Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

அல்குர்ஆனை விளங்கிக் கொள்வதற்கான தேவை...!


அருள்மறையாம் அல் குர்ஆன் மனிதனின் இம்மை, மறுமை வாழ்வின் விமோசனத்தையும் சுபீட்சத்தையும் இலக்காகக் கொண்டுள்ளது. அதனால் அதனை விளங்கிக்கொள்ள நாம் முயற்சி செய்ய வேண்டும். அது அல்குர்ஆன் அருளப்பட்டதன் நோக்கமாகவும் காணப்படுகிறது. இதனை அல் குர்ஆன், 'வசனங்களை கவனித்து ஆராய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும் அருள் நிறைந்த இவ்வேதத்தை உங்கள்மீது இறக்கியருளினோம்' என்று குறிப்பிட்டுள்ளது. 
(ஸாத் 29)

இப்புனித அருள்மறையை விளங்க முனைவதற்கு முன்னர் என்ன செய்ய வேண்டும், அதனை விளங்குவதற்கு முடியாத பிரகாரம் காணப்படுகின்ற தடைக்கற்கள் எவை? போன்ற சில விடயங்களை அறிந்துகொள்வது மிகவும் அவசியமானது. இதுபற்றி இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் தனது இஹ்யாவில் பின்வருமாறு விளக்கியுள்ளார்கள்.

அல்குர்ஆனை விளங்குவதற்கு முன்னர் நாம் எம்மை உள ரீதியாகத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அவற்றை நாம் கீழ்வருமாறு நோக்கலாம்.

முதலாவது: அல்குர்ஆன் மூலம் அல்லாஹ் பேசுகிறான் என்ற இறை பேச்சின் மகத்துவத்தை புரிந்துகொள்ள வேண்டும், அவனது உயர்ந்த அந்தஸ்திலிருந்து படைப்புகள் விளங்கிக்கொள்ளும் தரத்திற்கு அவனது வசனங்களை அவன் அருளியுள்ளான். இது மிக நீண்ட காலமாக நிகழும் நிகழ்வாகும். மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் பலப்படுத்தி இருக்காவிட்டால் அவரால் அல்லாஹ்வுடைய பேச்சை செவிமடுக்க முடியாது போயிருக்கும். மலைகள் துகழ்களாக மாறியது போன்ற நிலை ஏற்பட்டிருக்கும்.

இரண்டாவதாக: எம்மோடு கதைக்கின்றவனின் மகத்துவத்தை உணர்ந்துகொள்ள வேண்டும். அல்குர்ஆனை ஓதுவதற்கும் வாசிப்பதற்கும் முன்னர் இது ஒரு மனிதனுடைய பேச்சல்ல, இது அல்லாஹ்வின் வார்த்தைகள் என்பதனை உணர வேண்டும். இக்ரிமா இப்னு அபீ ஸுப்யான் (ரழி) அவர்கள் அல்குர்ஆனைத் திறந்தால் 'இது எனது ரப்பின் பேச்சு, இது எனது ரப்பின் பேச்சு...' என்று கூறி மயங்கி விடுவார்கள். பேச்சை மகத்துவமாக கருதுவது பேசியவனை மதித்தததற்கு சமனானதாகும்.

மூன்றாவது: அல்குர்ஆன் சொல்லவரும் கருத்துக்களை உள்வாங்கிக்கொள்ளும் பிரகாரம் எமது உள்ளம் அதன்பால் ஈர்க்கப்பட வேண்டும். எமது மூதாதையர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்கள் அல்குர்ஆனை ஓதும்போது ஈர்க்கப்படாவிட்டால் அதனை மீண்டும் ஓதுகின்றவர்களாக இருந்துள்ளார்கள். 
(இஹ்யா உலூமித்தீன்)

