Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

அரபா நாளின் மகத்துவம்...!


"நிச்சயமாக அல்லாஹ்வுடைய ஏட்டில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் இருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரெண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை...”

(தௌபா 36) என அல்லாஹுத்தஆலா குறிப்பிடுகின்றான். ரஜப், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் மாதங்களே அவையாகும் என அந்த நான்கு மாதங்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

இந்நான்கு மாதங்களில் துல்கஃதா, துல்ஹிஜ்ஜா, முஹர்ரம் என தொடர்ந்து வரும் மூன்று மாதங்கள் அல்லாஹ்தஆலாவினால் புனிதப்படுத்தப்பட்டுள்ளன. இம்மூன்று மாதங்களிலும் நடுவில் வருகின்ற துல்ஹிஜ்ஜா மாதத்தின் அரபாவுடைய நாளிலேயே அல்குர்ஆன் இறக்கப்படுவது பூரணமாக்கப்பட்டது.

அல்குர்ஆன் முதலில் இறக்கப்பட்ட ரமழானின் இறுதிப் பத்தில் வரும் லைலத்துல் கத்ர் இரவு போலவே துல்ஹிஜ்ஜாவின் விஷேடமான முதல் பத்து இரவுகளில் அல்குர்ஆன் இறங்குவது நிறைவுறுத்தப்பட்ட அரபா தினம் முக்கியத்துவம் பெறுகிறது. அரபா தினத்தின் முக்கியத்துவத்தைக் குறித்துக் காட்டும் இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் பின்வரும் சம்பவத்தை எடுத்துக் காட்டுகிறார்கள். ”தாரிக் பின் ஷிஹாப் கூறியதாக இமாம் அஹமத் (ரஹ்) பதிந்து வைத்திருக்கிறார்கள். ஒரு யூதர், உமர் (ரழி) அவர்களிடம், 'அமீருல் முஃமினீனே, உங்களுடைய வேதத்தில் ஒரு வசனம் இருக்கிறது. 

நீங்கள் அனைவரும் அதனை ஓதி வருகிறீர்கள். இவ்வசனம் எங்களுக்கு இறக்கப்பட்டிருந்தால் (அது இறக்கப்பட்டதற்காக) அந்நாளை நாங்கள் பெருநாளாகக் கொண்டாடியிருப்போம்' என்று கூறினார். அவ்வசனம் என்ன என உமர் (ரழி) கேட்க. "இன்றைய தினம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தைப் பூரணப்படுத்தி விட்டேன். உங்கள் மீது என் அருட்கொடையையும் பூரணமாக்கி விட்டேன். இஸ்லாத்தையே உங்களுடைய மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டு விட்டேன்” (அல் மாஇதா 3) என்ற வசனங்களே அவை" என அந்த யூதர் பதிலளித்தார். அதற்கு உமர் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக, இறைத்தூதருக்கு அவ்வசனம் எங்கே? எப்போது? அருளப்பட்டது என்பதை நான் அறிவேன். வெள்ளிக்கிழமையொன்றின் அரபா தினத்தின் மாலை வேளையில் அவ்வசனம் அருளப்பட்டது' எனக் கூறினார்கள்.

இறைதூதர் (ஸல்) அவர்கள் தமது தூதினை பகிரங்கமாகச் சொல்வதனை ஸபா மலையில் இருந்து ஆரம்பித்தார்கள். தனது இறுதி உரையை அரபா மலையில் முடித்தார்கள். "மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இவ்விடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது” என்று நபி(ஸல்) அவர்கள் ஆரம்பித்தார்கள். இறுதியில் மக்களை நோக்கி, 'மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள். (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள். (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம்' என்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்த பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி "இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! என்று முடித்தார்கள்.

