Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம்...!


‘மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட சமுதாயத்தர்களில் எல்லாம் மிக்க மேலான சமுதாயமாக நீங்கள் இருக்கின்றீர்கள். (ஏனெனில்) நன்மையான காரியங்களை நீங்கள் ஏவுகிறீர்கள். தீமையை விட்டும் அவர்களை தடுக்கிறீர்கள்.’ (ஆல இம்ரான்:110) என்று அல்லாஹ் அல்குர்ஆனில் கூறியுள்ளான்.

இதன்படி இஸ்லாத்தில் மிக முக்கியமான காரியமாக நன்மையை ஏவி தீமையை தடுத்தல் விளங்குகிறது. நன்மையை ஏவி, தீமையை தடுக்கும் உன்னத பணியைக் கற்றுத் தந்துள்ள இஸ்லாம், அப்பணியை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்றும் அதன் படித்தரங்கள் யாவை என்பதையும் சொல்லித் தரவும் தவறவில்லை.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், ‘உங்களில் ஒருவர் ஏதாவதொரு வெறுக்கத்தக்க செயலைக் கண்டால் அதனைத் தனது கை மூலம் மாற்ற முயற்சிக்கட்டும். அதற்கவர் சக்தி பெறாவிட்டால் தனது நாவைக் கொண்டு மாற்ற முயற்சிக்கட்டும். அதற்குமவர் சக்தி பெறாவிட்டால் தனது உள்ளத்தால் அதை வெறுக்கட்டும். அதுவே ஈமானின் மிகத் தாழ்ந்த நிலையாகும்’ என்று கூறியுள்ளார்கள். 
(ஆதாரம்: முஸ்லிம்)

இந்நபிமொழியானது நன்மையை ஏவி தீமையை தடுப்பதன் படித்தரங்களை சுருக்கமாக எடுத்தியம்பியுள்ளது. என்றாலும் அறிவு இப்பணியில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. அத்தோடு இப்பணியில் ஈடுபடுகின்றவர் இரக்க குணமுள்ளவராகவும் மென்மையான போக்கு கொண்டவராகவும், நீதியானவராகவும் பொறுமையுள்ளவராகவும், ஹிக்மத் எனப்படும் விவேகமான சிந்தனை கொண்டவராகவும் இருப்பது மிகவும் இன்றியமையாததாகும்.

இந்த நிலையில் தான் அல்லாஹ் ‘(நபியே) நீர் விவேகத்தைக் கொண்டு மற்றும் அழகான நல்லுபதேசத்தைக் கொண்டு உமதிரட்சகனின் வழியின் பக்கம் அழைப்பீராக’ என்று குறிப்பிட்டிருக்கின்றான். 
(அந்நஹ்ல்:125)

அதேநேரம் தான் ஒரு நல்ல அமலை செய்யாமல் மற்றவர்களுக்கு அதனைப் பற்றி சொல்வதும் பாவமான காரியமாகவே விளங்குகிறது. இது தொடர்பில் அல்லாஹ், ‘விசுவாசம் கொண்டோரே! நீங்கள் செய்யாததை ஏன் கூறுகின்றீர்கள். நீங்கள் செய்யாததை கூறுவது அல்லாஹ்விடத்தில் வெறுப்பால் மிக பெரிதாகி விட்டது. 
(அல் குர்ஆன்: 61:2,3)

இதேவேளை தாம் செய்யாத அமல்களை மற்றயவர்களுக்கு சொல்வதன் விபரீதம் குறித்தும் நபி (ஸல்) அவர்கள் எடுத்தியம்பியுள்ளார்கள்.

‘கியாமத் நாளில் ஒரு மனிதன் கொண்டு வரப்பட்டு நரகில் போடப்படுவான். அவனது வயிற்றிலுள்ள குடல்கள் வெளியாகிவிடும். கழுதை திருகையை சுற்றுவது போன்று (வேதனையால்) அவன் தன் குடலைச் சுற்றுவான். நரகவாதிகள் அவனிடம் ஒன்று கூடி ‘மனிதனே! உனக்கு என்ன ஆனது? நீ நன்மையை ஏவி தீமையை தடுத்துக் கொண்டிருக்கவில்லையா’ எனக் கேட்பார்கள். அதற்கவன் ‘ஆம்’ நான் நன்மையை செய்யாமல் அதை ஏவக்கூடியவனாக இருந்தேன். தீமையை செய்து கொண்டு அதைத் தடுப்பவனாக இருந்தேன்’ என விடையளித்தான். 
(ஆதாரம்-: புஹாரி முஸ்லிம்)

எனவே இந்த உயரிய பணியை அல்லாஹ்வுக்காக அவனதும் அவனது தூதர் (ஸல்) அவர்களதும் கட்டளைகள், வழிகாட்டல்கள் படி மேற்கொள்வோம்.

-அம்மார்-

Post a Comment

0 Comments