Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

கட்டுக்கோப்பான குடும்ப வாழ்வுக்கு ஹஜ் கற்றுத்தரும் படிப்பினைகள்...!


உலகின் எட்டுத்திக்குகளில் இருந்தும் மக்கள் அலை அலையாக முதல் ஆலயமாம் புனிதமிகு கஃபாவை நோக்கி ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக சென்று கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் ஹஜ் கடமை எமக்கு கற்றுத் தருகின்ற பாடங்களை பரிசீலனை செய்வது மிகப் பொருத்தமானதாகும்.

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமை பல்வேறு வகையான சிறப்பம்சங்களையும் மகத்துவத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இஸ்லாத்தின் ஏனைய கடமைகளில் இருந்து ஹஜ் உடைய கடமை பல்வேறு அம்சங்களில் தனிச்சிறப்பு பெற்றுள்ளது. குறிப்பாக ஒரு குடும்பத்தினர் செய்த தியாகமும் அர்ப்பணிப்பும் உலகம் அழியும் வரை தோன்றக்கூடிய ஒவ்வொரு முஸ்லிமாலும் நினைவு கூரப்படும் வகையில் ஹஜ்ஜுடைய வணக்க வழிபாடுகளில் பல நிகழ்வுகள் அமையப்பெற்றிருப்பது இதன் தனித்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

நபி இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் அவரது குடும்பத்தினரையும் முன்மாதிரியாக கொண்ட மிகச்சிறந்ததொரு பலமான குடும்பக் கட்டமைப்பை தோற்றுவிப்பதில் ஒவ்வொரு இஸ்லாமியனும் முனைப்போடு செயல்பட வேண்டும் என்ற செய்தியை ஹஜ் கடமை அழுத்தி கூறிக் கொண்டிருக்கின்றன.

இப்ராஹீம் (அலை) அவர்கள் ஹாஜர் அம்மையாரை திருமணம் செய்து அல்லாஹ்விடம் மன்றாடி பிரார்த்தனை செய்த போது அன்னாரது 99 ஆவது வயதில் கிடைக்கப்பெற்ற பிள்ளையே இஸ்மாயில் (அலை) அவர்களாவர். தனது குழந்தையையும் மனைவியையும் மனித சஞ்சாரமோ, மரம் செடிகளோ, புற்பூண்டுகளோ இல்லாத, ஒரு வறண்ட பாலைவனமாக அன்று காட்சியளித்த மக்கமா நகரில் விட்டு வரும்படி அல்லாஹ்வின் புறத்திலிருந்து இடப்பட்ட கட்டளைக்கு இப்ராஹீம் (அலை) அவர்கள் முழுமையாக கட்டுப்பட்டு, அவர்களை அப்படியே விட்டுவிட்டு, ஷாம் நகர் நோக்கி திரும்பிய போது, ஹாஜர் அம்மையார், "இப்ராஹீமே.... இவ்வாறு என்னையும் இப்பச்சிளங்குழந்தையையும் இங்கே விட்டுவிட்டு எங்கே செல்கின்றீர்..." 

என்று பல தடவைகள் கேட்டும், இப்ராஹீம் (அலை) அவர்கள் அவரை திரும்பிப் பார்க்காமலேயே நடந்தார்கள்.

அப்போது ஹாஜர் அம்மையார் அவர்கள் "இது அல்லாஹ்வின் கட்டளையா" என்று கேட்டார்கள். அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள், "ஆம்" என்று பதில் கூற ஹாஜர் அம்மையார் அவர்கள், "அப்படியென்றால் அல்லாஹ் எங்களை கைவிட மாட்டான்" என்ற ஈமானிய பதிலை உறுதியுடன் கூறினார்கள். அவர்களை விட்டுச் சென்ற இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது குடும்பத்தினருக்காக செய்த பிரார்த்தனையை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான், "எங்கள் இறைவா! நான் என் குடும்பத்தாரை இந்த வேளாண்மை இல்லாத பள்ளத்தாக்கில் கண்ணியத்திற்குரிய இல்லத்திற்கு அருகில் குடி அமர்த்திவிட்டேன். 

