Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

புனித அல்-குர்ஆனுக்கு சவூதி அரேபியா வழங்கும் ஒப்பற்ற சேவைகள் ஒரு நோக்கு...!


சவூதி அரேபியாவின் தற்போதைய ஆட்சியாளர் மன்னர் சல்மான் தனது பத்தாவது வயதில் அல்-குர்ஆனை முழுவதுமாக மனனமிட்டவர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இது தொடர்பில் பறகஹதெனிய, தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீட உப அதிபர், கலாநிதி எம்.ஆர்.எம்.அம்ஜத் ராசிக் PhD தினகரனுக்கு தெரிவித்த கருத்து,…

கே: கலாநிதி அவர்களே! நாம் தொடராக சவூதி அரேபியாவினைப்பற்றிய முக்கிய தரவுகளை வாசகர்களுடன் பகிர்ந்து வருகிறோம். அதன் தொடரில் இம்மாதம் சவூதியிலே நடைபெற்ற சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியையொட்டி சில முக்கிய தகவல்களை எமது தினகரன் வாசக நெஞ்சங்களுடன் பரிமாறிக்கொள்ள முடியுமா?

ப: இஸ்லாமிய மார்க்கத்தின் புனித வேதமாம் அல்-குர்ஆனுக்காக வேண்டி வருடாந்தம் சர்வதேச அளவில் ஏற்பாடு செய்யப்படும் ஒரு மாபெரும் நிகழ்வாகத்தான் நாம் இம்மாதம் நடைபெற்ற ’43 ஆவது மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டி’ இனை நோக்கவேண்டும். அந்தவகையில் அல்-குர்ஆன் சம்பந்தப்பட்ட சில முக்கிய விடயங்கள் அதேபோன்று அல்-குர்ஆனுக்காக வேண்டி சவூதி அரேபியா மேற்கொள்ளும் சேவைகளும் அர்ப்பணிப்புகளும் அவசியம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய தரவுகளாகும்.

கே: சவூதி அரேபியா ஒரு முதல்தர இஸ்லாமிய நாடு என்ற வகையில் அதற்கும் அல்-குர்ஆனுக்கும் இடையில் உள்ள தொடர்பு பற்றி முதலாவதாக விவரிக்க முடியுமா?


ப: புனித அல்-குர்ஆன் எனப்படும் வல்ல அல்லாஹ்வின் கலாம் (பேச்சு) ஆனது, அல்லாஹ்வினால் நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இரக்கியருளப்பட்ட புனித வேதமாகும். அதன் வார்த்தைகள் Òமுஃஜிஸாவாகும்Ó; அதாவது நபிமார்களுக்கு வழங்கப்பட்ட; மனித சக்திக்கு அப்பாற்பட்ட அதிசயங்கள் ÒமுஃஜிஸாÓ எனப்படும். அதன்படி இந்த அல்-குர்ஆனின் வசனங்களைப் போன்று மனிதர்கள் எவருக்கும் வார்த்தைகளை வடிக்கமுடியாது. அதேவேளை இந்த அல்-குர்ஆனை ஓதுவது ஒரு வணக்கமுமாகும்.

நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் பிறந்து வாழ்ந்த தேசம் சவூதி அரேபியாவின் பிரதான நகரங்களான மக்கா, மதீனா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களாகும். ஆக அல்-குர்ஆன் இறக்கியருளப்பட்ட இடம், அதனை விசுவாசம் கொண்டு அதன்படி வாழ்ந்த, வாழும் மக்களின் தேசம், அதன்படி கட்டியெழுப்பப்பட்ட அரசுகள், நாகரிகங்கள் தோன்றிய பிரதேசம் என்பன போன்ற பல கோணங்களில்; புனித அல்-குர்ஆனுடன் சவூதி அரேபியாவிற்கு இருக்கும் தொடர்பினை விவரிக்கலாம்.

கே: சவூதியின் அரசியலமைப்பில் புனித அல்-குர்ஆனின் வகிபாகம் என்ன?

ப: சவூதியின் யாப்பாக புனித அல்-குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் வழிமுறையுமே பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சவூதியின் அடிப்படைச் சட்ட வரைவின் முதலாம் பிரிவின்; முதலாம் உப பிரிவின் முதலாவது வரியில் பின்வருமாறு உள்ளது: Ò(சவூதியின்) யாப்பானது; அல்லாஹ்வின் புனித வேதமும், நபி (ஸல்) அவர்களின் வழிமுறையுமாகும். அதன் மொழி (அல்-குர்ஆனின் மொழியாகிய) அரபி மொழியாகும்Ó.