அல்குர்ஆனை விளங்க முனையும் ஒருவர் இன்னொரு விடயத்தின்பாலும் கவனம் செலுத்த வேண்டும். அதாவது அல்குர்ஆனை விளங்குவதற்கு தடையாக அமையும் விடயங்களை இனங்கண்டு அவற்றை தவிர்ந்துகொள்ள வேண்டும். இதுபற்றியும் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

அதிகமான மனிதர்கள் அல்குர்ஆனின் கருத்துக்களை புரிந்துகொள்ளாமல் இருப்பதற்கு ஷைத்தான் மனித உள்ளத்தில் ஏற்படுத்தியுள்ள திரைதான் காரணமாக அமைந்துள்ளது. அதன் காரணமாக அல்குர்ஆனின் அற்புதங்களையும் இரகசியங்களையும் புரிந்துகொள்ள முடியாதவாறு அவர்கள் குருடாகி விட்டார்கள்.

அல்குர்ஆனை விளங்குவதற்கான தடைகள் நான்காகும்.

முதலாவது: எழுத்துக்களை உச்சரிப்பதோடு மாத்திரம் முழு கவனத்தையும் சுருக்கிக்கொள்வதாகும். அல்லாஹ்வுடைய பேச்சின் கருத்துக்களை விளங்குவதை விட்டும் ஷைத்தான் அவர்களை திருப்பி உச்சரிப்புகளோடு சுருக்கிவிட்டான். சரியாக உச்சரிக்கவில்லை என்று நினைத்து அதனை பூரணப்படுத்துவதற்காக அவர்கள் தொடர்ந்தும் வசனங்களை மீட்டிக்கொண்டு இருக்கிறார்கள். உச்சரிப்போடு மாத்திரம் சுருங்கிவிட்ட அவர்கள் கருத்துக்களை உணர்ந்து கொள்வதன்பால் கவனம் செலுத்துவது அவசியம். இக்குழப்பநிலையைப் பார்த்து ஷைத்தான் சிரித்துக் கொண்டிருப்பான்.

இரண்டாவது: ஒரு போக்கைப் பற்றி கேள்விப்பட்டவுடன் கண்மூடித்தனமாக அதனை பின்பற்றுவதாகும், அதற்காக வெறிகொண்டு எழுவது, அதனை நுணுக்கமாக நோக்காது அதிலே தேங்கிவிடுவது. இதுவும் அல்குர்ஆனை விளங்குவதற்கான ஒரு தடைக்கல்லாகும். நம்பிக்கைகளால் விலங்கிடப்பட்டு அதனை அறுக்க முடியாத நிலையிலுள்ள மனிதனாக அவன் இருக்கிறான். அவனது பிழையான நம்பிக்கைகளை தவிர வேறு எதுவும் அவனது உள்ளத்தில் காணப்பட மாட்டாது. அவனது கண்ணோட்டங்கள் அவன் செவிமடுத்தவற்றோடு சுருங்கி விடுகின்றது. அவனுக்கு ஒரு சிறிய சிந்தனையொன்று ஏற்பட்டு விட்டாலும் அவனது ஷைத்தான் அவனை விட்டுவிட மாட்டான்.

'உனது மூதாதையர்களின் நம்பிக்கைக்கு புறம்பான இந்த விடயம் உனது உள்ளத்தில் எவ்வாறு தோன்ற முடியும்' என்று அவனது சிந்தனைக்கு எதிராக யுத்தம் செய்யும். அப்போது அவன் அக்கருத்தை ஷைத்தானின் தூண்டலாகக் கருதுவான். அல்லாஹ்வின் பேச்சை விளங்குவதற்கான முயற்சியிலிருந்து விலகிவிடுவான்.

இது ஒரு பிழையான பின்பற்றலும் அல்குர்ஆனின் கருத்துகளைப் புரிந்து கொள்வதற்கான தடையுமாகும்.

