Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

மனிதப் பண்புகளை போதிக்கும் மார்க்கம்...!


அல்லாஹுதஆலா மனிதனை ஒரு மேலான இனமாக உலகில் படைத்திருக்கின்றான். 'மனிதனை அழகான தோற்றத்தில் படைத்திருப்பதாக அவன் அல் குர்ஆனில் குறிப்பிட்டிருக்கின்றான் (95 - 4). ஏனைய உயிரினங்களுக்கு வழங்கப்படாத பேசும் ஆற்றலையும் பகுத்தறிவையும் மனிதனுக்கு மாத்திரமே அவன் கொடுத்திருக்கிறான். அதனால் பூமியிலுள்ள ஏனைய ஜீவராசிகளை விட மேலானவனாக மனிதன் விளங்குகிறான்.

அதற்காகத் தன்னைப் படைத்த இறைவனுக்கு காலம் முழுவதும் மனிதன் நன்றிகூற வேண்டும். அல்லாஹ்வைத் தொழுவதிலும் ஏனைய வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதிலும் எமது வாழ்நாட்களை கழித்து வர ​வேண்டும்.

அல்லாஹ்வின் படைப்புக்களில் மனிதர்கள் யாவரும் சமமானவர்கள் என இஸ்லாம் குறிப்பிட்டுள்ளது. பணம், வலிமை அல்லது கல்வியினால் மனிதன் ஆளுக்காள் வேறுபட்டவர்களாக இருக்க முடியும். அதற்காக ஒருவர் தன்னை விட ஏதோ ஒரு வழியில் குறைவான அந்தஸ்தில் இருக்கலாம். அதற்காக அவரைத் தாழ்வாகக் கருதலாகாது. ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் மதித்து வாழ வேண்டும். அதுவே இஸ்லாமிய வழிகாட்டலாகும். அதேநேரம் மனிதனாகப் பிறந்து விட்டோம் என்பதற்காக எப்படியும் வாழலாம் என்றில்லை. இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்கான இறைவழிகாட்டல்களை அல்லாஹ் வகுத்தளித்து இருக்கின்றான். அவற்றை அறிந்து செயற்படுவது முஸ்லிமின் பொறுப்பாகும்.

மனிதன் என்பவன் எப்போதும் மனிதப்பண்புகளை கடைப்பிடிக்க வேண்டியவனாவான். உண்மை, நேர்மை, தர்மம், ஐக்கியம், மன்னித்தல், விட்டுக்கொடுத்தல் போன்ற நற்பண்புகள் அவனிடம் இருக்க வேண்டும். அவை அவனை மனிதனை மனிதனாக வாழ வழிகாட்டும். மாறாக பொய், களவு, சூது, வஞ்சகம் சண்டை, சச்சரவுகள் இவையெல்லாம் மனித நல்வாழ்வை சீர்கெடுக்கக்கூடியவைகளாகும். அதனைப் புரிந்துகொண்டு செயற்படுவதோடு மிகுந்த முன்னெச்சரிக்கையோடும் நடந்து கொள்ளவும் தவறக்கூடாது.

மனிதர்களுக்கு மத்தியில் சகோதரத்துவம் மேலோங்கி ஒற்றுமை வளரும் போது பல பிரச்சினைகள் தானாகவே நீங்கிவிடும்.

எவரது மனதும் புண்படும் படி நடக்கக்கூடாது. தன்னைப் போலவே அடுத்தவனுக்கும் ஆசை, பசி, தாகம், இன்ப துன்பங்கள், உள்ளிட்ட உரிமைகளும் அபிலாஷைகளும் இருக்கவே செய்யும். அதனால் அடுத்தவரின் உரிமையையும் மதித்து வாழ்வதே அழகான வாழ்க்கையாகும். இவ்வாறு பிறரை மதித்து வாழும் போது எமது மதிப்பும் உயர்வடையும்.

நாம் மற்றவரை எல்லா விஷயத்திலும் அலட்சியப்படுத்தினால் அல்லாஹுதஆலா எம்மைப் பிறரைக்கொண்டு அலட்சியப்படுத்தலாம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். நாம் சன்மார்க்கத்துக்கும் சமூகத்துக்கும் ஏற்றவிதமாக நடக்க வேண்டும். அதனால் நாம் பிறரிடமிருந்து மதிப்பை பெற்றுக்கொள்ளலாம்.

சமூகத்தில் காணப்படும் ஏழைகள், அநாதைகள், ஊனமுற்றோர்கள், வசதி குறைந்தோர்கள் போன்றோருக்கு கைகொடுத்து உதவ வேண்டும். எம்மால் இயன்ற உதவிகளை செய்து கொடுக்க வேண்டும். அது இஸ்லாம் வழங்கியுள்ள அறிவுரையும் போதனையும் ஆகும். அதன்மூலம் அல்லாஹ்விடமிருந்து நல்லருளும் நற்பாக்கியங்களும் கிடைக்கப்பெறும். 'ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன்' என இஸ்லாம் எடுத்தியம்புகிறது. அதனால் ஒருவருக்கொருவர் உதவியாகவும் சிநேகமாகவும் ஐக்கியமாகவும் இருக்க வேண்டும்.

இறைதூதர் நபி (ஸல்) அவர்கள் கலீபாக்கள், ஸஹாபாக்கள் நல்லடியார்கள் அனைவரும் பிறரை நேசித்து வாழ்ந்துள்ளார்கள்.

ஒரு தடவை கலீபா உமர் (ரழி) அவர்கள், தமது பணியாளுடன் பைத்துல் முகத்திஸை நோக்கி ஒட்டகத்தில் பயணம் செய்தார்கள். அன்னார் சிறிது தூரம் சென்றதும் ஒட்டக்கத்தில் இருந்து கீழே இறங்கி பணியாளை ஒட்டகத்தில் பயணம் செய்யச் சொன்னார்கள். 

கலீபாவுக்கு மதிப்பளித்த பணியாள் அதற்கு ஆரம்பத்தில் மறுத்த போதிலும் உமர் (ரழி) அவர்கள் வழங்கிய அறிவுரையின் விளைவாக பணியாள் ஒட்டகத்தில் பயணிக்கலானார். அதேநேரம், 'அடுத்த வீட்டார் பசித்திருக்கும் போது தாம் மாத்திரம் புசிப்பவர் உண்மை முஸ்லிம் அல்ல' என்பதும் நபிகளாரின் பொன்மொழியாகும். ஆகையால் நாம் அனைவரும் அடுத்தவரை மதித்து ஒன்றுபட்டு வாழ்வோம். மனிதப் பண்புகளை எம்மில் வளர்த்துக் கொள்வோம்.

எம்.ஏ.அத்தாஸ்...
மாத்தறை.

Post a Comment

0 Comments