இதன்படியே சவூதி அரேபியாவின் அரசியலமைப்புச் சட்டங்கள், சமூக, பொருளாதார, குற்றவியல் போன்ற அனைத்து வகையான சட்டதிட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

கே: புனித அல்-குர்ஆனை மனனமிடுவது ஒரு சிரமமான விடயமா? அதனை மனனமிடுதல் சவூதி அரேபிய கல்வித் திட்டத்தில் எவ்வாறான இடத்தினை வகிக்கின்றது.



ப: புனித அல்-குர்ஆன் எனப்படுவது மனனமிடுவதற்கு இலகுவான ஒன்றாகும். அல்லாஹ் தஆலா அல்-குர்ஆனிலேயே அதனைப்பற்றிக் குறிப்பிடும் பொழுது: Òநிச்சயமாக, அவ்வல்-குர்ஆனை நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டு எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?Ó என பல தடவைகள் வினாத்தொடுக்கின்றான். 
(அத்: 54: வச: 17, 22, 32, 40).

அல்-குர்ஆனை மனனமிடுவது சவூதி அரேபியாவின் அனைத்துக் கல்விக்கூடங்களிலும் பிரதானமான ஒன்றாகும். பாடவிதானங்களில் முதல்தரமானதுமாகும். அது தவிர சிறார்களுக்கு சிறுவயதிலேயே அல்-குர்ஆனை மனனமிட வைப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்துப் பிரதேசங்களிலும் இலகுவாகவும், மிக சிறந்த முறையிலும் மேற்கொள்ளப்படுவதை நாம் காணலாம். குறிப்பாக அல்-குர்ஆனை மனனமிடுவதற்கான அரச கல்விக்கூடங்கள் என்று அதிகமான கல்விக்கூடங்களையும் காணலாம். எமது நாடுகளில் மாலை நேரங்களில் சிறார்கள் அல்-குர்ஆனை எவ்வாறு ஓதுவதென்று கற்றுக்கொள்வதற்காகவே அதிகமாக Òஅல்-குர்ஆன் மத்ரஸாÓ க்களுக்குச் செல்வார்கள். ஆனால் அதே வயதுடைய சிறார்களில் அதிகமானவர்களை நாம் அங்கே அல்-குர்ஆனை மனனம் செய்வதற்காகவேண்டி பள்ளிக்கூடம் செல்வதைக் காணலாம்.

கே: சுமார் எத்தனை வயதில் புனித அல்-குர்ஆனின் முப்பது ஜுஸ்உகளையும் மனனமிடலாம்.

ப: அநேகமாக சிறார்கள் அவர்களது பத்து, அல்லது பன்னிரண்டு வயதில் அல்-குர்ஆனை முழுமையாக மனனமிட்டுவிடுவார்கள். இங்கே நான் வாசகர்களுடன் ஒரு முக்கியமான தரவினைப் பகிர ஆசைப்படுகிறேன்.



அதாவது சவூதி அரேபியாவின் தற்போதைய ஆட்சியாளர், இரு புனிதஸ்தலங்களின் சேவகர் மன்னர் சல்மான் அவர்கள் தனது பத்தாவது வயதினை எட்டியவேளையில் அல்-குர்ஆனை முழுவதுமாக மனனமிட்டவர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். அவர் அல்-குர்ஆனை தனது சிறுவயதில் பத்து வயதையும் தாண்டுமுன் மிக விரைவாக முழுவதுமாக மனனமிட்டதற்காக வேண்டி அவரின் தந்தை மன்னர் அப்துல் அஸீஸ் அவர்கள் அரச பிரமுகர்களை அழைத்து 1945 ஜூலை 22 (ஹி 1364-8-12) ஞாயிறன்று ஒரு விஷேட வைபவத்தினையே ஏற்பாடு செய்தார் என 1945-8-3 ஆம் திகதிய Òஉம்முல் குராÓ நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது இங்கே குறிப்பிட்டுக் கூறவேண்டிய ஒரு அம்சமாகும். இதேபோன்று அல்-குர்ஆனை முழுவதுமாக மனனமிட்டுள்ள சிறார்களை சவூதியில் சர்வசாதாரணமாகக் காணலாம்.

கே: கலாநிதி அவர்களே! எமது நேர்காணலின் முக்கிய கேள்விக்கு வருவோம். இம்மாத நடுப்பகுதியில் மக்கமா நகரில் நடைபெற்ற சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டி சம்பந்தமான தரவுகளைக் கூறமுடியுமா? இப்போட்டி எப்போது ஆரம்பமானது? எத்தனை போட்டியாளர்கள் பங்குபற்றியுள்ளனர்? அதன் நோக்கம் என்ன?