இந்த அரபா தினத்திலேயே அல்லாஹுத்தஆலாவும் இம்மார்க்கத்தை இன்றுடன் முழுமையாக்கி விட்டதாகவும் இஸ்லாத்தையே மார்க்கமாக அவன் பொருந்திக் கொண்டதாகவும் அறிவித்து விட்டான். இச்செய்தி சொல்ல வருவதைப் புரிந்து கொண்ட ஸஹாபாக்களுக்கு அன்றைய தினம் கவலை தோய்ந்த நாளாகிவிட்டது. ஒவ்வொருவரும் கண்ணீர் விட்டழுதார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தமது தூதைப் பூரணப்படுத்தியதாக நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றியவர்கள் சாட்சியமளித்த நாளாக அரபாவுடைய தினம் காணப்படுகிறது. அரபா உரையின் இறுதியில் நபியவர்கள் மக்களை நோக்கி "இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கு இவ்வழிகாட்டல்களை எடுத்துச் சொல்லட்டும். விஷயம் சென்று சேருபவர்களில் சிலர், நேரடியாக கேட்பவரைவிட நன்கு ஆராயும் தன்மை உடையவராக இருக்கலாம்.” என்று கூறியுள்ளார்கள். 
(ஆதாரம்: ஸஹீஹுல் புஹாரி)

இவ்வசனங்களைக் கேட்ட நபித்தோழர்கள் தமது ஒட்டகங்கள் எந்தப் பக்கம் திரும்பியிருந்ததோ அந்தத் திசைகளில் தமது ஒட்டகங்களைச் செலுத்தி அல்லாஹ்வின் தூதை, நபிகளாரின் வழிகாட்டலை எத்திவைப்பதற்காகச் சென்றார்கள். இந்த வகையில் எம்மிடம் வந்து சேர்ந்திருக்கின்ற இந்தத் தூதை மக்களிடம் எத்திவைக்க வேண்டியதன் அவசியத்தை இந்த அரபா தினம் எமக்கு உணர்த்துகிறது.

அரபா தினத்தை மேன்மைப்படுத்தும் வகையில் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் பல இருக்கின்றன. "இந்த (அரபா) நாளைப் போல வேறெந்த நாளிலும் அல்லாஹுத்தஆலா மனிதர்களை நரகத்திலிருந்து விடுதலை செய்வதில்லை” (ஆதாரம்: முஸ்லிம்)

அரபா தினத்தில் நோன்பு நோற்பது ஒருவருடைய கடந்த வருடத்தின் பாவங்களுக்கும் முன்வரும் வருடத்தின் பாவங்களுக்கும் மன்னிப்பாகும்' என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இந்த வகையில் அரபா நாளில் நோன்பிருப்பது முக்கியமான ஸுன்னத்தாகும். அல்லாஹுத்தஆலா இந்நாளில் அளவுகணக்கில்லாமல் மன்னிப்பு வழங்குவதனால் நோன்பிருந்து பாவமன்னிப்புத் தேட வேண்டும். 'லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்கலஹ், லஹுல் முல்க், வலஹுல் ஹம்த், வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்' என்பதனை அரபா நாளில் அதிகமாக ஓதுமாறு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இது தானும் தனக்கு முந்திய நபிமாரும் ஓதி வந்த சிறந்த துஆவாகும் என அன்னார் குறிப்பிட்டுள்ளார்கள்.
(ஆதாரம்: முவத்தா)

அரபா நாளிலும் ஐயாமுத் தஷ்ரீக்குடைய நாட்களிலும் தஹ்லீல் (லாஇலாஹ இல்லல்லாஹ்), தக்பீர் (அல்லாஹு அக்பர்), தம்ஹீத் (அல்ஹம்துலில்லாஹ்) தஸ்பீஹ்( சுப்ஹானல்லாஹ்) வை அதிகம் ஓதுமாறும் நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.

உண்மையில் அரபா தினம் என்பது முஸ்லிம்கள் பின்பற்றிவரும் இஸ்லாம் மார்க்கத்தை அல்லாஹ் பொருந்திக் கொண்டு ஒரே மார்க்கமாகப் பிரகடனப்படுத்திய பெருநாளாகும். நபியவர்களுக்கு இறக்கப்பட்ட அல்குர்ஆன் முழுமைப்படுத்தப்பட்ட நன்நாளும் அதுவாகும். நபியவர்கள் தமது தூதுத்துவத்தை பூரணமாக நிறைவேற்றி விட்டதாக ஸஹாபாக்கள் சாட்சியம் சொன்ன பொன்னாளும் கூட. அந்த வகையில் இந்நாளை இபாதத்துகளால் அலங்கரிப்பது போன்றே நபியவர்கள் பூரணப்படுத்திய தூதை எத்திவைப்பதிலும் முஸ்லிம்கள் இந்நாளில் கவனமெடுப்பது மிகவும் அவசியமாகும்.

-பியாஸ் முஹம்மத்-

Post a Comment

0 Comments