Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இஸ்லாம் கூறும் சக வாழ்வு...!


இஸ்லாம் மானிடர்க்கு அன்பையும், நேசத்தையும், சகோதரத்துவ வாஞ்சையையும் போதிக்கின்றது. ஒவ்வொரு முஸ்லிமும் அடுத்த மனிதனுக்கும், சமூகத்திற்கும், நாட்டிற்கும் அருளாகத் திகழ வேண்டும் என்றும் அது எதிர்பார்க்கின்றது. 

இன, மொழி, நிற, கலாசார வேறுபாடுகளைத் தாண்டி எவருக்கும் ஆபத்தோ நெருக்கடியோ இன்னலோ ஏற்படக் கூடாதென்பதும், ஒவ்வொருவருக்கும் அடுத்தவர் மூலம் பாதுகாப்பும், அமைதியும், நிம்மதியும் கிட்ட வேண்டும் என்பதும் இஸ்லாத்தின் கட்டளையாகும். அந்த வகையில் பல்லின சமூகங்களுக்கு இடையில் சகவாழ்வை கட்டி எழுப்புவதற்கான அடிப்படையாகக் கருதப்படுகின்ற அம்சம் பன்மைத்துவம் பற்றிய தெளிவு எம்மிடையே இருக்க வேண்டும்.

குறித்த ஒரு பிரதேசத்திலோ, நாட்டிலோ உள்ள சமூகமானது இனத்தாலோ, மதத்தாலோ, மொழியாலோ வேறுபட்ட மக்களைக் கொண்டிருப்பின் அதனை பன்மைத்துவ சமூகம் எனக் குறிப்பிடலாம். பன்மைத்துவம் இயற்கையானது, யதார்த்தமானது. அதனை அல் குர்ஆன் பின்வருமாறு விபரிக்கின்றது, ‘உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும், ஏற்படுத்தியுள்ளோம். அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம். ஆனால் அவன் உங்களுக்குக் கொடுப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே இவ்வாறு செய்திருக்கிறான். எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள்’
(சூறா அல் மாஇதா – 48)

மேற்குறிப்பிடப்பட்ட வசனத்திலிருந்து பன்மைத்துவ சமூகம் என்பது அல்லாஹ்வின் திட்டமிடலாகும். அவன் நாடியிருப்பின் உலக மாந்தர்கள் அனைவரையும் ஒரே இனத்தையும், மதத்தையும் சேர்ந்தவர்களாக ஆக்கியிருக்கலாம். என்றாலும் இவ்வுலகின் சீரான இயக்கத்திற்கும், சமநிலையான போக்கிற்காகவுமே பல்லின சமூக அமைப்பை அவன் தோற்றுவித்துள்ளான் என்பது தெளிவாகின்றது.

இதன் மூலம் பன்மைத்துவம் என்பது தவிர்க்க முடியாத நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ள சமூக அமைப்பியலாகும். பல்லின மக்கள் வாழும் சமூக அமைப்பொன்றில் குறிப்பிட்ட ஒரு சமூகம் பெரும்பான்மையாக இருப்பதோடு ஏனைய சமூகங்கள் சிறுபான்மையாக இருப்பதே நியதியாகும். பன்மைத்துவம் என்பது தனி மனித வாழ்க்கையிலும் கூட்டு வாழ்க்கையிலும் பரஸ்பரக் கலந்துரையாடலை ஏற்படுத்திக் கொள்வதாகும். மனிதர்களின் கூட்டுப்பண்பே சமூக நல்லிணக்கத்தின் அடிப்படை எண்ணக்கருவாக அமைகிறது. அந்த வகையில் பன்மைத்துவ சமூகத்துடனான உறவு குறித்து அல் குர்ஆன் மற்றும் சுன்னா பலமான அடித்தளங்களை இட்டுள்ளன.

ஒவ்வொரு இனத்திற்கும் தனித்துவமான கலாசார அம்சங்களும், பழக்கவழக்கங்களும் உள்ளன. அத்தனித்துவங்களே அவ்வினத்தை அடையாளப்படுத்துகின்றன. ஒவ்வொரு இனமும் தத்தமது இருப்பை ஸ்திரப்படுத்திக் கொள்ளவும், தம்மை அடையாளப்படுத்தும் தனித்துவங்களை காத்துக்கொள்ளவும் முயற்சிக்கின்றன. அவற்றுக்கெதிரான சவால்கள் தோன்றுகையில் அதற்கெதிராகக் குரல் கொடுப்பதோடு அது போராகவும் உருப்பெறுகின்றது. இவ்வாறான சமூக அமைப்பொன்றில் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்பது தொடர்பாக அல்குர்ஆனிலும் நபி (ஸல்) அவர்களது போதனைகளிலும் முழு மனித சமூகத்திற்கும் வழிகாட்டுதல்கள உள்ளன.

அல்லாஹ் ஒரே மூலக்கூறிலிருந்து மனித இனத்தை படைத்து பரவச் செய்தாலும், அவர்களுக்கு மத்தியில் நிற, மொழி, இன வேறுபாடுகளை அவனது அத்தாட்சியாக ஏற்படுத்தியதாக குறிப்பிடுகின்றான். மேலும் இவ்வேறுபாடுகளின் அடிப்படையில் ஒருவருக்கொருவர் பரஸ்பர அறிமுகத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகவே அவர்களை கோத்திரங்களாகவும், கிளைகளாகவும் படைத்துள்ளதாக அல்குர்ஆன் பறைசாற்றுகின்றது.