ப: ஆம்! Òஅல்-குர்ஆன் மனனம், அதன் விளக்கம் மற்றும் அதனை ஓதுதல் என்பவற்றுக்கான மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேசப் போட்டிÓ என்பதே இப்போட்டியின் உத்தியோகபூர்வ மகுடமாகும். இது 1979 (ஹி 1399) ஆம் வருடம் தொடக்கம் நிகழ்த்தப்பட்டு வருகின்றது. இதுவரை இப்போட்டிகளில் 6616 போட்டியாளர்கள் உலகில் நாளா பாகங்களில் இருந்தும் கலந்து கொண்டுள்ளனர். வருடாவருடம் புனித மக்கமா நகரில் புனித மஸ்ஜிதுல் ஹராமில் நடைபெறும் இப்போட்டியானது 43 ஆவது தடவையாக இம்மாத நடுப்பகுதியில் மிக வெற்றிகரமாக நடந்தேறியது.

இப்போட்டியின் நோக்கங்களாக நன்கு நோக்கங்கள் இம்முறை பிரகடனப்படுத்தப்பட்டன:

அவையாவன:

1- அல்-குர்ஆனை ஓதுவது, மனனமிடுவது, விளங்குவது, கிரகிப்பது என்பவற்றில் முஸ்லிம் சிறார்களுக்கு இருக்கும் ஆர்வத்தினைத் தூண்டுவது.

2- சர்வதேச மட்டத்தில் அல்-குர்ஆனை மனனமிட்ட ஹாபிழ்களுக்கிடையேயான போட்டிமனப்பான்மைக்கு கண்ணியமிக்க வலுவூட்டலை வழங்குவது.

3- வளர்ந்துவரும் சந்ததிகளை அல்-குர்ஆனுடன் தொடர்புபடுத்துவது.

4- அல்-குர்ஆனுக்கும் அதனைக் கற்பிப்பதற்கும் சவூதி அரேபியா வழங்கும் கரிசனையினை உறுதிசெய்வது.

கே: இப்போட்டி எத்தனை பிரிவுகளைக் கொண்டது?

பரிசில்களின் தொகை பற்றிய விபரங்கள் உண்டா?



ப: ஆம்! இப்போட்டி ஐந்து பிரிவுகளைக் கொண்டது. அதில் முதலாம் பிரிவு சற்று கடினமானதாகும். அதாவது, அல்-குர்ஆனை முழுவதுமாக தஜ்வீத் முறைப்படி மனனமாக ஒப்புவிப்பதுடன் அதனை ஓதும் ஏழு முறைக் கிறாஅத்துகளையும் விளக்கத்துடன் ஒப்புவிப்பது.

இரண்டாம் பிரிவு: அல்-குர்ஆனை முழுவதுமாக தஜ்வீத் முறைப்படி மனனமாக ஒப்புவிப்பதுடன் அதன் தப்ஸீர் விளக்கங்களையும் தெரிந்திருப்பது.

மூன்று: அல்-குர்ஆனை முழுவதுமாக தஜ்வீத் முறைப்படி மனனமாக ஒப்புவிப்பது. நான்கு: அல்-குர்ஆனின் பதினைந்து ஜுஸ்உகளை தொடராக தஜ்வீத் முறைப்படி மனனமாக ஒப்புவிப்பது. ஐந்து: அல்-குர்ஆனின் ஐந்து ஜுஸ்உகளை தொடராக தஜ்வீத் முறைப்படி மனனமாக ஒப்புவிப்பது. இக்கடைசிப் பிரிவு (OIC) அங்கம் வகிக்காத நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்களுக்குரியதாகும்.

பரிசில்களைப் பொறுத்தவரையில் உண்மையில் அவை வியக்கத்தக்க தொகையினை எட்டியதை எவராலும் மறுக்க முடியாது. முதலாம் பிரிவின் முதல் பரிசாக ஐந்து இலட்சம் சவூதி ரியல்கள் வழங்கப்பட்டன. அதாவது இலங்கை ரூபாயில் சுமார் 42.5 மில்லயன் ஆகும். அதேபோன்று இரண்டாம் இடம் 4.5 இலட்சம், மூன்றாம் இடம் நாலு இலட்சம் என அந்த பரிசில்களின் பட்டியல் தொடர்கின்றது. முழுவதுமாக வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்கள் மாத்திரம் 4 நான்கு மில்லியன் சவூதி ரியால்களை எட்டியது. அதாவது இலங்கை ரூபாயில் சுமார் 340 மில்லயன் (34 கோடிகள்) ஆகும்.

கே: இம்முறை எந்தெந்த நாட்டு மாணவர்கள் வெற்றிவாகை சூடினர்?