மூன்றாவது: பாவச்செயலில் பிடிவாதமாக இருப்பது பெருமையடிப்பது, மனோ இச்சைக்கு கட்டுப்படுவது போன்றன பாவச்செயல்களாகும். இவை மனித உள்ளங்கள் கறைபடியவும் இருளடையவும் காரணமாய் அமைகின்றன. கண்ணாடியில் அழுக்குகள் படிந்தால் எவ்வாறு தெளிவாகப் பிரதிபலிக்காதோ அதேபோன்ற நிலைதான் இதுவும். இதுதான் உள்ளத்துக்கான மிகப்பெரிய தடைக்கல். இத்தகைய செயற்பாடுகள் காரணமாகவே அதிகமானவர்கள் தடையை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

மனோ இச்சையின் திரட்சி அதிகமாக இருக்குமளவுக்கு அல்லாஹ்வின் பேச்சை விளங்குவதற்கான தடையும் பாரியதாக காணப்படும். உலகப்பற்று உள்ளத்தில் குறைவாக இருக்கும்போது இறை பேச்சை உணர்ந்துகொள்ள முடியும்.

உள்ளம் என்பது கண்ணாடியைப் போன்றது. மனோ இச்சைகள் கறைகளைப் போன்றது. அல்குர்ஆன் சொல்லவரும் கருத்துக்கள் கண்ணாடியில் தோன்றும் பிம்பம் போன்றது. கண்ணாடியைக் கழுவிவிட்டால் அங்கு பிம்பம் தெளிவாக தோன்றுவது போன்று உள்ளத்தை தூய்மைப்படுத்தும்போது மனோ இச்சை நீங்கி விடுகின்றது. அல்குர்ஆனின் கருத்துக்கள் தெளிவாக விளங்கி விடுகின்றன.

அல்குர்ஆனை விளங்கவும் அதன் கருத்துக்களை உணர்ந்து கொள்ளவும் வேண்டுமானால் அல்லாஹ்வை நோக்கி செல்கின்றவர்களாக இருக்க வேண்டும். இது அல்லாஹ்வின் நிபந்தனையாகும். 'இது அல்லாஹ்வின் பக்கம் திரும்பி வரும் அனைவருக்கும் அகப்பார்வை அளிப்பதாகவும், நினைவூட்டும் நல்லுபதேசமாகவும் உள்ளது. 
(காப் 08),

'அல்லாஹ்வை நோக்கி செல்கின்றவர்கள் மாத்திரமே இதனைக்கொண்டு நல்லுணர்வு பெறுவார்கள். (முஃமின 13), 'அறிவுடையோர்கள்தான் இவ்வேதத்தின் மூலம் நல்லுணர்வு பெறுவார்கள். (ரஃத் 19) மறுமையின் அருள்களைவிட உலகின் மதிமயக்கத்தில் திளைத்திருப்பவன் அறிவுடையவனாக மாற முடியாது. அவனுக்கு இiவாக்குகளின் இரகசியங்கள் புலப்பட்டுவிடும் என்றும் எதிர்பார்ப்பதற்கில்லை.

நான்காவது: இப்னு அப்பாஸ் (ரழி), முஜாஹித் (ரஹ்) போன்றவர்கள் அல்குர்ஆனுக்கு கூறிய விளக்கங்களுக்கு அப்பால் அல்குர்ஆனுக்கு வேறு விளக்கங்கள் இல்லை, அறிவு சார்ந்து அல்குர்ஆனுக்கு விளக்கம் கூறுபவர்கள் நரகம் நுழைவார்கள் என்று கருதுவதும் அல்லாஹ்வின் பேச்சை விளங்கிக் கொள்வதற்கான பெரிய தடையாகும். (இஹ்யா உலூமித்தீன்)

ஆகவே அல் குர்ஆனை விளங்கிடுவதில் இமாம் கஸ்ஸாலி(ரஹ்) அவர்களின் வழிகாட்டல்களை உணர்ந்து எம்மை மாற்றியமைத்துக் கொள்வதே சாலச் சிறந்ததாகும்.

அஷ் ஷெய்க். யூ.கே றமீஸ்...
எம்.ஏ. (சமூகவியல்)

Post a Comment

0 Comments