அல்லாஹ்வால் படைக்கப்பட்ட அனைத்துப் படைப்புக்களும் பன்மைத்துவம் என்ற ஓர் அழகிய அடையாளத்தால் அலங்கரிக்கப்பட்டு காணப்படுகிறது. பல்வேறு வர்ணங்கள், தோற்றங்கள், தன்மைகள், பண்புகள், இயல்புகள், மொழி, பால், இனத்துவ வேறுபாடுகள், கலாசார, நாகரிக பண்பாட்டு பழக்கவழக்கங்கள், சிந்தனாசக்தி, ஆற்றல், ஆளுமை, காலநிலை, புவியியல் பிரிகை என எங்கும், எதிலும் பல்வகைமை எனும் கலைத்துவம் வியாபித்துக் காணப்படுகிறது. இதற்கு மனித இனமும் விதிவிலக்கன்று. இவை படைப்பினங்களுக்கு அருளாகவும் இப்பிரபஞ்சத்தின் முறையான இயங்குநிலைக்கான அடிப்படையாகவும் கணிக்கப்படுகின்றது.

இந்த உண்மையை உள்வாங்கி தேசிய அடையாளத்தை வெளிப்படுத்தும் போது அங்கே மனிதம் மிளிர்வதனையும் சக வாழ்வும் சௌஜன்யமும் மலர்வதையும் காணலாம்.

மனிதர்கள் இனங்களாக, குழுமங்களாக, கோத்திரங்களாக வாழ்வது தவிர்க்கமுடியாத இயல்பாகும். எனினும் அது மனிதனாகக் கூடி வாழ்வதற்கு ஒரு போதும் தடையானதன்று. அது மனித ஐக்கியத்திற்கு ஏற்புடைய பலமான காரணியாகும். அதாவது, ஒரு ஆணிலிருந்தும் ஒரு பெண்ணிலிருந்தும் படைக்கப்பட்ட மனிதர்கள், தங்களிடையே காணப்படுகின்ற இரத்த உறவைப் பேணி இணைந்து வாழ்வதில் தமக்கிடையே காணப்படுகின்ற குல மரபுப் பேதங்கள் துணை செய்கின்றன.

பிற சமூகங்களின் உறவு என்பது அல் குர்ஆனின் பேசுபொருள்களில் ஒன்றாகும். நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான அடிப்படைகளை அது உலகின் யதார்த்தம் என்ற வகையில் தெளிவாக முன்வைக்கின்றது. இஸ்லாத்தின் பிரதான மூலாதாரமான அல் குர்ஆனை ஆழ்ந்து கற்கும் போது அது சமாதானத்தினதும், சக வாழ்வினதும் மார்க்கம் என்பதை இலகுவில் புரிந்து கொள்ள முடியும். யுத்தத்தைக் குறிக்கும் ‘ஹர்ப்’ எனும் சொல் அல்குர்ஆனில் ஆறு இடங்களிலும், சமாதானத்தைக் குறிக்கும் ‘சில்ம்’ எனும் பதமும் அதிலிருந்து பிரிந்த சொற்களும் சுமார் 100 இடங்களிலும் இடம் பெறுகின்றன. இஸ்லாம் அடிப்படையிலேயே சமாதானத்தின் மார்க்கம் என்பதையே அல்குர்ஆன் வலியுறுத்துகின்றது. நபியவர்களின் வாழ்வியலும் இக்கருத்தையே பிரதிபலிக்கிறது. மதம், இனம், மொழி, கலாசாரம், நாடு ஆகிய எல்லைகளைக் கடந்து அனைவரும் மனிதர்களாக வாழ்வதற்கு இஸ்லாம் தூண்டுதல் அளிக்கின்றது.

முஸ்லிம்கள் பிற சமூகங்களுடன் வாழும் போது மோதல்களைத் தவிர்த்து இணக்கமாக சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்ளுமாறு இஸ்லாம் பணிக்கின்றது. அதற்கப்பால் நன்மையான விடயங்களில் பரஸ்பரத்துடன் ஒத்துழைக்குமாறு அல்குர்ஆன் மனிதகுலத்தை அழைக்கின்றது, அத்துடன் உதவுதல், ஒத்துழைத்தல், விட்டுக்கொடுத்தல் என்பன நல்லிணக்கத்திற்கு இஸ்லாம் அளித்துள்ள விழுமியங்களாகும்.

இவ்வடிப்படைகள் தவிர மனித சமத்துவம், தங்கி வாழுதல், சார்ந்திருத்தல், கலந்து வாழுதல், சமூக நீதி, கருத்துச் சுதந்திரம் என இன்னும் பல உயர்ந்த விழுமியங்களையும் நல்லிணக்கத்தின் வேர்களாகக் குர்ஆன் முன்வைக்கின்றது.

பல்லின மக்கள் வாழ்கின்ற இந்நாட்டில் மத உரிமை, மொழி உரிமை, அரசியல் உரிமை, அபிவிருத்தி உரிமை என்ற நான்கு தூண்களில் நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும். சிறுபான்மை மக்களது தனித்துவங்கள் மதிக்கப்பட்டு அவர்களின் உணர்வுகளும் கருத்திற்கொள்ளப்பட வேண்டும். இலங்கையைப் பொறுத்தவரையில் இனங்களுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும், அரசியல் கட்சிகளுக்கிடையிலும் சகவாழ்வைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை மிக அவசரமாகவும் அவசியமாகவும் எழுந்துள்ளது.

எனவே இனங்களுக்கிடையில், சகவாழ்வை நிலைநாட்ட உழைக்கும் நல்ல மனிதர்களாக எம்மை அல்லாஹ் ஆக்கியருளட்டும்.

கலாநிதி அல் ஹாபிழ் எம்.ஐ.எம்.சித்தீக்…
(அல்–ஈன்ஆமி) B.A.Hons, (Al- Azhar university, Egypt)
M.A.& PhD (International Islamic university, Malaysia)

Post a Comment

0 Comments