ப: இம்முறை, முறையே சவூதி அரேபியா, வங்காளதேசம், சோமாலியா, லிபியா ஆகிய நாடுகள் தலா இரண்டு பரிசில்களை வென்றுள்ளன.

மேலும் அல்ஜீரியா, தஷாத், பஹ்ரைன், சிறியா, சுவீடன், இந்தோனேஷியா, செனகல், உகண்டா, ஈரேயூனியன் தீவு, இந்தியா, நெதர்லாந்து, பொஸ்னியா, வட மக்கதோனியா ஆகிய நாட்டு மாணவர்களும் முதலிடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். இம்முறை இப்போட்டியில் மூன்றாம் பிரிவில் இலங்கை மல்வானையைச் சேர்ந்த ஹாபிழ் M.S.M ஸாஜித் கலந்துகொண்டார்.

கே: புனித அல்-குர்ஆனுக்கு சவூதி அரேபியா வழங்கும் வேறு சேவைகள் எவை?

ப: சவூதி அரேபிய அரசதுறையினர் தொடக்கம் சாதாரண மக்கள் வரை அல்-குர்ஆனுடன் வலுவான தொடர்பினைப் பேணுபவர்கள் என்பதனாலும் உலக முஸ்லிம் நாடுகளுக்கு மத்தியில் ஒரு தலையாய நாடாக சவூதி திகழுவதனாலும் சவூதியின் அல்-குர்ஆனுக்கான சேவைகள் பலதரப்பட்ட வடிவங்களில் மேற்கொள்ளப்படுவதை நாம் உணரலாம்.

அவற்றில் மிக முக்கிய சேவையாக; ‘அல்-குர்ஆன் பிரதிகளை அச்சிடுவதற்கான மன்னர் பஹத் அச்சகம்’ திகழ்கின்றது. உலகிலேயே மிகவும் பிரமாண்டமான அச்சகங்களில் ஒன்றாகத் திகழும் இதனை ஹஜ் உம்ரா யாத்திரைக்குச் செல்லும் அனைவரும் கண்டுகளிக்கலாம். அதேபோன்று நான் கல்விகற்ற மதீனா இஸ்லாமியப் பல்கலையில் அல்-குர்ஆன் சம்பந்தப்பட்ட கற்கைகளுக்காக வேண்டி ‘அல்-குர்ஆன் பீடம்’ என்று ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அதேபோன்று சவூதியில் இன்னும் பல பல்கலைக்கழகங்களில் அல்-குர்ஆன் சம்பந்தப்பட்ட ஆய்வுகளுக்காக வேண்டி ஆய்வு மையங்கள் செயற்படுவதைக் காணலாம். அதேபோன்று உலகளாவிய ரீதியில் அல்-குர்ஆனை மனனமிடுவது அது சம்பந்தமான ஆய்வுகளுக்கு சவூதி தொடர்ந்தும் அனுசரணை வழங்கிவருவதும் யாவரும் அறிந்ததே.

கே: சென்ற ஜூலை மாதமும் இலங்கையிலும் ஒரு தேசிய ரீதியிலான அல்-குர்ஆன் மனனப் போட்டி நிகழ்ந்தது அல்லவா?


ப: ஆம்! சென்ற ஜூலை மாதம் தேசிய அல்-குர்ஆன் மனனப் போட்டியொன்று சவூதி அரேபியாவின் பூரண அனுசரணையுடன் இலங்கை முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதரகத்துடன் இணைந்து மேற்கொண்டது. அதில் முதல் பரிசாக இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக சுமார் எட்டு இலட்சத்துக்கும் அதிகமான பணப்பரிசு வழங்கப்பட்டது.

ஆக புனித அல்-குர்ஆனுக்கான சேவையினை செவ்வனே மேற்கொள்ளும் இரு புனிதஸ்தலங்களின் சேவகர் மன்னர் சல்மான், இளவரசர் முஹம்மத் பின் சல்மான் மற்றும் சவூதி அரேபியப் பொறுப்புதாரிகளுக்கு என்றும் உலக இஸ்லாமிய சமுதாயத்தின் நன்றி உரித்தாகும்.

குறிப்பாக நாம் எமது நன்றிகளை சவூதியின் அரச துறைக்கும் உலமாக்களும் தெரிவிப்பதோடு குறிப்பாக சவூதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவர் மற்றும் தூதரக அதிகாரிகள் அனைவரையும் நன்றியுடன் ஞாபகப்படுத்தக் கடமைப்பட்டுள்ளோம். அதேபோன்று குறிப்பாக இத்தரவுகளை வாசக நெஞ்சங்களோடு பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்த தினகரன் நாளிதழுக்கும் விஷேட நன்றிகள்.

நன்றி...
தினகரன்

Post a Comment

0 Comments