பாதுகாக்குமோ அதுபோல நோன்பு மனிதனைப் பாவத்தில் வீழ்வதை விட்டும் பாதுகாக்கிறது. (ஆதாரம்- இப்னு மாஜா). 

நோன்பாளியாக இருக்கும் ஒரு மாத காலத்தில் மனிதன் தனக்கு அனுமதிக்கப்பட்ட உணவு, பானங்களில் இருந்தும் கூட தவிர்ந்து கொள்வதற்கு தன்னைப் பயிற்றுவித்துக் கொள்கிறான். இதன் மூலம் ரமழானுக்குப் பின்னரான காலங்களில் ஷைத்தானின் தூண்டுதலால் அனுமதிக்கப்படாத விடயங்களில் ஈடுபட்டு அல்லாஹ்வுக்கு மாறு செய்வதில் இருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அவன் பயிற்சி பெறுகிறான்.

ஷைத்தான் தனது சபதத்தை நிறைவேற்றுவதற்கு எடுக்கும் முயற்சிகளில் மனிதனின் உள்ளத்தில் வீணான சந்தேகங்களையும் ஊசலாட்டங்களையும் ஏற்படுத்தி விடுவதும் ஒன்றாகும். மார்க்கம் சம்பந்தமாக ஒரு விசுவாசியின் உள்ளத்தில் இருக்கின்ற நம்பிக்கைகளை கேள்விக்குரியதாக்கி வீண் சந்தேகங்களை ஏற்படுத்துவது ஷைத்தானின் செயலாகும். பிறை தொடர்பான விவகாரங்களில் தெளிவான அறிவுறுத்தல்கள் வந்த பின்னரும் அது இரண்டாம் பிறையா மூன்றாம் பிறையா எனச் சந்தேகத்தைத் தூண்டுவது போன்ற பல சந்தேகங்களை ஏற்படுத்தி விடுவது ஷைத்தானின் செயலாகும்.

இவ்வாறு உள்ளத்திலே ஊசலாட்டங்களை ஏற்படுத்துபவர்கள் மனிதர்களிலும் இருக்கிறார்கள், ஜின்களிலும் இருக்கிறார்கள், இவ்வாறானவர்களிடம் இருந்து மனிதர்களுடைய இரட்சகனாகிய அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடும்படி ஸூரதுன் நாஸ் ஊடாக அல்லாஹ்தஆலா வழிகாட்டுகின்றான்.

ரமழானிலே ஷைத்தானிடமிருந்து தூரமாகி அல்லாஹ்வுக்கு நெருக்கமாக மாறியவர்களில் பலர் ரமழான் முடிந்து ஷைத்தான் கட்டவிழ்த்து விடப்பட்டதும் மீண்டும் ஷைத்தானின் வலைக்குள் வீழ்ந்து விடும் பரிதாப நிலையை சமூகத்தில் காண முடியுமாக இருக்கிறது. ரமழானுக்குப் பின்னரும் தொழுமாறு அல்லாஹ்தஆலாவின் கட்டளை இருந்த போதும் மனிதன் ஷைத்தானின் வழிநின்று அதற்கு மாறு செய்பவனாக இருக்கிறான். 

நேர்வழிக்கான வழிகாட்டலாக ரமழானில் அல்குர்ஆன் அருளப்பட்ட போதும் ரமழானின் பின்னரும் மனிதன் வழிகேட்டை நோக்கிச் செல்பவனாக இருக்கிறான். பெருநாளைக்கான தலைப்பிறையில் இருந்து அவனது உள்ளத்தில் வீணான சந்தேகங்களை நுழைப்பதில் ஷைத்தான் வெற்றி பெறுகிறான் என்றால் ரமழானிலே ஷைத்தானை விலங்கிட்டு வைத்து விசுவாசிகளுக்கு வழங்கப்பட்ட பயிற்சியினால் அவன் எந்தப் பயனையும் பெறவில்லை என்பதுவே அர்த்தமாகும்.

ரமழானுடைய நோக்கம் மனிதனில் தக்வா என்னும் இறையச்சத்தை உண்டாக்குவதாகும். ரமழானுக்குப் பின்னரும் ஒருவர் இறையச்சமின்றி ஷைத்தானின் வழிச்சுவடுகளைப் பின்பற்றுபவராக இருந்தால் அவர் ரமழானை அடைந்தும் தக்வாவை அடையாதவராகக் கருதப்பட இடமிருக்கிறது. இந்நிலையிலிருந்தும் விரட்டப்பட்ட ஷைத்தானின் தீங்குகளில் இருந்தும் அல்லாஹ்தஆலா ரமழானுக்குப் பிந்திய காலங்களிலும் எம்மைப் பாதுகாக்கட்டும்.

-பியாஸ் முஹம்மத்-

Post a Comment

0 Comments