Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

வேறுபாடுகளை வேரறுத்த இஸ்லாம்....!


இஸ்லாம் என்றால் அது சாந்தி, சமாதானம், சகோதரத்துவம் என்றும் உயர்ந்த கோட்பாடுகளைக் கொண்ட இறைவழிகாட்டலாகும். இத்தகைய உயர்ந்த கோட்பாடுகளை வெறும் போதனைகளாக மட்டும் கொண்ட மார்க்கமாக இல்லாமல் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சமூக அமைப்பையும் உருவாக்கி செயற்படுத்தி எழுச்சியை ஏற்படுத்திய மார்க்கமாகும்.

இன, நிற, மொழி, வர்க்க, சாதி வேறுபாடுகளை ஒழித்து சமத்துவத்தை உலகில் ஏற்படுத்திய மார்க்கம் இது. இஸ்லாத்தில் அல்லாஹ்வின் கட்டளைப்படியும், நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையைப் பின்பற்றியும் நடப்பவரே உயர்ந்தவராகவும், கண்ணியமுள்ளவராகவும் கணிக்கப்படுவார். இறை கட்டளைக்கும் நபி வழிக்கும் மாற்றமாக நடப்பவர் கண்ணியம் இழந்தவராவார். இதைத் தவிர வேறுபாடு எதனையும் இஸ்லாம் அறிமுகப்படுத்தவில்லை.

அல்லாஹ் கூறுகிறான், ‘மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும், பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்கள் தான். திண்ணமாக அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாகவும், தெரிந்தவனாகவும் இருக்கிறான்’.

(அல்குர்ஆன் 49:13)

இதன் காரணமாகத்தான் இஸ்லாத்தில் இன, நிற, மொழி வர்க்க வேறுபாடுகள் எதுவுமே பாராட்டப்படுவதில்லை. இக்குறுகிய வட்டங்களில் மனித சமுதாயத்தில் பிரிவுகளை ஏற்படுத்தும் தீய செயலைத் தூண்டுவதுமில்லை.

அறிவியல், நாகரிகம் என்பவற்றில் முதிர்ச்சியடைந்துள்ளதாகக் கூறப்படும் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் கூட அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் இன்றும் கூட வேறுபாடுகள் காணப்படுகிறது. கடந்த இரு நூற்றாண்டுகளாக நிறவேற்றுமை பாராட்டப்படுவது சரியே என்று அமெரிக்க நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கி வந்துள்ளன. 1948 டிசம்பர் 10ஆம் திகதி தான் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம் ஒன்றை நிறைவேற்றியது. அப்பிரகடனத்தின் உறுப்புரை – 2 ல் நிறவேற்றுமை பாராட்டப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இத்தகைய பிரகடனம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் கூட அறிவியலின் சிகரத்தைத் தொட்டுவிட்டதாகக் கூறிக் கொள்ளும் மேற்கு நாடுகளில் நிறவேற்றுமையை ஒழிக்க முடியவில்லை. பல்கலைக்கழகங்களில் கூட நிறவெறி காரணமாக நீக்ரோ மாணவர்கள் அடக்குமுறைகளுக்கும், எண்ணற்ற கொடுமைகளுக்கும் இலக்காக்கப்பட்டு வந்தனர். இவற்றின் விளைவாக 1954 மே மாதம் 17ஆம் திகதி பல்கலைக்கழகங்களில் நிறவேற்றுமை கடைப்பிடிக்கப்படுவது மனித சமுதாயக் கோட்பாடுகளுக்கு முரண்பட்டதும் நியாயமற்றதும் ஆகும்.’ என அமெரிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியது.

ஆனால் இஸ்லாம் இந்த நிறவேற்றுமைக்குச் சாவுமணியடித்து பதினைந்து நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. முஸ்லிம்களைப் பொறுத்தவரை கறுப்பரோ, வெள்ளையரோ அல்லது பணக்காரனோ ஏழையோ எத்தகைய வேறுபாடுகளுமின்றி ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது ‘ஸலாம்’ கூறி கரம் கொடுத்து, ஆரத்தழுவிக் கொள்வது சர்வ சாதாரணமே. இது 1400 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட மகத்தான இஸ்லாமியப் புரட்சியின் விளைவாகும். இத்தகைய மனமாற்றத்தை இஸ்லாம் மக்களிடம் கொண்டு வருவதற்குத் துணையாக இருந்தது அதன் தெய்வீகக் கோட்பாடுகளாகும்.

முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜின் போது ஆற்றிய உரையில் சமத்துவம் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.

