Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்கள்..!இறைவன் படைத்த நாட்கள் யாவும் சிறப்புக்குரியவையாகும்.அவற்றுள் அடியார்கள் வணக்கஙகள் புரிந்து அதன்மூலம் மாண்பைப்பெற சில நாட்களை இறைவன் சிறப்பித்துள்ளான். ஏனைய சமுதாய மக்களின் வாழ்நட்களை ஒப்பிடும்போது நமது ஆயுள் மிகவும் குறைவானதாகும்.

லைத்துல் கத்ரு இரவு

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :-

“எனது சமுதாய மக்களின் ஆயுட்காலம் அறுபது முதல் எழுபது வயது வரையாகும்”. (திர்மிதி,இப்னு மாஜா) இந்த மணிவாசகம் மிகவும் சிந்திக்கத்தக்கதாகும். எனவே குறைந்த ஆயுளில் நிறைந்த ஆயுளின் மாண்பைப்பெற இறைவன் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் சமுதாய மக்களுக்குப் புரிந்துள்ள மாபெரும் அருட்கொடைகளே சிறப்புக்குரிய சிலநாட்கள்! அத்தகைய நாட்களில் தலையாயது ரமளானின் லைலத்துல் கத்ரு என்னும் இரவு. இது ஆயிரம் மாதங்கள் (அதாவது 83.33 ஆண்டுகள்) வணக்கம் புரிவதை விட மாண்புடயதாகும். (அல்குர்ஆன்-97:3)

பத்து நாட்கள்

அந்த வரிசையில் “அய்யாமு அஷ்ரு தில்ஹிஜ்ஜா”  “துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்கள்” மிகவும் முக்கியமான நாட்களாகும். இறைவன் வான்மறை குர்ஆனில் ” வல்ஃபஜ்ரி வலயாலின் அஷ்ர் ” என்னும் 89:2 வசனத்தில் “பத்து இரவுகளின் மீது ஆணையாக!” என ஆணையிட்டுக்கூறுவதும், “வயத்குரு ஸ்மல்லாஹி ஃபீ அய்யாமின் மஃலூமாத்தின்” ஹஜ்ஜின் குறிப்பிட்ட நாட்களில் இறைவனை நினவு கூறுவது (22:28) என்ற வசனமும் துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்களையே குறிக்கின்றன என குர்ஆனின் விரிவுரையாளர்களில் இப்னு உமர் (ரலி), இப்னு அப்பாஸ் போன்ற நாயத்தோழர்களும், இமாம் இப்னு கதீர் போன்ற இமாம்களும் குறிப்பிடுகின்றனர்.

“உலகம் தோன்றிய நாட்களிலேயே மிகவும் சிறப்புக்குரிய நாட்கள் துல் ஹஜ்ஜின் முதல் பத்து நாட்களாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறுவதிலிருந்தே அதன் மாண்பைப் புரிந்து கொள்ளலாம்.

” உலக நாட்களில் இந்த துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்களைவிட மாண்புக்குரியது வேறு எதுவுமில்லை” எனக் கூறியபோது “இறைவழியில் அறப்போர் செய்வதைவிடவா? என நாயத்தோழர்கள் கேட்டார்கள். “ஆம!. போர் புரிவதை விடவும் தான்” என பதிலளித்துவிட்டு ” இறைவழியில் தனது உயிர், பொருளைத் தியாகம் செய்து அறப்போர்புரிந்து திரும்பி வராதவரைத் தவிர” என்றார்கள் நபியவர்கள். ( அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ், ஆதாரம் புகாரி)

அரஃபா நாள்

இந்த மாண்பார் நாட்களில் வருவது தான் அரஃபா நாள்! அரஃபா நாள் பாவங்களுக்கு மன்னிப்பும்,நரக விடுதலையும் கிடைக்கும் உயரிய நாளாகும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:-

“அல்லாஹ் தனது அடியார்களை நரகிலிருந்து அதிகமாக விடுதலை செய்யும் நாள் அரஃபா நாளாகும்.இதைவிட வேறு எந்த நாட்களிலும் இவ்வாறு விடுதலை செய்வதில்லை. இந்நாளில் இறைவனே இறங்கி வந்து எனது அடியார்கள் என்ன விரும்புகிறார்கள்? ( கேட்பதைக் கொடுப்பதற்கு சித்தமாக உள்ளேன்.) என அமரர்களிடம் பெருமையோடு கூறிக்கொள்வான்” என அன்னை ஆயிஷா(ரலி) அறிக்கும் செய்தி முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. அரஃபா நாளின் சிறப்புக்கு இது ஒன்றே போதுமானது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :- இந்த (துல் ஹஜ்) பத்து நாட்களில் செய்யும் அமல்களைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் உவப்பான நாட்கள் உலகில் வேறு எதுவுமில்லை. ஆகவே இந்த நாட்களில் அதிகமதிகமாக “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்னும் தஹ்லீலையும், அல்லாஹீ அக்பர் என்னும் தக்பீரையும் அலஹ்ம்துலில்லாஹ் என்னும் தஹ்மீதையும் ஒதி வருவீர்களாக! (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர், ஆதாரம்: தப்ரானி)