எங்கள் இறைவா! இவர்கள் இங்கு தொழுகையை நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்தேன், எனவே இவர்கள் மீது அன்பு கொள்ளும்படி மக்களின் உள்ளங்களை ஆக்குவாயாக... மேலும் இவர்களுக்கு உண்பதற்கான பொருட்களை வழங்குவாயாக... இவர்கள் நன்றியுடையவர்களாய் இருப்பார்கள். (அல்குர்ஆன்12:37)

இந்த நிலையில் ஹாஜரா அம்மையார் எடுத்துவந்திருந்த தண்ணீர் முடிவுற்றதும் அதிர்ச்சியடைந்து, வறட்சிமிக்க அந்த பள்ளத்தாக்கில் சபா - மர்வா குன்றுகளுக்கு இடையில் தண்ணீர் தேடி இங்கும் அங்குமாக அலைந்தார். இந்த வரலாற்று உணர்வை நிலைநாட்ட ஹஜ் மற்றும் உம்ரா கடமைகளை நிறைவேற்றுவதற்காக செல்பவர்கள் இன்றும் சபா - மர்வா குன்றுகளுக்குகிடையில் வேகமாக நடந்தும், ஓடியும் அந்த தியாகச் செயலை நினைவு கூர்வதை அல்லாஹ் கடமையாக்கி வைத்துள்ளான்.

வறட்சிமிக்க பாலைவனத்தில் விடப்பட்ட அக்குழந்தை தாகத்தால் கால்களை நிலத்தில் உதைத்து அழுத போது அவ்விடத்தில் ஸம் ஸம் என்ற நீரூற்று பீறிட்டு கிளம்பியது. இந்நீரூற்று சுமார் 4000 வருடங்களுக்குப் பிறகும் வற்றாத ஊற்றாய் மக்காவாசிகளுக்கும், மக்காவுக்கு வரும் ஹாஜிகளுக்கும் மிகப்பெரும் அருட்கொடையாகப் பார்க்கப்படுகின்றது.

இவ்வாறு இப்ராஹீம் (அலை) அவர்களது குடும்பத்தாரோடு தொடர்புபட்ட பல்வேறு அம்சங்களே ஹஜ்ஜில் நிறைவேற்றப்பட வேண்டிய கட்டாய கடமைகளாகவும், உயர் கிரியைகளாகவும் விளங்குகின்றன.

இதிலிருந்து இஸ்லாம் ஒரு குடும்ப இயல் நெறி என்பதனைப் புரிந்து கொள்ளலாம். ஒரு மனிதன் தன்னை முழுமையாக அல்லாஹ்வின் வணக்கத்திற்காக ஒதுக்கி கொள்வதற்காகக்கூட திருமணம் செய்யாமல் இருக்கக் கூடாது என்பதுதான் இஸ்லாத்தின் பலமான நிலைப்பாடு. ஒரு மனிதன் குடும்பமாக வாழ வேண்டும், சமூக ரீதியாக அவனுக்கு அல்லாஹ் கடமையாக்கி இருக்கின்ற அனைத்து கடமைகளையும் செவ்வனே நிறைவேற்றுபவனாக அவன் இருக்க வேண்டும். 

ஒரு குடும்பத்தின் பிரதான அங்கத்தவர்களான கணவன், மனைவி, குழந்தைகள் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் பணியாற்றுவதன் ஊடாகவும், அன்பை பரிமாறிக் கொள்வதன் ஊடாகவும், இறை நம்பிக்கையுடன் இறைவனை சார்ந்து இருப்பதன் ஊடாகவுமே பலமான ஒரு குடும்பக் கட்டமைப்பை தோற்றுவிப்பதற்கான அடித்தளத்தை இட முடியும். இதனை இப்ராஹீம் (அலை) அவர்களது குடும்ப அமைப்பின் ஊடாக புரிந்து கொள்ளலாம்.