‘மக்களே! உங்கள் இறைவன் ஒருவனே… உங்கள் ஆதித் தந்தையும் ஒருவரே! நீங்கள் அனைவரும் ஆதமின் வழித்தோன்றல்கள் ஆவீர்கள். ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டவர். அறிந்து கொள்ளுங்கள் ஓர் அரபியருக்கு அரபியல்லாதவர் மீதோ… அரபியரல்லாதவருக்கு ஓர் அரபியர் மீதோ… சிவப்பு நிறத்தவருக்கு கறுப்பு நிறத்தவர் மீதோ… கறுப்பு நிறத்தவருக்கு சிவப்பு நிறத்தவர் மீதோ இறையச்சத்தைக் கொண்டல்லாது வேறெந்த வழியிலும் மேன்மையோ சிறப்போ கிடையாது. நிச்சயமாக உங்களில் மேன்மையானவர் யாரெனில் அல்லாஹ்வின் மீது அதிக அச்சம் உடையவராவார்’.

முஹம்மது (ஸல்) அவர்களது இறுதியுரையானது, மனித உரிமைப் பிரகடனம் என்று கூறும் அளவுக்கு அதன் கருத்துக்கள் மனித உரிமைகளுக்கு வலுவூட்டுவதாக அமைந்துள்ளன. அந்த உரையானது முஸ்லிம்களது எழுச்சிக்கும், வெற்றிக்கும் வழி கோலுவதாக அமைந்தது. முஸ்லிம்களது வாழ்க்கையில் செயல் வடிவம் பெற்று இஸ்லாத்தின் வேகமான வளர்ச்சிக்கும் வித்திட்டது.

இஸ்லாத்தை தழுவிய பிலால் (ரலி) அவர்கள் ஒரு கறுப்பு நிற நீக்ரோ அடிமையாவார். ஆனால் அவர் எப்போது இஸ்லாத்தைத் தழுவினாரோ அப்பொழுதே அவர் அரேபியாவில் உயர்குலமாகக் கருதப்படும் குறைஷிக் குலத்தவரின் அந்தஸ்த்துக்கு உயர்ந்துவிட்டார்.

தொழுகைக்கு அழைப்புவிடும் முதலாமவராக அவர் நியமிக்கப்பட்டு கண்ணியப்படுத்தப்பட்டார். மேலும் முஹம்மத் (ஸல்) அவர்களின் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டார். இஸ்லாத்தின் இரண்டாவது கலீபாவான உமர் (ரலி) அவர்கள் கூட பிலால் (ரலி) அவர்களை ‘யா செய்யதீ’ என்னுடைய தலைவரே’ என்று அன்புடன் அழைக்கும் அளவுக்கு இஸ்லாம் அவரை உயர்த்திவிட்டது.

இத்தகைய வேற்றுமைகளை வேரறுத்த இஸ்லாத்தின் கொள்கைகளால் கவரப்பட்ட இந்தியாவின் ‘கவிக்குயில்’ எனப் போற்றப்பட்ட சரோஜினி நாயுடு அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள். ‘மனிதத்துவத்தைப் போதித்து நடைமுறைப்படுத்திய முதல் மார்க்கம் இஸ்லாம் தான். பள்ளிவாசலின் மினாராவிலிருந்து தொழுகைக்காக விடுக்கப்படும் அழைப்பு நாளெல்லாம் ஐவேளையும் வணங்குவதற்காக முஸ்லிம்களை ஒன்று திரட்டுகிறது. அப்பொழுது நாட்டுப்புறத்து விவசாயியையும் நாடாளும் மன்னனும் முழந்தாளிலிருந்து ‘அல்லாஹ் ஒருவனே.. அனைத்துக்கும் பெரியவன்’ என்று பிரகடனம் செய்கின்றனர். இங்கு உண்மையான ஜனநாயகம் உயிர் பெற்றுத் திகழ்வதை பார்க்கிறேன். உண்மையான சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்தும் இஸ்லாமும் அதன் போதனைகள் என்னைக் கவர்ந்துவிட்டன.

இஸ்லாமானது இன, மத, மொழி, நிற, வர்க்க வேறுபாடுகளைக் களைந்து பாவகரமான தீமைகளிலிருந்து பாதுகாப்பதில் வெற்றி கொண்டுள்ளது. இவ்வுயரிய சமத்துவ உணர்வுடைய மக்களை உருவாக்கியமைக்கு இறை கட்டளையும், இறை தூதரின் உயரிய போதனைகளும், வழிமுறைகளுமே காரணமாகும்.

Post a Comment

0 Comments