இந்த நிலையில் தான் அல்லாஹ், ‘அதில் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்’ (அல் குர்ஆன் 9:36) என்று குறிப்பிட்டிருக்கின்றான்.
புனிதம் மிக்க மஸ்ஜிதுல் ஹராமில் குற்றமிழைப்பது எவ்வளவு குற்றமோ அதேபோன்று புனிதம் மிக்க மாதங்களில் தவறிழைப்பதும் குற்றமாகும். எனவே ஏனைய மாதங்களை விடவும் புனிதம் மிக்க மாதங்களில் கூடுதல் பேணுதலைக் கடைபிடிப்பது மிகவும் அவசியம்.
ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், ‘ரமழான் மாத நோன்புக்கு பின் சிறந்த நோன்பு முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்’ என்று குறிப்பிட்டார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
இதன்படி முஹர்ரம் மாதத்தின் சிறப்பும் மாண்பும் தெளிவாகிறது. ‘முஹர்ரம் மாதம் அல்லாஹ்வின் மாதம்’ என எம்பெருமானார் (ஸல்) அவர்கள் புகழ்ந்துரைத்துள்ளார்கள்.
இம்மாதத்திற்கென பல்வேறு தனிச்சிறப்புக்கள் உள்ளன. அவற்றில் தலையாயவை இரண்டு. ஒன்று இது இஸ்லாமிய வருடப் பிறப்பின் ஆரம்ப மாதம். இம்மாதத்தின் முதல் நாள் இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டின் ஆரம்ப நாளாகும்.
இருப்பினும் முஸ்லிம்களின் வாழ்வில் ஹிஜ்ரி கலண்டரைப் பயன்படுத்தும் வழக்கம் குறைந்து கொண்டே வருகிறது. அவ்வாறே அதன் முக்கியத்துவமும் எம்மிடையே குறைந்து காணப்படுகின்றது.
ஹிஜ்ரி கலண்டருக்கும் முஸ்லிம்களுக்குமான தொடர்பு நோன்புக்கான மாதத்துடன் சுருங்கி விட்டது. நோன்பை முடிவு செய்வதற்கும், பெருநாட்களை தீர்மானிப்பதற்கு அது தேவைப்படுகிறது.
இருந்தும் ஹிஜ்ரி வருட கணிப்புக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான தொடர்பில் சுருக்கம் ஏற்பட அது தொடர்பிலான விழிப்புணர்ச்சி இன்மையே அடிப்படைக் காரணமாகும். இக்குறைப்பாட்டை நீக்கும் வகையில் ஹிஜ்ரி நாட்காட்டியினதும் இஸ்லாமிய மாதங்களதும் முக்கியத்துவத்தை மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தும் வகையிலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
இஸ்லாமிய நாட்காட்டியின் வருடக் கணிப்பானது நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் சென்று மதீனாவில் குடியேறிய நிகழ்வை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அல்லாஹ்வின் அருட்கொடையால் நாம் ஹிஜ்ரி 1444ஐ கடந்து ஹிஜ்ரி 1445 இல் காலடி வைக்கும் நாட்களை அண்மித்துள்ளோம்.
ஆங்கில, தமிழ், சிங்கள வருடங்கள் சூரிய சுழற்சியைக் கொண்டு கணிக்கப்பட்டாலும் சந்திர சுழற்சியின் மூலமாகவே முஸ்லிம்களின் வருடங்கள் கணிக்கப்படுகின்றன. இது இஸ்லாமிய வருடத்தின் தனித்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. ஆனால் அனைத்து நாட்காட்டிகளும் வருடத்திற்கு 12 மாதங்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளன.
எனவே இஸ்லாமிய புத்தாண்டில் பிரவேசிக்க இருக்கும் நாம் நடப்பு வருடத்தில் செய்த பாவங்களையும் தவறுகளையும் எண்ணி மனம் வருந்தி அவற்றுக்காக அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புக் கோர வேண்டும். பாவச் செயல்களைத் தவிர்த்து கொள்ளத் திடசங்கற்பம் பூண்டவர்களாக புதியதொரு வருடத்தை ஈமானிய உணர்வுகளோடு வரவேற்போம். இஸ்லாத்துடன் பின்னிப்பிணைந்த வாழ்க்கைக்கான திட்டத்தைத் தீட்டிக் கொள்ள வல்ல நாயன் நம்மனைவருக்கும் தௌபீக் செய்யட்டும்.
அஷ்ஷெய்க்
-ஏ.எச்.எம். மின்ஹாஜ் முப்தி (காஷிபி)-
0 Comments