மேலும் நிலையான ஒரு குடும்பக் கட்டமைப்பை தோற்றுவிப்பதற்கு தியாகம், சகிப்புத்தன்மை மற்றும் பொறுமை என்பன அடிப்படை அம்சங்களாகும். அதனை இப்ராஹீம் (அலை) அவர்களது குடும்பப் பின்னணியிலிருந்து தெளிவாக புரிந்து கொள்ளலாம். மகிழ்ச்சிகரமான, ஆன்மீக நறுமணம் வீசச் செய்யும் அமைதியான ஒரு குடும்ப சூழலை ஏற்படுத்துவதற்கு அல்லாஹ்வின் அருளை யாசித்து பிரார்த்தனை செய்வதும் மிகப் பிரதானமான அம்சம் என்பதனை தன் குடும்பத்தினருக்காக இப்ராஹீம் (அலை) அவர்கள் செய்த பிரார்த்தனைகளின் ஊடாக தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

ஒரு முன்மாதிரியான குடும்ப உருவாக்கத்தின் முதற்கட்ட செயற்பாடாக அல்லாஹ்விடம் ஆழ்மனதால் ஒரு குடும்பத் தலைவன் தூய்மையாகப் பிரார்த்திக்க வேண்டும். அதனை இப்ராஹீம் (அலை) அவர்கள் செய்த கீழ்க்காணப்படும் பிரார்த்தனைகள் எடுத்துக்காட்டுகின்றன.

"சாலிஹான ஒரு சந்ததியை தருவாயாக" என்ற பிரார்த்தனையின் எதிரொலிப்பாக அல்லாஹ்வின் புறத்திலிருந்து வழங்கப்பட்ட பொக்கிஷமே இஸ்மாயில் (அலை) என்பதாக அல்லாஹ் குறிப்பிடுகின்றான். 
(அல்குர்ஆன் 37:100,101)

இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது புதல்வன் இஸ்மாயில் (அலை) அவர்களோடு சேர்ந்து கஃபாவை கட்டி முடித்த போது இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள், "எங்கள் இறைவனே... எங்கள் இருவரையும் உனக்கு முற்றிலும் வழிப்படுபவர்களாக ஆக்கி வைப்பாயாக"
(சூரத்துல் பகாரா:128).

மேற்குறிப்பிடப்பட்டுள்ள பிரார்த்தனைகளின் ஊடே அல்லாஹ் எமக்கு பல பாடங்களை கற்றுத் தருகின்றான். குறிப்பாக, ஒரு குடும்பத் தலைவன் தனது குழந்தைகளுக்காக செய்யும் அறிவுரைகளோடும் வழிகாட்டல்களோடும் மட்டும் சுருங்கிக் கொள்ளாது அவர்களது நலனுக்காகவும் உயர்வுக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். 

இப்ராஹீம் (அலை) அவர்கள் ஒரு நபியாக இருந்தும், தனது தனையன் இஸ்மாயில் (அலை) அவர்கள் நபித்துவத்தின் ஒளியில் வளர்ந்த ஒரு நபியாக இருந்தும் அவரது ஒவ்வொரு வளர்ச்சி கட்டத்திலும் தந்தை இப்ராஹீம் (அலை) அவர்கள் அவருக்காக பல்வேறு வகையான பிராத்தனைகளை செய்திருப்பதை அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

எனவே மகிழ்ச்சிகரமான குடும்ப உருவாக்கத்திற்காக உடல் உழைப்புகளோடும் அறிவுரைகளோடும் மட்டும் எம்மை மட்டுப்படுத்திக் கொள்வதை தவிர்த்து இறைவனின் ஆசி வேண்டி பிராத்திப்போம்.

கலாநிதி அல் ஹாபிழ் எம்.ஐ.எம்.சித்தீக்...
(அல்–ஈன்ஆமி) B.A.Hons, (Al- Azhar university, Egypt)
M.A.& PhD (International Islamic university, Malaysia)

Post a Comment

0 Comments