அரஃபா நாளில் நோன்பு

1. நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாவது நாளிலும், ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளிலும் ஒவ்வொரு மாதமும் அய்யாமுல் பீள் என்னும் 13,14,15 வது நாட்களிலும் நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள்.  (அறிவிப்பவர்: ஹுனைதா இப்னு காலித்(ரலி) ஆதாரம்: அஹ்மது, அபூதாவூது. நஸாயீ)

2. நபி (ஸல்) அவர்கள் நான்கு நற்செயல்களை எப்போதும் விடுவதேயில்லை. 1. துல்ஹஜ் ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்பது, 2. ஆஷுரா (ழுஹர்ரம் பத்தாவது) நாளில் நோன்பு நோற்பது,3. ஒவ்வொரு மாதமும் அய்யாமுல் பீள் என்னும் 13,14,15 வது நாளில் நோன்பு நோற்பது, 4. ஃபஜ்ருத் தொழுகைக்கு முந்திய இரு ரகஅத்கள் சுன்னத் தொழுவது. (அறிவிப்பவர்: அன்னை ஹஃபஸா (ரலி), ஆதாரம்:அஹ்மது,அபூதாவூது.)

3. மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- அரஃபா நாளில் நோன்பு நோற்பது முந்தைய ஒரு வருடத்தின் பாவங்களையும், பிந்தைய ஒரு வருடத்தின் பாவங்களையும் மன்னிக்கப்படும்”. (அறிவிப்பவர்: அபூ கதாதா அல்- அன்ஸாரி (ரலி) , ஆதாரம்:முஸ்லிம்)

ஹாஜிகளுக்கு அரஃபா நோன்பு கிடையாது.

அரஃபாவுடைய நாளில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கிறார்களா இல்லையா என்பதை தெரிவதற்காக ஒட்டகையில் அமர்ந்திருந்த நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரத்தில் பால் அனுப்பிவைத்தேன். அதை அவர்கள் அருந்தினார்கள். (அறிவிப்பவர்: உம்மு ஃபள்லு பின்த் ஹாரிதா (ரலி) , ஆதாரம்:புகாரி எண்-1988)

இவ்வாறே நபி (ஸல்) அவர்களின் மனைவி அன்னை மைமூனா (ரலி) அவர்களும் “ஒரு பாத்திரத்தில் பாலை அனுப்பியபோது மக்களெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க அதை நபி (ஸல்) அலர்கள் குடித்தார்கள். (அறிவிப்பவர்: அன்னை மைமூனா (ரலி) , ஆதாரம்:புகாரி எண்-1989)

நபி (ஸல்) அவர்கள் அரஃபாவுடைய நாளில் அரஃபா மைதானத்தில் (ஹாஜிகள்) நோற்பதை தடை செய்துள்ளார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) , ஆதாரம்:அஹ்மது,அபூதாவூது, நஸயீ,இபனு மாஜா)

இதிலிருந்து அரஃபாவுடைய நாளில் ஹாஜிகளுக்கு மட்டுமே நோன்பு நோற்பது தடையே தவிர ஏனையோருக்கல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

தக்பீர் சொல்வது:-

மேலும் இந்த பத்து நாட்களில் அதிகமாக தக்பீர் சொல்வதையும்,திக்ரு செய்வதையும் இறைவன் திருமறையில் சிறப்பிக்கிறான். “அவர்கள் தங்களின் பயன்களைப் பெறுவதற்காகவும், சாதுவான (ஆடு மாடு,ஒட்டகம் ஆகிய)கால்நடைகளை அளித்ததற்காகக் குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் வருவார்கள்”. (அல்குர்ஆன்-22:28)

நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு தக்பீர் கூறுவார்கள்:-

அல்லாஹுஅக்பர் அல்லாஹு அக்பர் லாயிலாஹ இல்லல்லாஹு வஅல்லாஹுஅக்பர். அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து”

அறிவிப்பவர்கள்: உமர்(ரலி), இப்னு மஸ்வூது (ரலி).

அதிகமாக அமல்கள் செய்வது

குர்ஆன் ஓதுவது,அதிகமாக தர்மம் செய்வது,ஏழை எளிவர்களுக்கு உதவுவது, நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பது, நஃபிலான வணக்கங்கள் புரிவது ஆகியவைகளை இறைவனுக்கு உவப்பான இந்த நாட்களில் அதிகமதிகமாகச் செய்வதால் அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெறலாம்

-டாக்டர் அஹ்மத் பாகவி-
நன்றி...
இஸ்லாம் கல்வி.கொம்

Post a Comment

0 Comments